மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (14.12.2015) விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரியில் 9ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள கே.எஸ்.பி. பள்ளியில் பயின்ற 9ம் வகுப்பு மாணவியை அப்பள்ளியின் தாளாளர் கே.எஸ்.பி.ரமேஷ் பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தின்கீழ் தன்வந்தரி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், போலீசார் குற்றமிழைத்தவரை இதுவரையில் கைது செய்யவில்லை.
பாதிக்கப்பட்ட மாணவி குழந்தைகள் நலக்குழுவில் அளித்த புகாரின் அடிப்படையில் அக்குழுவின் தலைவி வித்யா ராம்குமார் விசாரித்து போலீசாருக்கு வழக்குப் பதிவு செய்த பரிந்துரைத்துள்ளார். ஆனால், தெற்குப் பகுதி போலீஸ் எஸ்.பி. வழக்குப் பதிவு செய்யாமல் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சமரசப்படுத்தி புகாரை திரும்பப் பெற வலியுறுத்தி உள்ளார். இடதுசாரிக் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் தலையீட்டின் பேரிலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், குற்றமிழைத்த கே.எஸ்.பி.ரமேஷ் ஆளுங்கட்சிப் பிரமுகர் என்பதோடு, நகரமைப்பு குழுமத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்தவர். புதுச்சேரி அரசில் அவருக்கு மிகுந்த செல்வாக்கு உள்ளது. தெற்குப் பகுதி போலீஸ் அதிகாரிகள் குற்றமிழைத்தவரை காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். ஆகையால் புதுச்சேரி போலீசார் இவ்வழக்கை விசாரித்தால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கிடைக்காது.
எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். குற்றமிழைத்தவரை உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு பாதுகாப்பும் அளிக்க வேண்டும்.
புதுச்சேரி அரசு இதனை நிறைவேற்றாவிட்டால் அனைத்துக் கட்சி மற்றும் சமூக அமைப்புகளை ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்துவோம்.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர், உள்துறை செயலர், தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றுக்கு விரிவான புகார் அனு அளிக்க உள்ளோம்.
Leave a Reply