புதுச்சேரியில் நடந்த சென்டாக் சான்றிதழ் மோசடி குறித்து சி.ஐ.டி விசாரணை ஏற்புடையது அல்ல என்பதால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
சென்டாக் மூலம் நடைபெற்ற மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்நுட்ப உயர்கல்வி சேர்க்கையில் போலி சான்றிதழ்கள் கொடுத்துச் சேர்ந்தது தொடர்பாக 6 மாணவர்கள் நீக்கப்பட்டுள்ளனர், 6 வருவாய்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தன்வந்தரி நகர் காவல்நிலையத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஒருவர் கொடுத்த புகார் சட்டப்படி செல்லாது என்பது தெரிந்தும் இவ்வழக்கைப் போலீசார் பதிவு செய்துள்ளனர். தங்கள் மீதான கிரிமினல் நடவடிக்கையில் இருந்து தப்பித்துக் கொள்ளவே குற்றமிழைத்த வருவாய் துறை அதிகாரிகள் இவ்வாறு செய்துள்ளனர்.
சென்டாக் சான்றிதழ் மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள வேண்டமென்ற கோரிக்கை பொதுமக்களிடம் வலுப்பெற்று வரும் நிலையில், புதுச்சேரி அரசு தற்போது சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், நேற்றைய தினம் குற்றமிழைத்த 6 மாணவர்களின் பெற்றோர்கள், 6 வருவாய்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிச் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்ட வழக்கில் சி.ஐ.டி. போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது இதுவரையிலும் வழக்குப் பதிவு செய்யாதது சி.ஐ.டி. போலீசாரின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது.
மேலும் இந்த மோசடியில் அரசு அதிகாரத்தில் உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மிக நெருக்கமானவர்களும் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சி.ஐ.டி. போலீசார் இவ்வழக்கை விசாரிப்பது முறையானது அல்ல.
சென்டாக் சான்றிதழ் மோசடி வெளியானது முதல் இப்பிரச்சனையை மூடிமறைக்கவே அரசு முயற்சித்து வருகிறது. எனவே, பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் கோரி வருவது போல், சி.பி.ஐ விசாரணைக்கு உடனே உத்தரவிட வேண்டும் என புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
Leave a Reply