இலங்கையில் தமிழக மீனவர்கள் 5 பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதின் பின்னணியில் உள்ள ராஜபக்சேவின் இனவெறி அரசியலை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
கடந்த 2011ல் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சி மடத்தைச் சேர்ந்த எமர்சன், லாங்லெட், பிரசாத், அகஸ்டஸ், வில்சன் ஆகிய 5 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். பிறகு இவர்கள் மீது போதைப் பொருள் கடத்தியதாக இலங்கைக் காவல்துறை பொய் வழக்குப் பதிவு செய்தது,
அப்போது இதனை எதிர்த்து தமிழக மீனவர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து மத்திய அரசும், தமிழக அரசும் தனித்தனியே புலன்விசாரணை மேற்கொண்டு 5 மீனவர்களும் நிரபராதிகள் என்ற முடிவுக்கு வந்தது. இதன் அடிப்படையில் இந்திய அரசு உடனடியாக மீனவர்களை விடுவிக்க வேண்டுமென இலங்கை அரசிடம் கோரியது.
ஆனால், இதற்கு செவிசாய்க்காமல் ராஜபக்சே இன்றைக்கு மீனவர்களுக்குத் தூக்குத் தண்டனைக் கிடைக்க வழிவகுத்துள்ளார். வரும் ஜனவரி மாதம் இலங்கையில் முன்கூட்டியே அதிபர் தேர்தல் வரவுள்ள நிலையில் இத்தீர்ப்பு வந்துள்ளது. தமிழர்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டதை வைத்துக் கொண்டு மீண்டும் ஆட்சிக்கு வர ராஜபக்சே முடிவு செய்துள்ளார். ராஜபக்சே தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான இனவெறி அரசியலை அரங்கேற்றி வருவது கண்டனத்திற்குரியது.
உலகம் முழுவதும் மரண தண்டனைக்கு எதிரானப் போராட்டம் நடந்து வரும் வேளையில் 5 அப்பாவி மீனவர்களுக்கு அரசியல் காரணங்களுக்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.
மத்திய அரசும் இனியும் பொறுத்துக் கொண்டிருக்காமல், தனது ராஜ்ய உறவைப் பயன்படுத்தி 5 மீனவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற்று, அவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Leave a Reply