மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மனித உரிமைக் காப்பாளர் இரா.பாபு ஆகியோர் இன்று (04.09.2017) கடலூரில் வெளியிட்ட அறிக்கை:
கடலூர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவரும் கண்ணகி முருகேசன் கொலை வழக்கின் சாட்சிகளை மிரட்டுவதாக நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்ய சி.பி.ஐ. உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
கடந்த 2003ம் ஆண்டு கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சார்ந்த முருகேசன் வேறு சமூகத்தைச் சேர்ந்த கண்ணகி என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். பின்னர் இருவரும் ஊரைவிட்டுச் சென்று வெவ்வேறு ஊர்களில் தங்கியுள்ளனர்.
சாதிக் கடந்த இத்திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கண்ணகியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இருவரையும் கண்டுப்பிடித்து கொண்டு வந்து, புதுக்கூரைப்பேட்டை முந்திரிதோப்பில் இருவருக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிடுகின்றனர். பின்னர் இருவரின் உடல்களையும் எரித்துவிடுகின்றனர்.
2004ம் ஆண்டு முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. சி.பி.ஐ. புலன்விசாரணை செய்து கண்ணகியின் தந்தை துரைசாமி, அண்ணன் மருதுபாண்டியன் உள்ளிட்ட 15 பேர் மீது குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்தது.
தற்போது இவ்வழக்கு விசாரணை கடலூர் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த மாதம் 28ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இவ்வழக்கில் இதுவரையில் 8 சாட்சிகள் சாட்சியம் அளித்துள்ளனர். இதில் 2 சாட்சிகள் பிறழ்சாட்சிகளாக ஆகிவிட்டனர். இதனைத் தொடர்ந்து சி.பி.ஐ. தரப்பு அரசு வழக்கறிஞர் சாட்சிகளைக் குற்றவாளிகள் மிரட்டுவதாகவும், அதற்கான செல்போன் உரையாடல் அடங்கிய குறுந்தகடு ஒன்றையும் ஆதாரமாக அளித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கண்ணகி முருகேசன் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தை நேரில் கண்ட முக்கிய சாட்சியான புதுக்கூரைப்பேட்டை அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த செல்வராஜ் கடந்த மாதம் 31ம் தேதியன்று தற்கொலை செய்துகொண்டு இறந்துப் போனார். அவரது மனைவி குற்றவாளிகள் சாட்சியம் அளிக்கக் கூடாது என்று மிரட்டியதால்தான் தற்கொலை செய்துக் கொண்டார் என்று காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இப்புகார் மீது வழக்குப் பதிவு செய்து விருத்தாசலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குற்றவாளிகள் சமூக ரீதியாக செல்வாக்கு உடையவர்கள் என்பதோடு, பணம் பலம் படைத்தவர்கள் ஆவர். குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ள சாட்சிகளை மிரட்டி வருகின்றனர்.
இந்நிலையில், குற்றவாளிகள் வெளியே இருந்தால் வழக்கு விசாரணை பாதிக்கப்படுவதோடு முறையாக நடைபெறாது. சாட்சிகள் சுதந்திரமாக சாட்சியம் அளிக்க முன்வர மாட்டார்கள். தற்போது சாட்சிகளின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, இவ்வழக்கில் உள்ள குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்ய சி.பி.ஐ. சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிந்து, வழக்கு விசாரணை நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
Leave a Reply