மயிலாடுதுறை கோட்டம் திருநாள்கொண்ட சேரியில் பொதுச் சாலை வழியே தலித் பிணங்களை எடுத்துச் செல்ல எதிர்ப்பு – அறிக்கை

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் சுமார் 5 கிமீ தொலைவில் உள்ள வழுவூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த திருநாள்கொண்ட சேரி எனும் சிற்றூரில் கடந்த இரு மாதங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் அடுத்தடுத்து இறந்தபோது அவர்களின் உடல்களை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்வதில் பிரச்சினை ஏற்பட்டு தமிழகம் அளவில் கவனத்தை ஈர்த்துள்ள ஒரு நிகழ்வாக இன்று இது ஆகியுள்ளது. இது குறித்த உண்மைகளை அறிய கீழ்க்கண்டவாறு ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.

உறுப்பினர்கள்

1 பேரா. அ. மார்க்ஸ், தலைவர், மனித உரிமைகளுக்கான தேசியக் கூட்டமைப்பு (National Confederation of Human Rights Organisationas – NCHRO), சென்னை,

2. கோ. சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (Federation for Peoples Rights – FPR), புதுச்சேரி,

3. இரா. முருகப்பன், (இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் -SASY), திண்டிவனம்,

4.புரட்சிமணி, தலைவர், நீலப்புலிகள் இயக்கம், கும்பகோணம்,

5. இரா. பாபு, மனித உரிமை ஆர்வலர், கடலூர்,

6. சு.அப்துல் ரஹ்மான், மாவட்டச் செயலாளர், வெல்ஃபேர் பார்டி ஆஃப் இன்டியா, கும்பகோணம்,

7. எஸ்.வீரச்செல்வன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ), மயிலாடுதுறை,

8. இல.திருமேனி, வழக்குரைஞர், விடுதலைச் சிறுத்தைகள், கடலூர்,

9. ஏ.கங்காதரன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மயிலாடுதுறை,

10. ராஜவேலு, பகுஜன் சமாஜ் கட்சி, கும்பகோணம்,

11. முகமது யூனுஸ், ஜமாதே இஸ்லாமி, கும்பகோணம்,

12. பி.ப.பாலு, நீலப்புலிகள் இயக்கம், கும்பகோணம்.

13. சுந்தர்ராஜன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி(மா-லெ), மயிலாடுதுறை

14.அ.சஃபிக்குர் ரஹ்மான், மாவட்டத் தலைவர், வெல்ஃபேர் பார்டிஆஃப் இன்டியா, நாச்சியார்கோவில்

இக்குழுவினர் ஜனவரி 19, 20, 21 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை, திருநாள்கொண்ட சேரி, வழுவூர் முதலான பகுதிகளுக்குச் சென்று இருதரப்பு மக்களையும் சந்தித்தனர். வழுவூர் பஞ்சாயத்துத் தலைவர் செந்தில்நாதனிடம் தொலைபேசியில் விரிவாகப் பேசினர். நாகை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அபிநவ்குமார், சீர்காழி துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேசன், பெரம்பூர் ஆய்வாளர் குலோத்துங்கன் முதலியோருடன் தொலைபேசியில் பேசினர். இந்தப் பிரச்சினையை நான்கு மாதங்களாகக் கையாண்டு வரும் கோட்டாட்சியர் (RDO) கிருஷ்ணம்மாள் அவர்களை நேரில் சந்தித்து மிக விரிவாகப் பேசினர்.

சம்பவங்களும் பின்னணியும்

வழுவூர் பஞ்சாயத்தில் ஒரு பகுதியாக உள்ள திருநாள்கொண்ட சேரியில் மொத்தம் சுமார் 500 குடும்பங்கள் உள்ளன. இவற்றில் தலித் குடும்பங்கள் சுமார் 150 வரை உள்ளன. தலித் அல்லாதோரில் வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். தலித்கள் திருநாள்கொண்ட சேரி, வடக்குத் தெரு, மேலத் தெரு எனப் பிரிந்துள்ளனர். திருநாள் கொண்ட சேரியில் மட்டும் சுமார் 28 தலித் குடும்பங்கள் உள்ளன. தலித்களுக்குத் தனியாகவும், பிற பிற்படுத்தப்பட்ட சாதியினருக்குத் தனியாகவும் சுடுகாடுகள் உள்ளன. சுடுகாடுகள் தனியாக இருப்பது மட்டுமல்ல சுடுகாடு செல்லும் பாதைகளும் தனித்தனியாக உள்ளன. இன்னும் சரியாகச் சொல்வதானால் தலித்களுக்கான சுடுகாட்டுக்குச் செல்ல பாதையே இல்லை எனலாம். யாரேனும் இறந்து போனால் மேற்கே உள்ள வடக்குத் தெரு எனும் தலித் பகுதிவரை சுமார் ஒரு கி.மீ தூரம் வயல் வரப்புகள் மேல் உள்ள ஒற்றையடிப் பாதையில்தான் இறந்தவர்களை பாடையில் வைத்துத் தூக்கிச் செல்ல வேண்டும். மழைக்காலம் என்றால் மேலும் சிக்கல். இப்படி ஒரு கி.மீ கடந்தபின் வடக்குத்தெருவின் சுடுகாட்டுப்பாதை தொடங்குகிறது. சுமார் ஒன்றரை கி.மீ தொலைவில் அந்தப் பாதையும் முடிந்து தலித்களின் சுடுகாடு அமைந்துள்ள கடலாழி ஆற்றங்கறைக்கு மறுபடியும் சுமார் அரை கி.மீ தூரம் ஒற்றையடிப் பாதையில்தான் செல்ல வேண்டும்.

