அரவிந்தர் ஆசிரமப் பிரச்சனையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க நேற்று (3.1.2015, சனி), மாலை 6 மணிக்கு, பாரதி பூங்காவில் கட்சி, அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்க்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 7.1.2015, புதனன்று, காலை 10 மணிக்கு, அரவிந்தர் ஆசிரம முற்றுகைப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இக்கூட்டத்திகு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். கூட்டத்தில் இரா.அழகிரி (தலைவர், தமிழர் தேசிய இயக்கம்), ம.இளங்கோ (துணைத்தலைவர், தந்தைப் பெரியார் திராவிடர் கழகம்), சீ.சு.சாமிநாதன் (தலைவர், புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு), தூ.சடகோபன் (பொறுப்புக்குழு உறுப்பினர், மறுமலர்ச்சி திமுக), இரா.மங்கையர்செல்வன் (அமைப்பாளர், மீனவர் விடுதலை வேங்கைகள்), கோ.அழகர் (செயலாளர், தமிழர் களம்), தேவா (பொறுப்பாளர், நாம் தமிழர் கட்சி), பெ.சந்திரசேகரன் (தலைவர், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம்), ஆ.பாவடைராயன் (தலைவர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை), புரட்சிவேந்தன் (தலைவர், லோக் ஜனசக்தி கட்சி), ராஜா (பொறுப்பாளர், மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம்), பெ.ரகுபதி (தலைவர், ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு), வை. பாலா (எ) பாலசுப்பிரமணியன் (தலைவர், மாணவர் பெற்றொர் நலச் சங்கம்), மு.நாராயணசாமி (தலைவர், மக்கள் மன்றம்), பா.சரவணன் (பொதுச்செயலாளர், புதுச்சேரி மக்கள் விழிப்புணர்ச்சி இயக்கம்) உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மத்திய, மாநில அரசுகளே!
1. அரவிந்தர் ஆசிரமத்தை விட்டு வெளியேற்றப்பட்ட மூன்று சகோதரிகளையும், அவர்களது தந்தையாரையும் ஆசிரமத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. ஆசிரம சகோதரிகளை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக பெங்களூர் அழைத்துச் சென்று உளவியல் சிகிச்சை அளிக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்.
3. அரவிந்தர் ஆசிரமத்தைக் கையகப்படுத்தி, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை தனி அதிகாரியாக நியமித்து நிர்வாகத்தை நடத்த வேண்டும்.
4. ஆசிரமத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள், மர்ம சாவுகள், நில அபகரிப்புகள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
5. ஆசிரம சகோதரிகள் மற்றும் அவர்களது தந்தையாருக்கு உரிய பாதுகாப்பு அளித்திடவும், அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சகோதரிக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.
7. இக்கோரிக்கைகளை முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்துவது.
8. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 7.1.2015, புதனன்று, காலை 10 மணிக்கு, தலைமை அஞ்சலகம் எதிரில் ஒன்றுகூடி, அரவிந்தர் ஆசிரமத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவது.
இன்று (4.1.2015) காலை கட்சி மற்றும் சமூக இயக்கத் தலைவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சகோதரிகளையும், அவர்களது தந்தையையும் நேரில் சந்தித்து அறுதல் கூறினர்.
Leave a Reply