மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் இன்று (08.05.2015) விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து சுயேட்சையான கல்வியாளர்கள் அடங்கிய உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவுகளின்படி புதுச்சேரியில் கடந்த ஆண்டு 89.61 சதவீதமான தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 88.16 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது 1.45 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், ஒரு அரசுப் பள்ளிகூட 100 சதவீதம் தேர்ச்சிப் பெறவில்லை.
இதுகுறித்து விளக்கமளித்த முதலமைச்சர் ரங்கசாமி ஆசிரியர் பற்றாக்குறைதான் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்குக் காரணம் என்று கூறியுள்ளார். அவர் கூறியதைப் பார்க்கும் போது தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு அரசுதான் முழுக்காரணம் என்பது தெளிவாகிறது.
தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 படிக்கும் போதே பிளஸ்-2 பாடங்களை நடத்தி ஓராண்டு படிக்க வேண்டிய படிப்பை ஒன்றரை ஆண்டு காலம் படிக்க வைக்கின்றனர். இதனால் தனியார் பள்ளி மாணவர்கள் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்கின்றனர். பிளஸ்-1 படிப்பிலும் பொதுத்தேர்வு வைக்க வேண்டும், மாணவர்களின் கல்விச் சுமையை குறைக்க செமஸ்டர் முறை கொண்டு வர வேண்டும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
தனியார் பள்ளிகள் பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்துவிடுவார்கள் என்ற நிலையில் உள்ள மாணவர்களைப் பள்ளியை விட்டு வெளியே அனுப்பிவிடுவதும், பள்ளி மூலம் தேர்வு எழுத அனுமதிக்காமல் தனியாக (private) தேர்வு எழுத வைப்பதன் மூலம் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி அரசுப் பள்ளியில் தேர்ச்சி விகிதம் குறைந்தது அங்குப் பயிலும் ஏழை எளிய மாணவர்களின் எதிர்க்காலத்தைப் பெரிதும் பாதிக்கும். இதுகுறித்து அரசு சுயேட்சையான கல்வியாளர்கள் அடங்கிய உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டு அறிக்கைப் பெற்று வரும் காலங்களில் இதுபோன்று நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்த அரசு தீவிரமாக செயல்பட வேண்டும்.
Leave a Reply