வடக்குத் தெருவரை உள்ள இந்த ஒரு கி.மீ வரப்புப் பாதையில் பிணங்களைத் தூக்கிச் செல்கிற கொடுமையைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி திருநாள்கொண்ட சேரியின் பொதுப் பாதை வழியே சுற்றிச் சென்று வடக்குத் தெருச் சாலையை அடைவதுதான். இதனால் பாதையின் தூரம் சுமார் ஒரு.கி.மீ அதிகமானாலும் கூட அதுதான் ஒரே சாத்தியமான வழி.

எனினும் தலித்கள் தம் வீடுகள் இருக்கும் இந்த வீதி வழியே பிணம் தூக்கிச் செல்வதற்குப் பிற சாதியினர் அனுமதிப்பதில்லை. இதுகாறும் தலித்களும் அதைச் சகித்து வந்துள்ளனர்.

அதேபோல ஊர் நடுவே நடுநாயகமாக வீரட்டேசுவரர் கோவில் உள்ளது. தலித்களின் பகுதிகளில் தனித்தனியே காளியம்மாள் மற்றும் மாரியம்மாள் கொவில்கள் உள்ளன. திருநாள்கொண்ட சேரிக் கிராமத்தைச் சுற்றிப் பிற்படுத்தப்பட்டோர் அதிக அளவில் வசிக்கும் பல கிராமங்களில் உள்ள இதுபோன்ற சிறு கோவில்களில் ஆண்டுதோறும் ஒரு வழக்கமுண்டு. வீரட்டேசுவரர் கோவில் குளத்தில் நீரெடுத்து வீரட்டேசுவரர் ஆலயத்தில் வைத்து வழிபட்டு அதைக் கரகமாகச் சுமந்து ஊர்வலமாகக் கொண்டு சென்று தம் ஆலயங்களில் அபிஷேகம் செய்வர். ஆனால் திருநாள்கொண்ட சேரியின் காளியம்மாள் கோவிலுக்கு இந்தக் கரக ஊர்வலம் அனுமதிக்கப்படுவதில்லை.
காலமாற்றம் தலித் மக்கள் மத்தியில் அரசியல் உணர்வையும் சமத்துவ வேட்கையையும் பெருக்கி வருகிறது. இதுபோன்ற ஒதுக்கங்களை இனிமேலும் பொறுக்க இயலாது எனும் உணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருநாள்கொண்ட சேரி தலித் மக்கள் தாங்களும் வீரட்டேசுவரர் கோவிலிலிருந்து கரகம் எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தபோது அதைப் பிற்படுத்தப்பட்ட சாதியினர் ஏற்கவில்லை. பிரச்சினை உருவாகியபோது இது குறித்து முடிவெடுக்கும் பொறுப்பு அறநிலையத் துறையிடம் விடப்பட்டது. வீரட்டேசுவரர் கோவில் அறநிலையத் துறையின் நிர்வாகத்தில் உள்ள ஒரு ஆலயம். அப்படியான வழக்கம் இல்லை என அறைநிலையத் துறையும் கைவிரித்தது. இறுதியில் எந்தச் சுற்று வட்டார ஆலயத்திற்கும் வீரட்டேசுவரர் கோவிலில் இருந்து கரகம் எடுக்கக் கூடாது என முடிவெடுக்கப்பட்டது. ஆக, காலங் காலமாக இருந்து வந்த வழமையை ஒழித்துக்கட்டக்கூட நாங்கள் தயார், ஆனால் தலித் மக்களுக்குச் சம உரிமை அளிக்க இயலாது என்பதுதான் பிற்படுத்தப்பட்டவர்களின் நிலைபாடாக இருந்தது.

