புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் தூக்குப் போட்டுப் பெண் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவத்தில் பணியில் அலட்சியமாக இருந்த சிறைக் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ செயலாளர் கோ.சுகுமாரன் அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி காரைக்கால் எம்.ஜி.ஆர் நகர், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் ரவி. அவரது மனைவி அம்பிகா (வயது 36). இவர்களுக்குக் குழந்தை இல்லாததால் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர். இந்த பெண் குழந்தைக்கு 17 வயதான போது அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 43) என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், மேற்சொன்ன பெண் மைனர் பெண்ணான தன்னை தன் வளர்ப்புத் தாய் சட்டத்திற்குப் புறம்பாக திருமணம் செய்து வைத்ததாகக் கூறி காரைக்கால் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் மீது சென்ற ஆண்டு அக்டோபர் 14 அன்று வழக்குப் பதிவு செய்த காரைக்கால் நகர காவல்துறையினர் அம்பிகா, வள்ளி, குமார் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலப்பட்டு மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இவ்வழக்கில் மேற்சொன்ன அம்பிகா புதுச்சேரி நீதிமன்றத்தில் இரண்டு முறை ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், நீதிமன்றம் ஜாமீன் அளிக்க மறுத்துள்ளது. இதனால், மனமுடைந்த இப்பெண் சென்ற 6.1.2015 அன்று காலாப்பட்டு மத்திய சிறையில் தான் அடைக்கப்பட்டிருந்த பெண்கள் சிறை அறையில் இருந்த ஜன்னல் கம்பியில் சேலையால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார். இச்சம்பவம் குறித்து காலாப்பட்டு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். தற்போது இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட குற்றவியல் நடுவர் நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார்.
விசாரணைக் கைதிகளை நீண்ட காலத்திற்கு சிறையில் அடைத்து வைத்திருப்பது தவறு, அவர்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறியுள்ளது. மறைந்த நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் தனது தீர்ப்பு ஒன்றில் ‘இயந்திரகதியில் ஒருவரை நீதிமன்ற காவலில் வைப்பது குறைக்கப்பட வேண்டும், ஜாமீன் வழங்கினால் தன் மீதான குற்றச்சாட்டுகளை சரியான முறையில் ஒருவர் எதிர்க்கொள்ள முடியும்’ என்று கூறியுள்ளார்.
புதுச்சேரி மத்திய சிறை 2008ம் ஆண்டு காலாப்பட்டிற்கு மாற்றப்பட்ட பின்னால் பல்வேறு சிறை மரணங்கள் (2009 – 3, 2011 – 1, 2012 – 1, 2015 – 1) நிகழ்ந்துள்ளன. ஆனால், இச்சம்பவங்களில் சிறைத்துறையினர் ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை. இதனால், சிறை மரணங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
இச்சம்பவத்திலும்கூட மொத்தம் 7 பெண் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பெண்கள் சிறையில் உரிய கண்காணிப்பு இல்லாததால்தான் ஒரு பெண் கைதி உயிர் போயுள்ளது. இச்சம்பவத்திற்கு முழுக்க முழுக்க சிறைத்துறையினரின் அலட்சியமே காரணமாகும்.
இச்சிறை மரணத்தைத் தடுக்கத் தவறிய சம்பந்தப்பட்ட சிறைக் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற காவலில் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள சிறையில் நிகழ்ந்த மரணம் என்பதால் இறந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சிறைகளைக் கண்காணிக்க மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளடக்கிய கண்காணிப்புக் குழு ஒன்றை அமைக்க வேண்டும்.
எனவே, தாங்கள் இதில் தலையிட்டு மேற்சொன்னபடி புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கவும், இழப்பீடு வழங்கவும் உரிய உத்தரவுப் பிறப்பிக்கும்படி வேண்டுகிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply