இதை வெறும் செய்தியாக வாசித்துக் கடந்ததோடு மட்டுமின்றி சற்று விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கவும் வேண்டும். மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் எல்லாமும் கூட இது குறித்துப் பேசி இருக்க வேண்டும்.
எனக்குத் தெரிந்து The Hindu (Feb 21, 2017) மட்டுமே, மிகவும் பாராட்டத்தக்க வகையில், இது குறித்து ஒரு அருமையான தலையங்கம் தீட்டி இருந்தது. சமூக ஊடகங்களிலும் யாரும் இதைப் பெரிதாகக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. முஸ்லிம் வார இதழ்களில் மட்டும் இது பற்றி எழுதக் கூடும்.
2005 அக் 29ல் நடைபெற்ற அந்த குண்டு வெடிப்பு டெல்லியைக் குலுக்கிய ஒன்று. 67 பேர்கள் கொல்லப்பட்டார்கள். 200 பேர் காயமடந்தனர்.
புலனாய்ந்த காவல்துறை முகமது ஹுசைன் ஃபஸ்லி, முகமது ரஃபிக் ஷா, தாரிக் அகமத் தர் என மூவரைக் கைது செய்து அவர்கள் மீது ‘சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்’ (UAPA) உட்பட, கடுமையான அனைத்துச் சட்டங்களின் கீழும் வழக்குத் தொடர்ந்து அவர்கள் வாழ்வை அழித்தது.
11 ஆண்டுகள் முடிந்து, மேலே குறிப்பிட மூவரில் முதல் இருவர் மீதான குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என இன்று அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மூன்றாவது நபர் தாரிக் அகமது தர் மட்டும் தண்டிக்கப் பட்டுள்ளார். அவரும் கூட அந்தக் குற்றச் செயலுக்காகத் தண்டிக்கப்பட வில்லை . ஒரு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தார் என்பதற்காக அவருக்கு அந்தத் தண்டனை. அவர்களுக்குக் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் ஏதோ நடவடிக்கையில் வேறு அவர். பங்கு பெற்றாராம். வேடிக்கை என்னவென்றால் எந்தக் குற்றத்திற்காக அவர் தண்டிக்கப்பட்டாரோ அதை புலனாய்வு செய்த போலீஸ்காரர்கள் அவர் மீது சுமத்தி இருக்கவில்லை. வழக்கை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ரீடேஷ் சிங்தான் தன் தீர்ப்பில் இந்தக் குற்றத்தக் கவனப்படுத்தித் தண்டித்துள்ளார். புலனாய்வுத் துறை சாட்டிய குற்றச்சாட்டு, அதாவது பொது இடத்தில் குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொன்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தர் விஷயத்திலும் நிரூபிக்கப்படவில்லை என்பது கவனிக்கத் தக்கது. ஆக அந்தக் குண்டு வெடிப்புக்காகக் குற்றம்சாட்டப்பட்ட மூன்று முஸ்லிம்களுமே இன்று அந்தக் குற்றத்திலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளனர். UAPA சட்டம் கொடூரமானது. தண்டனைகளும் வழக்கமான குற்றங்களைக் காட்டிலும் அதிகம். எனவே தீர்ப்பைத் தெளிவாக வாசித்தோமானால்தான் தர் மீதுள்ள குற்றச்சாட்டைப் புரிந்துகொள்ள முடியும்.
ஆக இரண்டு அப்பாவி முஸ்லிம் இளைஞர்களும் அவர்களது குடும்பங்களும் 11 ஆண்டுகளுக்கும் மேல் அனைத்துத் துயரங்களையும் சுமந்து, நானும் நீங்களும் புரிந்து கொள்ளவே முடியாத சோகங்களைச் சந்தித்து….. இன்று ஒரு மிகப் பெரிய கேள்விக்குறியுடன் எதிர்காலத்தை எதிர் கொண்டு நிற்கின்றனர்.
இந்தத் தீர்ப்பில் இரண்டு அம்சங்கள் நம் கவனத்துக்கு உரியவை. 1. பொதுவாகப் புலனாய்வுத்துறை சாட்டும் குற்றச்சாட்டைக் கீழ் நீதிமன்றங்கள் அப்படியே ஏற்று உச்சபட்சமான தண்டனை வழங்குவது வழக்கம், அப்படி இல்லாமல் இந்த வழக்கில் மிகவும் நேர்மையாக, எந்த விதமான அழுத்தங்களுக்கும் பணியாமல், கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ரீதேஷ் சிங் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார். அவரை நாம் மனதாரப் பாராட்டியாக வேண்டும்.