இந்தப் பின்னணியில்தான் சென்ற நவம்பர் 26 (2015) அன்று திருநாள்கொண்டான் சேரி தலித் பகுதியை சேர்ந்த செல்லமுத்துவின் மனைவி எழுபது வயதுக்கும் மேற்பட்ட குஞ்சம்மாள் இறந்தார். அது கடுமையான மழைக் காலம். அதுவும் இந்த ஆண்டு பெய்த பேய் மழையை நாம் அறிவோம். வரப்புப் பாதையின் வழியே குஞ்சம்மாளின் உடலை அந்த மழை வெள்ளத்தின் ஊடாகத் தூக்கிச் செல்ல இயலாத நிலையில் தலித்கள் பொதுச்சாலை வழியே தூக்கிச் செல்லக் கோரிக்கை விடுத்தபோது அதை பிற்படுத்தப்பட்ட மக்கள் அனுமதிக்கவில்லை. ‘பிற்படுத்தப்பட்டோர்’ எனில் அதில் வன்னியர், தேவர், கோனார் எனப் பல சாதியினர் உள்ளபோதும் வன்னியர்களே இங்கு எண்ணிக்கையில் மிக அதிகமானோர். பிணம் தூக்கிச் செல்லும் பிரச்சினையில் இரு தரப்பினருக்கும் இடையே வன்முறை வெடிக்கும் நிலையில் அரசு தலையிட்டது. கோட்டாட்சியர் கிருஷ்ணம்மாள் வந்து உடன்பாடு ஏற்படுத்த முனைந்தார். தலித்களுக்கான அந்த வரப்புச் சாலையை விரைவில் நிரந்தரமாகத் திருத்தி அமைத்துத் தருவதாகவும் தற்போது தற்காலிகமாக அந்த வரப்புப் பாதையைத் திருத்தித் தருவதாகவும் அதன் மீது பிணத்தைத் தூக்கிச் செல்லுமாறும் தலித்கள் வற்புறுத்தப்பட்டனர். ஆக ஆதிக்க சாதியினர் என்ன சொன்னார்களோ அதையே அரசும் வழிமொழிந்தது. தலித்கள் அதை ஏற்கவில்லை. நான்கு நாட்கள் குஞ்சம்மாளின் உடல் அழுகிக் கிடந்தது. 30ம் தேதியன்று களத்தில் இறங்கிய காவல்துறை உடலை வன்முறையாகக் கைப்பற்றி, தடுக்க முயன்ற மக்களை மிரட்டி, பிணத்தைத் தூக்கிச் சென்றது. “பிணத்தை எரிச்சாங்களா, புதைச்சாங்களா எங்கேயாவது தூக்கி எறிஞ்சாங்களா எங்களுக்கு ஒண்ணும் தெரியாது செத்தவுங்களுக்குச் செய்யிற எந்தச் சடங்கையும் நாங்க செய்யல” என குஞ்சம்மாளின் பேரன் நெடுமாறன் எங்களிடம் கூறினார்.

அடுத்த ஐந்தாவது வாரம், ஜனவரி 3 (2016) அன்று குஞ்சம்மாளின் கணவரும் எண்பது வயதுப் பெரியவருமான செல்லமுத்து இறந்தார். மீண்டும் அதே பிரச்சினை. இம்முறை திருநாள்கொண்டான் சேரி தலித்கள் நீதிமன்றத்தை நாடினர். பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்த வழக்குரைஞர் ரஜினிகாந்த் அடுத்த நாள் (ஜன 4), “சர்வே எண் 103 (1பி) எண்ணில் உள்ள பொதுச் சாலை வழியே செல்லமுத்துவின் உடலை எடுத்துச் சென்று இறுதிச் சடங்கு செய்ய உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என நீதிமன்ற ஆணை ஒன்றைப் பெற்றார் (ரிட் மனு எண் 99, 2016 சென்னை உயர் நீதிமன்றம்).

