மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்குக் குறித்து 24.04.2015 வெள்ளியன்று, காலை 10 மணியளவில், ரெவேய் சொசியால் சங்கத்தில், கட்சி மற்றும் சமூக அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் தலைமைத் தாங்கினார்.
கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி, மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா. மங்கையர்செல்வன், மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் கோ. அ. ஜெகன்நாதன், புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் சீ.சு.சாமிநாதன், தந்தைப் பெரியார் திராவிடர் கழகம் தலைவர் வீரமோகன், தமிழர் களம் தலைவர் கோ. அழகர், ஆம் ஆத்மி கட்சி பொறுப்பாளர் பன்னீர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை தலைவர் ஆ. பாவாடைராயன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் சமது, தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமைப்பாளர் ஶ்ரீதர், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி மாநில அமைப்பாளர் எம்.ஏ. அஷ்ரப், தமிழர் தேசிய முன்னணி பொறுப்பாளர் பெ. பராங்குசம், தலித் சேனா தலைவர் சுந்தர், பீ போல்ட் அமைப்பு தலைவர் பஷீர், மக்கள் நற்பணி மன்றம் தலைவர் மாறன். பாரத மக்கள் சாசன இயக்கத் தலைவர் ஜெயகாந்தன், மக்கள் நல்வாழ்வு இயக்கத் தலைவர் ராஜா, இன்னிசை கலைஞர்கள் கூட்டமைப்பு தலைவர் ஆனந்து, புதுச்சேரி போராளிகள் குழுவைச் சேர்ந்த ஜெபின், சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
இக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1) சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கில் இதுவரையில் 5 போலீசார் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கை புலன் விசாரணை செய்யும் சிஐடி போலீசார் இவ்வழக்கைப் போலீசாரை கைது செய்வதுடன் முடித்துக் கொள்ளும் திட்டத்துடன் செயல்பட்டு வருகின்றனர். தற்போது இவ்வழக்கில் சிக்கியுள்ள போலீசாரில் சிலர் இப்பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்பில்லாதவர்கள். இதுகுறித்து புதுச்சேரி அரசும், சிஐடி போலீசும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2) சிஐடி எஸ்.பி., வேங்கடசாமி விபச்சார கும்பலுடன் செல்பேசியில் பேசிய பட்டியலின் அடிப்படையில் 300 பேரைக் கண்டறிந்துள்ளதாகவும், விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்து ஒரு மாத காலத்திற்கு மேலாகியும் இதுவரையில் ஒருவரையும் கைது செய்யவில்லை. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகள் கொடுத்த வாக்குமூலத்தில் கூறிய பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 2 கறுப்பின இளைஞர்கள், 1 வெள்ளை வேட்டி, சட்டை அணிந்தவர், 1 போலீஸ்காரர், 1 மாணவர் உட்பட 7 பேரில் ஒருவரைக்கூட இதுவரையில் கண்டுபிடித்துக் கைது செய்யவில்லை. சிறுமிகள் பாலியல் பலாத்காரத்தில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் என பலருக்கும் தொடர்பு இருப்பதால், இவ்வழக்கை சிஐடி போலீசார் அவசரம் அவசரமாக முடிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். மேலும், செல்வாக்கு மிக்கவர்கள் இவ்வழக்கில் இருந்து தப்பித்துக் கொள்ள புதுச்சேரி அரசுக்கும், சிஐடி போலீசுக்கும் அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிகிறது. எனவே, இச்சம்பவத்தில் தொடர்புடைய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் என அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
3) விபச்சார கும்பலுடன் செல்பேசியில் பேசியவர்களின் பட்டியலை சிஐடி போலீசார் உடனடியாக வெளியிட வேண்டும்.
4) பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப அனைத்து நடவடிக்கையும் அரசு எடுக்க வேண்டும்.
5) சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
6) சிறுமிகள் பாலியல் பலாத்கார சமபவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுப்பது.
7) மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 05.05.2015 செவ்வாய் அன்று காலை 10 மணிக்கு, தலைமை அஞ்சலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.
Leave a Reply