மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் இன்று (22.01.2016) விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூட நிலத்தில் சட்டத்திற்குப் புறம்பாக ஒருங்கிணைந்த அரசுத்துறை அலுவலகம் கட்டும் பணியை கைவிட வேண்டுமென புதுச்சேரி அரசை ’மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
1988ல் துவங்கப்பட்ட பாரதியார் பல்கலைக்கூடம் தற்போது அரியாங்குப்பத்தில் 10.5 ஏக்கரில் செயல்பட்டு வருகிறது. இங்கு கவின்கலை, இசை, நடனம் ஆகிய படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
தற்போது பல்கலைக்கூடத்திற்குச் சொந்தமான இடத்தில் ஒருங்கிணைந்த அரசுத்துறை அலுவலகம் கட்டுவதற்காக அரசு முடிவு செய்து அதற்கான பணிகளை துவக்கி உள்ளது. ஒருங்கிணைந்த அரசுத்துறை அலுவலகம் கட்டுவதை மனதார வரவேற்கிறோம்.
அதேநேரத்தில் கலைப் பண்பாட்டுத்துறையின்கீழ் செயல்பட்டு வரும் பல்கலைக்கூட நிலத்தில் சட்டத்திற்குப் புறம்பாக கட்டிட பணி துவங்கியுள்ளது ஏற்புடையதல்ல. இந்த கட்டிடம் கட்டுவதற்காக கலைப் பண்பாட்டுத் துறையிடம் முறைப்படி பெற வேண்டிய தடையில்லா சான்றிதழ் (NOC) பெறப்படவில்லை.
பல்கலைக்கூடம் மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (AICTE) அங்கீகாரம் பெற்று இயங்கி வருகிறது. இந்த அங்கீகாரம் பெற்று இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகள் நடத்த மொத்தம் 14 ஏக்கர் நிலம் தேவை என விதி உள்ளது. இந்த அங்கீகாரம் தொடர மேலும் 3.5 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இந்நிலையில், பல்கலைக்கூடத்தின் இடத்தைத் தாரை வார்ப்பதால் அங்கீகாரம் ரத்தாகும் ஆபத்துள்ளது. இதனால், படிப்பு செல்லாததாகி மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.
பல்கலைக்கூடத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் மேலும் வகுப்பறைகள், நூலகங்கள், கலையரங்கம், கலைக்கூடங்கள், மாணவர்கள் தங்கும் விடுதிகள், தங்கும் குடியிருப்புகள், விருந்தினர் இல்லம் போன்றவை கட்டுவதற்காக அரசு ஓர் வரைபடம் தயாரித்துள்ளது. ஆனால் போதிய நிதி ஒதுக்கப்படாததால் இப்பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, புதுச்சேரி அரசு பல்கலைக்கூடத்திற்குச் சொந்தமான இடத்தில் சட்டத்திற்குப் புறம்பாக ஒருங்கிணைந்த அரசுத்துறை அலுவலகம் கட்டும் பணியை கைவிட வேண்டும். மேலும், அரியாங்குப்பம் ஆறு அருகேயுள்ள அரசு இடத்தில் இந்த அலுவலகம் கட்ட பரிசீலினை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
Leave a Reply