இதற்கிடையில் தலித்களுக்கான தனிச் சுடுகாட்டுப்பாதை மூன்று மாதத்திற்குள் முழுமையாகச் சீர்திருத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அளித்துள்ள உறுதி அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் அடுத்த நாள் (ஜன 5) முன்வைக்கப்பட்டது. தலித்களுக்காக ஒதுக்கப்பட்ட பாதை சீர்திருத்தபடாமல் உள்ளது என்பதற்கு ஆட்சியரின் இந்தத் தகவலே சான்று; எனவே பொதுப்பாதையில் உடலைச் சுமந்து செல்ல நீதிமன்றம் ஆணையிட வேண்டும் என தலித்கள் தரப்பில் கோரப்பட்டது. அந்த அடிப்படையில் நீதிமன்றம் ஜன 5 அன்று கீழ்க்கண்ட மூன்று அம்சங்களுடன் கூடிய ஆணையை இட்டது. அவை: 1. செல்லமுத்துவின் உடலை உரிய பாதுகாப்புடன் அடக்கம் செய்ய அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும். 2. ஆட்சியர் வாக்குறுதிப்படி மூன்று மாதத்திற்குள் தலித்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதையை அரசு சீர்திருத்தம் செய்ய வேண்டும். 3. பொதுப்பாதையைப் பயன்படுத்தி மனுதாரர் இறுதிச்சடங்குகள் செய்ய அரசு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

பொதுப்பாதையைப் பயன்படுத்தி தலித்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என இத்தனை தெளிவாக நீதிமன்ற ஆணை இருந்தபோதும் அங்கு இருந்த டிஐஜி செந்தில்குமார், நாகை மாவட்டக் கண்காணிப்பாளர் அபினவ் குமார், திருவாரூர் மாவட்டக் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், கோட்டாட்சியர் கிருஷ்ணம்மாள் முதலான அதிகாரிகள் நீதிமன்ற ஆணையை நிறைவேற்றத் தயாராக இல்லை. ஜன 6 காலை சுமார் 300 காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டனர். பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜும் வந்திருந்தார். ஆதிக்க சாதியினர் ஆத்திரத்துடன் திரண்டிருந்தனர். நிலைமை தங்களுக்கு எதிராகப் போவதை உணர்ந்த தலித்கள் வீட்டுக்குள் நுழைந்து தாங்கள் கூண்டோடு தீக்குளிக்கப்போவதாக அறிவித்து மண்ணெண்ணையை உடல் மீது ஊற்றிக் கொண்டனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு எஞ்சின்கள் முதலியன வரவழைக்கப்பட்டன. மின்சாரம் நிறுத்தப்பட்டது. மக்கள் ஒடுங்கியிருந்த வீட்டுக்குள் தண்ணீர் பீச்சியடிக்கப்பட்டது. தலித்கள் அப்படியும் பணியாததைக் கண்ட அரசு அதிகாரிகள் மிகக் கேவலமான முறையில் அடுத்த கட்ட நடவடிக்கையைத் தொடங்கினர்.

நீதிமன்ற ஆணையை நிறைவேற்றுவதாகவும் பொதுப்பாதை வழியே உடலைத் தூக்கிச் செல்வதாகவும் அறிவித்தனர். இதை நம்பி தலித் மக்ககள் வெளியே வந்தனர். செல்லமுத்துவின் உடலை இப்படித் த்ந்திரமாகக் கைப்பற்றிய காவல்துறையினர் சுமார் நூறு மீட்டர் தொலைவு தாண்டியவுடன் கைவரிசையத் தொடங்கினர். பிணத்தைப் பொதுப்பாதை வழியாக அல்லாமல் பழைய வரப்புப் பாதையிலேயே கொண்டு சென்றனர். இன்னொரு பக்கம் தலித் மக்கள் மீது கடுமையாக தடியடித் தாக்குதல் நடத்தப்பட்டது. ஓடி ஒளிந்த ஒரு சில பெண்கள் தவிர சுமார் 60 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு நாகைக்குக் கொண்டு சென்று ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இரவில் பெண்கள் மட்டும் விடுதலை செய்யப்பட்டனர். அடுத்த நாள் 35 பேர்கள் மீது வழக்கு (எண் 5/16, இ.த.ச 294 (பி), 363, 506 P (1)) பதிவு செய்யப்பட்டு சொந்த ஜாமீனில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் வீடுகளுக்குக் கொண்டு வந்து விடப்பட்டனர். அதில் 31 பேர் சிகிச்சை கோரி அடுத்த நாள் மருத்துவமனைகளில் சேர்ந்தனர். நான்கு பேர்களுக்கு லத்தி தாக்குதலில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டன எனவும் இருவர் மேல் சிகிச்சைக்காகத் திருவாரூர் பெரிய மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் எங்களிடம் கூறினர்.

