புதுச்சேரியில் ஆட்டோக்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க நடவடிக்கை கோரி அக். 5ல் ஆர்ப்பாட்டம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 22.09.2016 வியாழனன்று காலை 10 மணியளவில் செகா கலைக்கூடத்தில் நடந்த சமூக அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு தலைவர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார்.

கூட்டத்தில்  கோ.அ.ஜெகன்நாதன், செயலாளர், மக்கள் வாழ்வுரிமை இயக்கம், சிவ.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம், வீரமோகன், தலைவர், ம.இளங்கோ, துணைத்தலைவர் தந்தைப் பெரியார் திராவிடர் கழகம், கோ.அழகர், செயலாளர், தமிழர் களம், பெ.சந்திரசேகரன், தலைவர், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம், சி. எம். புரட்சிவேந்தன், தலைவர், லோக் ஜனசக்தி, சு.பஷீர் அகமது, மாவட்ட செயலாளர் மனிதநேய மக்கள் கட்சி, பெ. பராங்குசம், தலைவர், இலக்கிய பொழில் இலக்கிய மன்றம்,  தூ. சடகோபன், தலைவர், பெரியார் அறிவியல் மன்றம், மு.அ.அஷ்ரப், அமைப்பாளர், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, ஆ.பாவடைராயன், தலைவர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை, அ. கனகசபை, தலைவர், மீனவ முன்னேற்ற கழகம், பெ.இரகுபதி, தலைவர், புதுச்சேரி பூர்வக்குடி மக்கள் பாதுகாப்புப் பேரவை,  தேவநாதன், வழக்கறிஞர் குலோத்துங்கன், பீப்பல்ஸ் பல்ஸ்,  சக்திவேல், தலைவர், ஐந்தாவது தூண், மு.நாராயணசாமி, தலைவர், மக்கள் மன்றம், கே.குமரவேல், தலைவர், சமூக சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், பரகத்துல்லாஹ், செயலாளர், ஜனநாயக முஸ்லிம் முன்னேற்ற கழகம், அர.அரிகிருஷ்ணன், தலைவர், இந்திய மக்கள் சக்தி பாதுகாப்பு இயக்கம், தெ.இராஜாராம், கிராமப் பஞ்சாயத்து கூட்டமைப்பு உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1)    புதுச்சேரி அரசு 23.12.2013-ல் ஆட்டோ கட்டணம் நிர்ணயித்து அரசாணை ஒன்றை வெளியிட்டது (G.O. Ms. 14/Tr. Sectt/2013 Transport Department). இதன்படி 1.8 கி.மீ. தூரத்திற்கு ரூ. 25, கூடுதல் ஒவ்வொரு கி.மீ. ரூ. 15, காத்திருக்கும் ஓவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ரூ. 20, இரவு 10 முதல் 5. மணி வரையில் 50 சதவீத கூடுதல் கட்டணம் என ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதன்படி ஆட்டோக்கள் கட்டணம் வசூலிப்பதில்லை.

அதன்பின்னர் சில ஆண்டுகள் கழித்து அனைத்து ஆட்டோக்களிலும் மீட்டர் பொருத்த வேண்டுமென போக்குவரத்து துறை உத்தரவிட்டு பெரும்பாலான ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், அதன் பின்னரும் ஆட்டோக்கள் மீட்டர்படி கட்டணம் வசூலிப்பதில்லை. மேலும், அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட பல மடங்கு கூடுதலாக வசூலித்து வருகின்றனர். இதனால், பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் பெரிதளவில் பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆட்டோக்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தைப் பின்பற்றி மீட்டர்படி கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஓ.எச்.எப். ஷாஜகான் அறிவித்துள்ளார். ஆனால், ஆட்டோக்கள் மீட்டர்படி கட்டணம் வசூலித்திட அரசு உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

தற்போது ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டுமென ஆட்டோ சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அண்டை மாநிலமான தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆட்டோ கட்டணம் புதுச்சேரி அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட குறைவாகவே உள்ளது. மேலும், புதுச்சேரியில் தமிழகத்தைவிட பெட்ரோல், டீசல், ஆட்டோ உதிரிப் பாகங்கள் விலைக் குறைவாகவே உள்ளது. இந்நிலையில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை உயர்த்த வேண்டுமென ஆட்டோ சங்கங்கள் கோருவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.
எனவே, சட்டமன்றத்தில் அறிவித்தபடி ஆட்டோக்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தைப் பின்பற்றி மீட்டர்படி கட்டணம் வசூலிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

2)    இதுகுறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதல்வர், போக்குவரத்து துறை அமைச்சர், தலைமைச் செயலர், போக்குவரத்துத் துறை செயலர், போக்குவரத்து ஆணையர் ஆகியோருக்கு கூட்டாக மனு அளிப்பது.

3)    இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும் 05.10.2016 புதன்கிழமையன்று, காலை 10 மணியளவில், தலைமை அஞ்சலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*