கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கோ.அ.ஜெகன்நாதன் மீது பொய் வழக்கு, கைது, சிறை – கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 29.09.2009 அன்று விடுத்துள்ள அறிக்கை:

கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கோ.அ.ஜெகன்நாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஆட்சியாளர்களின் தூண்டுதலின் பேரில் பொய் வழக்குப் போட்டு, கைது செய்து சிறையில் அடைத்துள்ள புதுச்சேரி காவல்துறையை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

கரிக்கலாம்பாக்கத்தில் நேற்றைய தினம் இந்தரஜித் என்பவர் கொத்தனார் வேலைப் பார்க்கும் சண்முகம் எனபவரை கடுமையாக தாக்கி அவருக்கு தலையில் பலத்த காயம்பட்டு மூன்று தையல் போடப்பட்டுள்ளன. இச்சம்பவம் நடந்தவுடன் மதியம் 2 மணியளவில் பாதிக்கப்பட்டவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், இரவு 9.30 மணி வரையில் போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை. குற்றவாளியை கைது செய்ய எவ்வித நடவடிக்கையும்  எடுக்கவில்லை.

போலீசாரின் இந்த மெத்தனப் போக்கால் மாலை 5.30 மணியளவில் மேற்சொன்ன குற்றாவாளி இந்திரஜித் மீண்டும் கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குச் சென்று, அங்கு இருந்தவர்களை தாக்கியுள்ளார். பின்னர், தேவையில்லாமல் பொதுமக்களுக்குத் தொல்லைக் கொடுக்கும் வகையில் சாலை மறியல் நடத்தி பேரூந்துகளின் கண்ணாடிகளை உடைத்துள்ளார். இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், இச்சம்பவங்களோடு எவ்வகையிலும் தொடர்பு இல்லாத ஜெகன்நாதன் மற்றும் அவரது தம்பி, மகன் உள்ளிட்டோர் மீது போலீசார் ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவுகளில் வழக்குப் போட்டுள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் கேட்டு சமரசம் இல்லாமல் போராடி வருவதால் ஆட்சியாளர்கள் தூண்டுதலின் பேரில் அவர்மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதற்கு கரிக்கலாம்பாக்கம் போலீசார் மற்றும் வில்லியனூர் இன்ஸ்பெக்டர் பைரவசாமி ஆகியோர் தான் காரணம். மதியம் நடந்த சம்பவம் பற்றி இரவு வரை இன்ஸ்பெக்டர் பைரவசாமி தகவல் தெரியாமல் இருந்துள்ளார். போலீசார் உடனடியாக செயல்பட்டு இருந்தால் இந்த சம்பவங்களை தடுத்திருக்க முடியும்.

அரசின் இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளால் சமூக ஆர்வலர்களின் நடவடிக்கைகளை தடுத்துவிட முடியாது என்பதை அரசுக்குச் சுட்டிக் காட்டுகிறோம். உடனடியாக ஜெகந்நாதன் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கைத் திரும்ப பெற்று, அவரை விடுதலை செய்ய வேண்டும்.

இதுகுறித்து, உரிய விசாரணைக்கு உத்தரவிட கோரி துணைநிலை ஆளுநர், தலைமைச் செயலர், காவல்துறை இயக்குநர் (டி.ஜி.பி.) மற்றும் சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி. அகியோருக்கு விரிவான மனு அளித்துள்ளோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*