35 தலித்கள் மீது வழக்குப்போட்டதற்கு ஈடாக நாங்கள் ஆதிக்க சாதியினர் மீதும் வழக்குத் தொடர்ந்தோம் எனச் சொல்வதுபோல அவர்களில் 15 பேர்கள் மீது மட்டும் வழக்கு (எண் 4/16 பெரம்பூர் காவல் நிலையம் இ.த.ச 143 188, 253 56 பி (1)) தொடரப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பாவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. வன்முறைக்குக் காரணமான ஆதிக்க சாதியினரைக் காட்டிலும், வன்முறையால்பாதிக்கப்பட்ட தலித் மக்கள் இரு மடங்கு அதிகம் வழக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது கவனிக்கத் தக்கது.
கைது செய்து கொண்டுபோகப்பட்டவர்கள் தவிர ஊரிலேயே வீடுகளில் ஒளிந்திருந்தவர்களும் கடுமையாகத் தாக்கப்பட்டனர் எனவும் பெண்கள் அவமானப்படுத்தப்பட்டதாகவும் எங்கள் குழுவிடம் பலர் புகார் கூறினர். இதனால் மல்லிகா, ஜெகதாம்பாள் எனும் இருவர் திருவாரூர் தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர நேரிட்டது
மனைவி குஞ்சம்மாளைப் போலவே கணவர் செல்லமுத்துவும் காவல்துறையால் எவ்விதச் சடங்குகளும் இன்றி அடக்கவோ எரிக்கவோ செய்யப்பட்டார். எண்பதாண்டு வாழ்ந்த அந்தப் பெரியவருக்கு தமிழ்ச் சமூகம் இப்படி விடை அளித்தது.

இன்று தலித்கள் தமது ஊர் ஆதிக்கசாதியினரால் மட்டுமல்ல அரசாலும் தாம் வஞ்சிக்கப்பட்டதாக உணர்கின்றனர். “இது மட்டுமல்ல நாங்கள் என்றைக்கு எங்களின் உரிமைகளைக் கேட்க முனைந்தோமோ அன்று முதல் புறக்கணிக்கப்படுகிறோம். நாங்கள் வேலைகளுக்கு அவர்களைத்தான் நம்பி இருக்கிறோம். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக எங்களுக்கு யாரும் வேலை கொடுப்பதில்லை. எங்களிடம் உள்ள கொஞ்ச நஞ்ச நிலத்தில் விவசாயம் செய்வதற்குத் தண்ணீரும் கொடுப்பதில்லை. கடந்த பல ஆண்டுகளாக ஊராட்சி மன்றத் தலைவர்களாக உள்ளதும் அவர்கள்தான். எங்களுக்கு எந்த வசதியும் செய்து கொடுப்பதில்லை. எங்கள் பக்கத்தில் உள்ள சாலைகளைப் பாருங்கள். அவர்கள் பக்கம் உள்ள சாலைகளையும் பாருங்கள்” என்றனர் தலித்கள். சாலைகளைப் பற்றி அவர்கள் சொன்னது முற்றிலும் உண்மை என்பதை நாங்கள் கண்டோம். அது மட்டுமல்ல தலித்களுக்குக் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் எந்தப் பராமரிப்பும் இன்றி சிதைந்து கிடக்கின்றன. தலித்கள் பகுதியில் உரிய முன்னேற்றங்கள் இல்லை என்பதை ஏற்றுக் கொண்டதோடு தான் பொறுப்பேற்ற பின் சில நலத் திட்டங்களை அப்பகுதியில் நிறைவேற்ற முனைந்துள்ளதாகவும் கோட்டாட்சியர் கிருஷ்ணம்மாளும் கூறினார். தங்களுக்கு ‘தாட்கோ’ கடன் கொடுப்பதிலும் சிக்கல்கள் ஏற்படுத்துவதாக ஒரு தலித் இளைஞர் குறிப்பிட்டார்.

ஆனால் இவற்றை அதிக்க சாதியினர் மறுத்தனர். ஆதிக்க சாதியினர் என நான் குறிப்பிடாலும் அதில் பெரும்பான்மையாக இருந்து ஆதிக்கம் செய்வது வன்னியர்கள்தான் என்பது குறிப்பிடத் தக்கது. 20 ஆண்டுகளாக ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளவரும் அ.தி.மு.க நகரச் செயலருமான வி.ஜி.கே.செந்தில்நாதனைத் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது அவர் எங்களிடம் கனிவாகப் பேசினார். வழக்கமாக இது போன்ற சந்தர்ப்பங்களில் மேல்தட்டில் இருப்போர் பேசுவது போலவே அவரும், “இங்கு தீண்டாமை இல்லை. எல்லோரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். சில தலித் இளைஞர்கள் சொந்த லாபத்துக்காக அந்த மக்களைத் தூண்டி விடுகிறார்கள். பஞ்சாயத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை வைத்துக் கொண்டு எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவு செய்துள்ளோம்…” என்றார். அவரது தம்பி வி.ஜி.க மணிகண்டன் பா.ம.கவில் ஒரு முக்கிய தலைவர்.

