அரவிந்தர் ஆசிரம விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சரிடம் கட்சி, சமூக இயக்கத்தினர் மனு!

புதுச்சேரியிலுள்ள கட்சி மற்றும் சமூக இயக்கங்கள் சார்பில் இன்று (5.1.2015) முதலமைச்சர் ந.ரங்கசாமி அவர்களிடம் சட்டசபையில் உள்ள அவரது அலுவலகத்தில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, தந்தைப் பெரியார் திராவிடர் கழகத் துணைத்தலைவர் ம.இளங்கோ, மதிமுக பொறுப்புக் குழு உறுப்பினர் தூ.சடகோபன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி செயலாளர் சி.ஶ்ரீதர், புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் சீ.சு.சாமிநாதன், தமிழர் களம் செயலாளர் கோ.அழகர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை தலைவர் ஆ.பாவாடைராயன், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கத் த;லைவர் பெ.சந்திரசேகரன், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன் உள்ளிட்டோர் சந்தித்து மனு அளித்தோம்.

மனுவில் கூறியிருப்பவதாவது:

அரவிந்தர் ஆசிரமத்தை விட்டு வெளியேற்றப்பட்ட மூன்று சகோதரிகள் மற்றும் அவர்களது தந்தையாரை ஆசிரமத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரம சகோதரிகளை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக பெங்களூர் அழைத்துச் சென்று உளவியல் சிகிச்சை அளிக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். அரவிந்தர் ஆசிரமத்தைக் கையகப்படுத்தி, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை தனி அதிகாரியாக நியமித்து நிர்வாகத்தை நடத்த வேண்டும். ஆசிரமத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள், மர்ம சாவுகள், நில அபகரிப்புகள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஆசிரம சகோதரிகள், அவர்களது தந்தையாருக்கு உரிய பாதுகாப்பு அளித்திடவும், அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும் அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சகோதரிக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக் கொண்ட முதலமைச்சர் இதுகுறித்து தலைமைச் செயலரிடம் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*