மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (29.05.2016) விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரியில் காங்கிரஸ் தொண்டர்கள் மீது தடியடி நடத்திய சம்பவம் குறித்து துணைநிலை ஆளுநர் தலையிட்டு உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
நேற்றைய தினம் காலாப்பட்டில் உள்ள தனியார் ஓட்டலில் புதுச்சேரி முதல்வரை தேர்வு செய்வதற்கான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது முதல்வராக நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் திடீரென அந்த ஓட்டலை முற்றுகையிட்டும், சாலை மறியல் செய்தும் போராட்டம் நடத்தினர்.
அப்போது போலீசார் போராட்டம் நடத்திய காங்கிரசார் மீது கண்மூடித்தனமாக தடியடி தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் காயமடைந்த பலர் பிம்ஸ் மற்றும் அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுள்ளனர். அதில் விஜயன் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
காங்கிரஸ் முதல்வர் தேர்வு செய்யப்படும் போது பிரச்சனை வரும் என்பது சாதாரண மக்களுக்கே தெரிந்த போது, போலீசார் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் மெத்தனமாக இருந்ததே அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணமாகும்.
எனவே, துணைநிலை ஆளுநர் இதில் தலையிட்டு தடியடி சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தடியடி சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் அனைவரையும் உடனே பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
இதுகுறித்து மத்திய உள்துறை செயலர், தேசிய மனித உரிமைகள் ஆணையம், துணைநிலை ஆளுநர், தலைமைச் செயலர் உள்ளிட்டோருக்கு விரிவான மனு அனுப்ப உள்ளோம்.
Leave a Reply