மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 6.5.2015 புதனன்று காலை 10 மணி முதல் 1.00 மணி வரையில், தலைமை அஞ்சலகம் எதிரில், சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடைய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் என அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
கோரிக்கைகள்:
1) சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கை புலன் விசாரணை செய்யும் சிஐடி போலீசார் இவ்வழக்கைப் போலீசாரை மட்டுமே கைது செய்வதுடன் முடித்துக் கொள்ளும் திட்டத்துடன் செயல்பட்டு வருகின்றனர். தற்போது இவ்வழக்கில் சிக்கியுள்ள போலீசாரில் சிலர் பலாத்கார சம்பவத்தில் தொடர்பில்லாதவர்கள். இதுகுறித்து சிஐடி போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2) சிஐடி எஸ்.பி., வேங்கடசாமி விபச்சார கும்பலுடன் செல்பேசியில் பேசியவர்களில் 300 பேரைக் கண்டறிந்துள்ளதாகவும், விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்து ஒரு மாத காலத்திற்கு மேலாகியும் இதுவரையில் ஒருவரையும் கைது செய்யவில்லை. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகள் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியபடி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 2 கறுப்பின இளைஞர்கள், 1 வெள்ளை வேட்டி சட்டை அணிந்தவர், 1 போலீஸ்காரர், 1 மாணவர் உட்பட 7 பேரில் ஒருவரைக்கூட இதுவரையில் கைது செய்யவில்லை. சிறுமிகள் பாலியல் பலாத்காரத்தில் மேலும் பலருக்கும் தொடர்பு இருப்பதால், அவர்களைக் காப்பாற்றும் வகையில் சிஐடி போலீசார் செயல்பட்டு வருகின்றனர். எனவே, இச்சம்பவத்தில் தொடர்புடைய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் என அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
3) விபச்சார கும்பலுடன் செல்பேசியில் பேசியவர்களின் பட்டியலை சிஐடி போலீசார் வெளியிட வேண்டும்.
4) தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டபடி பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்குத் தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப அனைத்து நடவடிக்கையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.
5) சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
எனவே, தாங்கள் மேற்சொன்ன ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டு ஆதரவுத் தர வேண்டுகிறோம்.
Leave a Reply