“இருக்கட்டும் அய்யா, காலம் மாறுகிறது. சம உரிமைகளை எல்லோரும் கேட்கக்கூடிய காலம் இது. நகரங்களில் உள்ள மாதிரி பொதுப்பாதை, பொதுச் சுடுகாடு இதை எல்லாம் இனிமே மறுக்க முடியாது. உங்கள் ஊரிலும் இந்தக் கோரிக்கைகளை தலித் இளைஞர்கள் எழுப்புவதை நீங்கள் இந்தக் கோணத்தில் புரிந்து கொள்ள வேண்டும். இப்போதுள்ள தனிச் சுடுகாடு, தனிப்பாதை இதை எல்லாம் மாற்றி அமைத்தால் என்ன?” என நாங்கள் கேட்டபோது. “மாத்தலாம் ஆனா ஜனங்க ஒத்துக்கணுமே..” என்றார் ஊராட்சித் தலைவர்.

வன்னியர் தரப்பில் நாங்கள் பேசியபோது பாலகிருஷ்ணன் எனும் பெரியவர், “ஆமா, நகரங்கள்ல எல்லாம் நடக்குதுதான். மாற்றங்கள் வருந்தான்” என்றார். “அப்ப, சுடுகாடு, பாதை எல்லாத்தையும் பொதுவாக்கலாம் என்கிறதுதான் உங்க தரப்பு கருத்துன்னு எடுத்துக்கலாமா?” என நாங்கள் கேட்ட போது, “என் கருத்து அது. ஆனால் எல்லாருக்கும் சேர்த்து நான் கருத்து சொல்ல முடியாது” என்றார். அங்கிருந்த சில இளைஞர்கள் இங்கு தீண்டாமையே இல்லை என்றனர். தங்கள் பக்கத்தில் உள்ள கோவில் ஒன்றில் வைத்து தலித்களின் சாமியை எடுத்துச் சென்றுதான் தலித்களின் பக்கத்தில் உள்ள கோவிலில் வைத்ததற்கு வீடியோ ஆதாரம் உள்ளது எனவும், தலித் மக்களின் கோவிலைச் சீர்திருத்த தாங்களும் நிதி உதவியதாகவும் ஒரு இளைஞர் கூறினார். “பிணங்களைத் தூக்கிச் செல்ல அரசாங்கம் நல்ல சாலை அமைத்துத் தருகிறது. அதை விட்டுவிட்டு ஒரு கிமீ அதிகம் சுத்திவந்து எங்க தெரு வழியாத்தான் பிணத்தைக் கொண்டு போகிறோம் எனச் சொல்றது வீண் விதண்டாவாதம்” என இன்னொரு இளைஞர் கூறினார். எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் கடைசியாகச் சொன்னார் : “இந்த ஊர்ல பெரிய அநியாயம் நடக்கிற மாதிரி இல்லாததை எல்லாம் டிவியிலையும், ஃபேஸ் புக் மாதிரி ஊடகங்கள்ளையும் எழுதுறாங்க. நீதிமன்றத்தில போய் ஆணையெல்லாம் வாங்கலாம் சார். ஆனா நீதிமன்றம் வந்து இங்கே உயிருக்குப் பாதுகாப்புக் கொடுக்க முடியாது. நடக்கிறதை எல்லாம் பார்த்தா மிகப் பெரிய விபரீதம்தான் நடக்கப்போகுது..” என எச்சரிக்கும் குரலில் கூறியதைக் கேட்கக் கவலையாக இருந்தது.

அதிகாரிகளின் கருத்து

எஸ்.பி. அபினவ்குமாரிடம் தொலைபேசியில்தான் பேச முடிந்தது. ஏதாவது அமைதிக் கூட்டம் நடத்த உத்தேசம் உண்டா எனக் கேடபோது “ஏற்கனவே நிறைய நடத்தியாகிவிட்டது இப்போது அப்படி ஏதும் திட்டம் இருப்பதாகத் தெரியவில்லை” என்றார். நீதிமன்ற ஆணையை நிறைவேற்றாமல் நேர் எதிராக அன்று நடந்து கொண்டது ஏன் எனக் கேட்டபோது, “இது நீதிமன்ற ஆணையை வைத்துக்கொண்டு விவாதிக்க வேண்டிய ஒன்று” என்றார். அப்படி என்றால் நீதிமண்ற ஆணையின்படிதான் அன்று எல்லாம் நடந்ததா எனக் கேட்டபோது நான் இப்படியெல்லாம் கருத்துக் கூற விரும்பவில்லை. நேரில் விவாதிக்க வேண்டிய ஒன்று இது” என்றார். நேரம் ஒதுக்கினால் வந்து சந்திக்கிறோம் எனக் கேட்டபோது இன்று சாத்தியமில்லை என்றார். நாங்கள் அடுத்த நாள் பத்திரிகையாளர் சந்திப்பை அறிவித்துவிட்டதால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

