மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (04.12.2014) விடுத்துள்ள அறிக்கை:
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலியும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்கலையும் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
எளிய மனிதர்களுக்கானது நீதிமன்றம் என்பதைத் தனது தீர்ப்புகள் மூலம் உணர்த்திய நீதிபதி வி.ஆர்.கிருஷ்னய்யர் நவம்பர் 15 அன்று, தனது 100வது பிறந்த நாளை கொச்சியில் கொண்டாடினார். மனித உரிமைக்காக தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்து செயல்பட்டவர் இன்று நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார்.
நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் வழக்கறிஞர், சட்டமன்ற உறுப்பினர், கேரள மாநில அமைச்சர், உயர்நீதிமன்ற நீதிபதி, மத்திய சட்டக்கமிஷன் உறுப்பினர், உச்சநீதிமன்ற நீதிபதி என பல பதவிகள் வகித்து சிறப்பாகப் பணியாற்றியவர்.
உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த போது மனித உரிமைகளைக் காக்கும் வகையில் ஏராளமான தீர்ப்புகளை வழங்கியவர். இவரது தீர்ப்புகள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமுள்ள நீதிபதிகளுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது பெருமைக்குரியது.
மகாத்மா காந்தியைப் பின்பற்றி மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டுமென்று தீவிரமாக செயலாற்றியவர். இந்தியா முழுவதும் மனித உரிமைகள் மீறப்படும் இடங்களுக்குச் நேரடியாக சென்று ஆய்வு செய்து அறிக்கைகள் அளித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிக் கிடைக்கப் பாடுபட்டவர். குஜராத்தில் சிறுபான்மையினர், காவிரி பிரச்சனையில் கர்நாடக தமிழர்கள் தாக்கப்பட்ட சமயத்தில் நேரிடையாக அப்பகுதிகளுக்குச் சென்று விசாரித்து அறிக்கை அளித்தவர்.
ஆங்கிலேயர்களே வியக்கும் அளவுக்கு ஆங்கிலப் புலமைப் பெற்றவர். உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் காலம் வரையில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தவர். சட்டம், நீதி, சமூக நீதி, மனித உரிமை, அரசியல் சார்ந்து ஆங்கிலத்தில் நிறைய கட்டுரைகள் எழுதியவர்.
ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளுக்கு கொச்சி சென்று அவரை சந்தித்து வாழ்த்துப் பெற்று வரும் நான், இம்முறை தவிர்க்க முடியாத வேலைக் காரணமாக அவரை சந்திக்க முடியாமல் போனது. இனி எக்காலத்திலும் அவரைச் சந்திக்க முடியாமலேயே போய்விட்டது.
Leave a Reply