மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 25.07.2009 அன்று விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரியின் புதிய ஆளுநர் மேதகு இக்பால் சிங் பதவியேற்பின் போது புதுச்சேரி தலைமை நீதிபதிக்கு பதிலாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளது சட்டவிரோதமானது என்பதோடு, பிரெஞ்சு காலம் தொட்டு இருந்துவரும் மரபை மீறும் செயலாகும் என ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் சுட்டிக்காட்டுகிறோம்.
புதுச்சேரியின் புதிய ஆளுநராக இக்பால்சிங் வரும் 27-ந் தேதி திங்களன்று பதவியேற்க உள்ளார். அவருக்கு புதுச்சேரியின் தலைமை நீதிபதி மேன்மைமிகு டி.கிருஷ்ணராஜா அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைப்பார் என செய்தி வெளியானது.
ஆனால், தற்போது புதுச்சேரி தலைமை நீதிபதிக்கு பதிலாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மேன்மைமிகு எச்.எல்.கோகுலே அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
பிரெஞ்சுக் காலம் முதல் ஆளுநர் பதவியேற்பின் போது புதுச்சேரி தலைமை நீதிபதியே பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்ற மரபை மீறியுள்ளது ஒட்டுமொத்த புதுச்சேரி மக்களை அவமதிப்பதாகும். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இந்த அவப்பெயர் வந்துவிட கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இதைச் சுட்டிக்காட்டுகிறோம்.
இந்திய அரசியல் சட்டத்தில் நேரடியாக சொல்லப்படாவிட்டாலும், நீண்ட காலமாக இருந்து வரும் மரபை சட்டமாகவே மதித்து செயல்படுவது நடைமுறையில் இருந்து வரும் வழக்கம். அதன் அடிப்படையில் பார்த்தால் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி புதிய ஆளுநருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பது சட்டவிரோதமானது.
எனவே, சட்ட நடைமுறையையும், மரபையும் காக்கும் பொருட்டு, புதிய ஆளுநர் பதிவியேற்பின் போது புதுச்சேரி தலைமை நீதிபதி அவர்களே பதவி பிரமாணம் செய்து வைக்க புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய உள்துறை செயலர், மத்திய சட்டத் துறை செயலர், புதுச்சேரி தலைமைச் செயலர், சட்டத் துறை செயலர் ஆகியோருக்கு மனு அளிக்க உள்ளோம்.
Leave a Reply