கோட்டாட்சியர் கிருஷ்ணம்மாளைச் சந்தித்தபோது அவர் இது குறித்து விரிவாக விளக்கினார். பொதுப்பாதையில் உடலைக் கொண்டு செல்ல ஆணை கோரியபோது, ”தலித்களுக்காக ஒதுக்கப்பட்ட சர்வே எண் 103 (1பி) யில் உள்ள சாலை” என்பதற்குப் பதிலாக “Common pathway in SR No 103 (1B)” எனத் தவறுதலாகக் குறிப்பிட்டுள்ளதை தங்களுக்குச் சாதகமாக அரசு அதிகாரிகள் எடுத்துக் கொண்டுள்ளனர். நீதிமன்றம் ஜன 4 அன்று அளித்த தற்காலிக ஆணையில்தான்ந்து போலக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அடுத்த நாள் நிரந்தர ஆணை அளித்தபோது, மேற்குறிப்பிட்ட இந்தப் பாதை திருத்தப்பட வேண்டும் என ஆட்சியரே ஒத்துக்கொண்டதை வழக்குரைஞர்கள் சுட்டிக்காட்ட, நீதிமன்றமும் அதை ஏற்றுக் கொண்டு, பிணத்தைப் “பொதுச்சாலை வழியாக” எடுத்துச் செல்ல வேண்டும் எனத் தெளிவாக “using the public road” எனக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அதிகார வர்க்கம் இதைத் திரித்து தலித்களுக்காக ஒதுக்கப்பட்ட தீண்டாமைப் பாதையைத்தான் நீதிமன்றம் “public road” எனக் குறிப்பிடுவதாக விளக்கம் அளிப்பது படு கேவலமான தந்திரம். நீதிமன்ற ஆணை ஒன்றை இதைவிடக் கேவலமாக யாரும் அவமதித்துவிட இயலாது.

கோரிக்கைகள்

1. நீதிமன்ற ஆணை புறக்கணிக்கப்பட்டதோடு, அது குறித்த திரிக்கப்பட்ட விளக்கத்தைச் சொல்லி வரும் காவல்துறை உயர் அதிகாரிகளான டி.ஐ.ஜி மற்றும் நாகை, திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

2. நீதிமன்றம் இதை suo moto வாகக் கவனத்தில் எடுத்து நீதிமன்ற ஆணையில் குறிப்பிடப்படும் ஐந்து அதிகாரிகள் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்.

3. தலித்கள் இறந்தோரைப் பொதுப்பாதையில் தூக்கிச் செல்வதைத் தடுத்தவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். குற்ற நடைமுறைச் சட்டம் 109 பிரிவின் கீழ் அழைக்கப்பட்டபோது சிலர் வருவதில்லை என தலித் தரப்பில் எங்களிடம் சொல்லப்பட்டது. அது உண்மையாயின் வராதவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீதும் உரிய பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட வேண்டும்.

4. தலித்களுக்கான தனிச் சுடுகாட்டுப் பாதை அமைக்கும் அரசுத் திட்டம் கைவிடப்பட வேண்டும். அப்படி அந்தப் பாதை அமைக்கப்பட்ட போதிலும் அதில்தான் தலித்கள் பிணங்களைத் தூக்கிச் செல்ல வேண்டும் என்று கட்டாயப் படுத்தக்கூடாது. பிற பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கான பொதுச் சுடுகாட்டிலேயே தலித்களும் இறந்தோருக்கு இறுதிச்சடங்குகள் செய்யவும் இதற்கெனப் பொதுப் பாதையைப் பயன்படுத்தவும் உடன் வழி வகுக்க வேண்டும். இதற்குத் தடையாக இருப்பவர்கள் யாராயினும் அவர்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும்.

5. இந்தப் பகுதியில் பல ஊர்களில் இந்தச் சுடுகாட்டுப் பிரச்சினை உள்ளது. குடவாசல் அருகில் உள்ள சிறுகளத்தூர் எனும் ஊரிலும் இவ்வாறு தலித்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என விடுதலை தலித் புலிகள் கட்சியின் நிறுவனர் குடந்தை அரசன் எங்களிடம் கூறினார். இது குறித்து ஆய்வு செய்து இந்நிலையை ஒழிக்க அரசு விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும்.

