மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (12.06.2015) விடுத்துள்ள அறிக்கை:
புதுவைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மாணவன் இராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
சென்ற 06.04.2014 அன்று பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பயின்ற மாணவன் இராதாகிருஷ்ணனை மகளிர் விடுதிக்குள் நுழைந்ததாகப் பொய்யாக குற்றம்சாட்டி பல்கலைக்கழகப் பேராசிரியர் அரிகரன், பூஷன் சுதாகர், சாம் சதீஷ், குணசேகரன் ஆகியோர் சட்டவிரோதமாக 27 மணி நேரத்திற்கு மேலாக அடைத்து வைத்து அடித்து உதைத்துத் துன்புறுத்தினர்.
இந்த சம்பவம் அப்போது மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்குப் புகார் அனுப்பப்பட்டது. இதுகுறித்து சென்ற 28.03.2015 அன்று புதுச்சேரிக்கு வந்த தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் நீதிபதி டி.முருகேசன் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காலாப்பட்டு போலீசார் இவ்வழக்கில் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் நேற்றைய முன்தினம் தேசிய ஊடகங்களில் ஒளிபரப்பானது.
மேலும், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் பூஷன் சுதாகர் துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி உத்தரவின்பேரில்தான் மாணவனிடம் விசாரித்தாகவும், அனைத்து சம்பவமும் துணைவேந்தருக்குத் தெரியும் என்றும் கூறியுள்ளது வீடியோவில் பதிவாகியுள்ளது. மேலும், காலாப்பட்டு காவல்நிலையத்தில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையிலும் துணைவேந்தர் உத்தரவின் பேரில்தான் மொத்த சம்பவமும் நடந்ததாக புகாரில் கூறப்பட்டது பதிவாகியுள்ளது.
எனவே, இவ்வழக்கில் தொடர்புடைய துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியை விசாரித்து அவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், இவ்வழக்கில் துணைவேந்தர் உள்ளிட்ட மிக முக்கியமானவர்களுக்குத் தொடர்பு உள்ளதால், இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி புதுச்சேரி அரசு உத்தரவிட வேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
Leave a Reply