காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசை வலியுறுத்தும் வகையில் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு ஆகஸ்ட் மாதம் திறந்துவிட வேண்டிய 50 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்துவிட உத்தரவிட கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி காவிரியின் கடைமடைப் பகுதியான காரைக்காலுக்கு மொத்தம் 7 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும். தமிழகத்திற்குக் காவிரி தண்ணீர் கிடைத்தால்தான் காரைக்காலுக்குச் சேர வேண்டிய 7 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும்.
கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட முடியாது என நேற்று முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இது தமிழகத்தை மட்டுமல்ல புதுச்சேரியையும் வஞ்சிக்கும் செயலாகும். கர்நாடக அரசின் இப்போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.
காரைக்காலுக்கு உரிய காவிரி தண்ணீர் கிடைக்காததால் தற்போது டெல்டா பகுதிகளில் சம்பா பயிர் சாகுபடி செய்யா முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். மேலும், காரைக்காலில் ஏற்கனவே 40 ஆயிரம் ஹெக்டர் விவசாய நிலங்கள் இப்போது வெறும் 10 ஆயிரம் ஹெக்டர் நிலங்களாக குறைந்துள்ளது. இதனால், விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள காரைக்கால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
எனவே, தமிழகம் மற்றும் காரைக்காலுக்குச் சேர வேண்டிய காவிரி தண்ணீரை உடனே திறந்துவிட கர்நாடக அரசை வலியுறுத்தி நடந்துவரும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கின் அடிப்படையில் தமிழகம் மற்றும் காரைக்காலுக்குச் சேர வேண்டிய காவிரி தண்ணீரை கர்நாடக அரசு உடனே திறந்துவிட உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு வழக்குத் தொடர வேண்டும்.
இக்கோரிக்கைகளைப் பரிசீலித்து முதல்வர் நாராயணசாமி அவர்கள் காரைக்கால் விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
Leave a Reply