எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவலுக்கு மதவெறி சக்திகள் எதிர்ப்புத் தெரிவித்து வருவது குறித்து 11.01.2015 அன்று மாலை 6.30 மணிக்கு, புதுச்சேரி சித்தன்குடியில் உள்ள இந்திரஜித் குப்தா படிப்பகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புதுவை மாநில கலை இலக்கிய பெருமன்ற செயலாளர் எல்லை. சிவக்குமார், முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க செயலாளர் வி.ஞானசேகர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநிலப் பொருளாளர் இளவரசன், உழவர்கரை நகர செயலாளர் தீந்தமிழன், திராவிடர் கழகம் மண்டலத் தலைவர் இர.இராசு, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சேர்ந்த எழுத்தாளர், பேராசிரியர் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ நாவல் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. இந்த நாவலில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலையும், பெண்களையும் இழிவுப்படுத்துவதாக கூறி மதவெறி இந்துத்துவ அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நாவலை தடை செய்யவும், எழுத்தாளரை கைது செய்ய வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். இதனால், பெருமாள் முருகன் தன் சொந்த ஊரைவிட்டே வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து எழுத்தாளர் பெருமாள் முருகன் கோயிலையும், பெண்களையும் இழிவுப்படுத்தி எழுதவில்லை என்றும், ஆட்சேபகரமான பகுதிகளை நீக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதன்பின்னரும் மதவெறி சக்திகள் போராட்டம் நடத்துவது இப்பிரச்சனையை தேவையில்லாமல் அரசியல் ஆக்குவதாகும். மதவெறி சக்திகள் கருத்துரிமைக்கும், பேச்சுரிமைக்கும் எதிராக செயல்படுவது கண்டனத்திற்குரியது.
இந்நிலையில், கருத்து சுதந்திரத்திற்கு எதிரான மதவெறி சக்திகளைக் கண்டித்து வரும் 19.12.2015 திங்கள், மாலை 5 மணியளவில், சாரம் ஜீவா சிலை அருகில் கண்டன தொடர் முழக்கப் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
Leave a Reply