பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்
நாள் : 26.02.2017
அனுப்புதல்
ராமாயி (45/2017)
க/பெ, தங்கராசு
8-லேபர் காலனி.
பள்ளிக்கரணை
காஞ்சிபுரம் மாவட்டம், அ.கு,எண்-600100.
பெறுதல் :
உயர்திரு, காவல் உதவி ஆய்வாளர்,
பள்ளிக்கரணை காவல் நிலையம்,
பள்ளிக்கரணை,
காஞ்சிபுரம் மாவட்டம்,
ஐயா,
பொருள் : 23-02-2016 அன்று எனது வீட்டை தீ வைத்துக் கொளுத்திய அந்த இடத்தின் உரிமையாளர் செந்தில் என்பவருடைய மனைவி மீது எஸ்.சி,/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக் கோருதல் – தொடர்பாக.
வணக்கம்,
என் பூர்வீகம் திருக்கோவிலூர் அருகே உள்ள தணிக்கலாம்பட்டு கிராமம் ஆகும். நான் இருளர் இனத்தைச் சேர்ந்தவள். செஞ்சி வட்டம். கெங்கவரத்தைச் சேர்ந்த தங்கராசு என்பவரைத் திருமணம் செய்து கொண்டு பிழைப்புக்காக சுமார் 25 இண்டுகளுக்கு முன்பு மேற்படி முகவரியில் மேற்படி இடத்திற்கு காவலுக்காகச் சென்று அந்த இடத்தில் ஓரு குடிசைப் போட்டு குடியிருந்து வருகிறோம். மாதம் ரூ, 300/-வீதம் மூன்று மாதம் சம்பளம் கொடுத்தார்கள். பின்பு அவர்கள் வெளிநாடு போய்விட்டார்கள். வந்து உங்களுக்கு ஏதாவது செய்கிறோம் என்றார்கள். ஆனால் அதுபடி எதுவும் செய்யவில்லை.
(2) என்னுடைய கணவர் இறந்து 1 1/2 ஆண்டுகள் ஆகிறன்றது. நானும் என் மகள் சின்னத்தாயும் கூலி வேலை செய்து பிழைத்து வருகிறோம், சுமார் ஓரு ஆண்டுக்கு முன்பு மேற்படி உரிமையாளர் மனைவி என்னிடம் வந்து வீட்டைக்காலி பண்ணுங்க, நான் வேலி போட வேண்டும் என்றார்கள். அப்போதுதான் அவர்கள் என்னிடம் அவரது கணவரும் மேற்படி இடத்தின் உரிமையாளருமான மேற்படி செந்தில் இறந்து விட்டதாக என்னிடம் கூறினார்கள். அப்போது குடிசையைச் சுற்றி தண்ணீர் நின்றதால் என்னால் காலி பண்ண முடியவில்லை என்று நான் கூறியதோடு, எனக்கு காவல் காத்து வந்தமைக்காக உரிய கூலி கொடுங்கள் என்று கேட்டேன். அவர்களும் நான் பார்த்து ஏதாவது செய்கிறேன் என்று கூறி விட்டுச் சென்றார்கள்.
(3) சுமார் ஓரு மாதத்திற்கு முன்பு. மேற்படி லேபர் காலனி 1வது தெருவில் ரியல் எஸ்டேட் வைத்து நடத்திவரும் புரோக்கர் சுப்புராஜ் வயது சுமார் 55 என்னிடம் வந்து. மேற்படி என்னுடைய குடிசையைக் காலி பண்ண வேண்டும் என்றும் மேற்படி இடத்தை அவர் கிரயம் வாங்கிவிட்டதாகவும் என்னிடம் கூறினார். நான் அதற்கு வீட்டு ஓனர் வந்து சொல்லட்டும் அப்போதுதான் நான் காலிபண்ணுவேன் என்று கூறினேன்.
(4) கடந்த திங்கட்கிழமை (20-02-2017) அன்று நானும் என்னுடன் வசித்துவரும் எனது இரண்டாவது மகள் சின்னத்தாய் (15). தேவயாணி (12) ஆகிய இருவரையும் கூட்டிக் கொண்டு செங்கல்பட்டு அருகில் ஈச்சங்கரணையில் உள்ள அவிக்னா கம்பெனிக்கு சித்தாள் வேலைக்காக என் உடன்பிறந்த அக்கா தெவசம்மா (50) மற்றும் அவரது கணவர் பச்சையப்பன் ஆகியவர்களோடு சென்றுவிட்டேன்.
(5) நேற்று சனிக்கிழமை (25.02.2017) என் வீட்டைப் பார்த்து வரச் சென்ற என் மகள் சின்னத்தாய் வீடு எரிந்து சாம்பலாகிக் கிடந்துள்ளதை பார்த்துள்ளார். ஊடனே அங்கிருந்து அவளுடைய செல்பேசி 7094874627-இல் இருந்து என்னுடைய அக்காள் கணவர் பச்சையப்பன் செல்பேசி 7299504162-க்கு மதியம் சுமார் 12.30க்கு தொடர்பு கொண்டு பேசினார். உடனே நானும் எனது அக்காள் மற்றும் அவருடைய கணவரோடு சம்பவ இடத்திற்குச் சென்றோம். என்னுடைய அண்ணன் சடையன் என்பவருடைய மகளும் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கப் பொறுப்பாளருமான சாந்தி க/பெ மோகன் என்பவரும் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டார்கள்.
(6) நான் அங்கு விசாரித்ததில் மேற்படி எங்கள் இடத்தின் உரிமையாளர் மனைவி கடந்த வியாழக்கிழமை மதியம் 2 மணியளவில் மேற்படி இடத்திற்கு மூன்று நபர்களுடன் வந்து என் குடிசையை தீக்குச்சி வைத்துப் பற்ற வைத்து எரித்துள்ளார்கள் என்பது தெரிய வந்தது. பக்கத்தில் குடியிருக்கும் உதயா, இந்திரா எங்கள் வீட்டிற்கு எதிரே வேலை செய்யும் பிற மாநிலத்தவர்கள் ஆகியோர் மேற்படி சம்பவத்தை பார்த்துள்ளார்கள். மேற்படி உதயா அவர்களிடம் நான் எழுதிக் கொடுத்திருந்த என்னுடைய செல்பேசி எண் தவறாக இருந்ததின் காரணமாக அவர்கள் உடனே தகவல் தெரிவிக்க முடியவில்லை என்று கூறினார்கள்.
எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது, எனவே நேற்று மாலை எங்கள் சங்கத்தின் பொறுப்பாளர் கல்யாணி அய்யா அவர்களைத் தொடர்பு கொண்டோம். நேற்று இரவே திண்டிவனத்தில் உள்ள சங்க அலுவலகத்திற்கு வந்துவிட்டோம். இன்று அவருடைய உதவியோடு இந்தப் புகாரினைத் தயாரித்தோம்.
ஐயா அவர்கள். மேற்படி என்னுடைய வீட்டை எரித்துள்ள மேற்படி இடத்தின் உரிமையாளர் செந்தில் அவர்களுடைய மனைவி உள்ளிட்டோர் மீது எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 2015ன் கீழ் நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பும் நீதியும் கிடைக்க உதவுமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்.
ஒப்பம்.
இணைப்பு : குடும்ப அட்டை நகல்,.
நகல் :
1. உள்துறை செயலாளர். சென்னை-9,
2. டி,ஜி,பி, சென்னை-4,
3. எஸ்,பி, காஞ்சிபுரம் மாவட்டம்,
4. காவல் உதவி ஆணையர். மடிப்பாக்கம்,
5. மாவட்ட ஆட்சி தலைவர். காஞ்சிபுரம் மாவட்டம்.
Leave a Reply