6. திருநாள்கொண்டான் சேரி கிராமத் தலித்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளதோடு அவர்கள் தாக்கப்பட்டும் உள்ளனர். அவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும். இவர்கள் 35 பேர்களுக்கும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் உள்ளவாறு இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். இந்த 35 பேர்கள் தவிரவும் மல்லிகா, ஜெகதாம்பாள் முதலான தலித் பெண்கள் காவல்துறையால் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் உரிய இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.

7. உள்ளாட்சி நிர்வாகத்தில் ஆதிக்க சாதியினரின் ஆளுகையில் தலித்கள் பாதிக்கப்படுவதற்கு திருநாள்கொண்டான் சேரி கிராமம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அரசியல் சட்ட அவையில் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்த நாட்டிற்கு பஞ்சாயத்து ராஜ் என்பது பொருத்தமற்றது என வாதிட்டதன் பொருளை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. தலித் மக்கள் அனைவரும் தாம் வசிக்கும் இடங்களுக்கு வீட்டு மனைப் பட்டா இல்லாமல் உள்ளனர். அதனால் அவர்கள் கல்விக் கடன் உட்பட உதவிகள் பெற இயலாதவர்களாகவும் உள்ளனர். இதை அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு அவர்களுக்கு வீட்டு மனைப் பட்டாக்களை உடனடியாக வழங்க வேண்டும்.

8. அச்சம் தரும் சூழல் நிலவுவதால் தலித் மக்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும்.

9. மாறிவரும் சூழலில் தலித் மக்களின் நியாயமான சம உரிமைக் கோரிக்கைகளை பிற்படுத்தப்பட்ட சாதியினர் மதிக்க வேண்டும் என்கிற கருத்தை இவர்கள் மத்தியில் செல்வாக்கு வகிக்கும் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்ய வேண்டும். மாறாக இவ்வாறு பிற்படுத்தப்பட்ட சாதியினரும், தலித்களும் பிளவுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு லாபமாக அமையும் என்கிற கோணத்தில் சில அரசியல் கட்சிகள் செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

10. தேர்தலை ஒட்டி இவ்வாறு இப்பகுதியில் ஆங்காங்கு கலவரங்கள் ஏற்படுவது கவலை அளிக்கிறது. திருவாவடுதுறை திருவாலங்காடு பகுதியில் சென்ற மாட்டுப் பொங்கல் அன்றும் அடுத்த நாளும் இப்படி தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் மோதல்கள் நடந்துள்ளன. போலீஸ் தடியடித் தாக்குதல் நடத்தியுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கவிதா என ஒரு பெண்ணுக்கும் தலித் இளைஞர்கள் ஆறு பேர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அப்பகுதிக்கும் எங்கள் குழு சென்று வந்தது. குத்தாலம் காவல் ஆய்வாளர் ஆனந்த தாண்டவன் மற்றும் பிரச்சினைக்குரிய இடத்தில் காவல் பொறுப்பில் இருந்த ஆய்வாளர் சுகுணா ஆகியோரிடம் விரிவாகப் பேசினோம். தலித்கள் மீது இரு வழக்குகளும், பிற்படுத்தப்பட்டோர் மீது இரு வழக்குகளும் போடப்பட்டுள்ளன. தலித்களில் 19 பேர்களும், பிற்படுத்தப்பட்டோரில் 21 பேர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். பிற்படுத்தப்பட்டோர் மீது போடப்பட்ட வழக்கில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் படன்படுத்தப்பட்டபோதிலும் 3 (1) (X) பிரிவு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சாதிப் பெயர் சொல்லி இழிவு செய்ததை மட்டுமே குறிக்கும் பிரிவு. ஆனால் அதிக அளவில் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் சரியான பிரிவுகள் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும். அதே போல பலர் இரு தரப்பிலும் கைது செய்யப்பட்ட போதும் கலவரத்திற்கு உண்மையிலேயே காரணமான முக்கியமானவர்கள் கைது செய்யப்படவில்லை என்கிற குற்றச்சாட்டும் எங்களிடம் கூறப்பட்டது. தேர்தல் நேரத்தில் இப்படியான சாதிக் கலவரச் சூழல் இப்பகுதியில் உருவாகியிருப்பது கவலை அளிக்கிறது. காவல்துறையும் ரெவின்யூ நிர்வாகமும் இதைக் கணக்கில் கொண்டு இப்பகுதியில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தொடர்பு: அ.மார்க்ஸ், 3/5. முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை-20.சென்னை. செல்: 094441 20582

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*