2. தான் சுமத்திய குற்றச்சாட்டை நிறுவுவதில் புலனாய்வுத்துறை மிக மோசமாகத் தோற்றுள்ளது (“miserably failed”) என மிகத் தெளிவாக புலனாய்வுத் துறையைத் தன் தீர்ப்பில் நீதிபதி ரீதேஷ் சிங் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத் தக்கது. இப்படியான கொடும் பயங்கரவாதத் தாக்குதல்களில் அவசரமாகக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் காட்டிக் கொள்ளும் நோக்கில் யாராவது இரண்டு மூன்று முஸ்லிம் இளைஞர்களைக் கைது செய்து வழக்கை முடித்து விடுவது என்பதன் மூலம் உண்மையான குற்றவாளிகள் மற்றும் அமைப்புகள் தப்பிக்க நேர்வது கவனத்துக்குரிய ஒன்று. மக்கா மசூதி, சம்ஜாதா எக்ஸ்பிரஸ், மலேகான் குண்டு வெடிப்பு, முதலான வழக்குகளில் ஒரு மிகப் பெரிய சதிக் கும்பல் தொடர்ந்து இப்படி கொடூரமான தாக்குதல்களை நடத்திக் கொண்டும், அதன் மூலம் சமூகத்தைப் பிளவு படுத்தும் தம் நோக்கத்தை நிறை வேற்றிக் கொண்டும் நீண்டகாலம் இருக்க நேர்ந்ததற்கு இத்தகைய அணுகல்முறையே காரணம். தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டு வெடிப்பும் இத்தகையதே.
3. முஸ்லிம்களைக் குற்றம் சாட்டுவது புலனாய்வுத் துறைகளுக்கு மிகவும் எளிதானதாகவும் வசதியான ஒன்றாகவும் உள்ளது. அவர்கள் மீதான குற்றங்களை நிறுவுவதற்கு அவர்கள் அதிகச் சிரமம் படத் தேவையில்லை. அவர்கள் முஸ்லிம்கள் என்பதொன்றே அதற்கான நிரூபணமாக இங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இங்கு வகுப்புவாதிகளும் காவல்துறையும் ஒருவருக்கொருவர் உதவி செய்பவர்களாக ஆகிவிடுகின்றனர்.
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””’
அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் வாழ்க்கை இப்படித் தொடர்ந்து அழிந்து கொண்டிருப்பது அந்தக் குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் இழப்பு என்பதோடு முடிந்து விடுவதல்ல. அதன் மூலம் ஒட்டு மொத்தமான நாட்டு நலன், சமுக ஒற்றுமை எல்லாமே பாதிக்கப்படுகிறது என்கிற புரிதல் இங்கு யாருக்குமே இல்லாமல் போனது கவலைக்குரிய ஒன்று.
இப்படிக் கைது செய்யப்பட்டுப் பல ஆண்டுகள் சிறையில் வாடிதங்களின் நிகழ் காலத்தை மட்டுமல்ல எதிர்காலத்தையும் இழந்த சுமார் 22 முஸ்லிம் இளைஞர்கள் பற்றிய விவரங்களைப் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞர் நூலாக வடித்துள்ளார். ஒரு நான்காண்டுகளுக்கு முன் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் இந்தப் பட்டியலை பிரகாஷ் காரட் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்துக் கொடுத்ததோடு சில முக்கிய கோரிக்கைகளையும் முன்வைத்தனர். இப்படிக் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்படுபவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். என்பதும் பொய்க் குற்றம் சாட்டியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதும் அந்தக் கோரிக்கைகளில் அடக்கம்.
இரண்டாண்டுகளுக்கு முன் டெல்லியில் NCHRO அமைப்பு ஒரு மாநாடு நடத்தி இது குறித்த கவன ஈர்ப்பைச் செய்தது. அப்போது சுமார் 30 க்கும் மேற்பட்ட அப்பாவிகள் தாம் இப்படித் தண்டிக்கப்பட்ட கொடுமையை அங்கு நேரில் வந்து வழக்கு விவரங்களுடன் முறையிட்டதை எனது ‘முஸ்லிம்கள்’ நூலில் பதிவு செய்துள்ளேன்.
எனினும் பெரிய அளவில் இதுவிவாதத்திற்குள்ளாகாதது வேதனை.
Leave a Reply