புதுச்சேரியிலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்களின் தலைவர்கள் இன்று (23.12.2014) மதியம் 3.00 மணியளவில், முதலமைச்சர் ந.ரங்கசாமி அவர்களை சட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன், மறுமலர்ச்சி திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் தூ.சடகோபன், தந்தைப் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் வீரமோகன், புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் சீ.சு.சாமிநாதன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமைப்பாளர் ஶ்ரீதர், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் சமது, திராவிடர் கழகப் பொறுப்பாளர் இராசு, புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை தலைவர் ஆ.பாவாடைராயன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி அமைப்பாளர் அஷ்ரப், தலித் சேனா பொறுப்பாளர் சுந்தர், புதுச்சேரி மக்கள் நல்வாழ்வு இயக்கத் தலைவர் கெ.இராஜா, மக்கள் மன்ற தலைவர் மு.நாராயணசாமி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது:
பீகாரைச் சேர்ந்த 5 சகோதரிகள் அரவிந்தர் ஆசிரமத்தின் நிர்வாகத்தை எதிர்த்தும், கடந்த 12 ஆண்டுக் காலமாக தங்கள் மீதான பாலியல் கொடுமைக்கு நீதிக் கேட்டுப் போராடியும், நீதிக் கிடைக்காத சூழலில் சென்ற 18.12.2014 அன்று கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் அவர்களது தாயார் சாந்தி தேவி, சகோதரிகள் அருணாஶ்ரீ, ராஜ்யஶ்ரீ ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். எஞ்சிய அவர்களது தந்தையார் பிரசாத், சகோதரிகள் ஜெயஶ்ரீ, ஹேமலதா ஆகியோர் தற்போது அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தற்கொலைக்கு முயன்ற போது 5 சகோதரிகளில் ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு, அவர் அளித்த புகாரின் பேரில், நேற்றைய தினம் காவல்துறையினர் இருவரைக் கைது செய்துள்ளனர். இந்த சம்பவங்கள் புதுச்சேரியில் ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இது இந்தியா முழுவதும் மட்டுமல்ல உலக அளவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரமத்தில் பல்வேறு பாலியல் வன்கொடுமைகள், மர்ம சாவுகள், நில அபகரிப்புகள் நடப்பது உள்ளிட்ட பல புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. இதில் பல சம்பவங்கள் வெளியே தெரியாமல் மூடி மறைக்கப்பட்டுள்ளன. வெளியே தெரிந்த ஒரு சில சம்பவங்களில்கூட முறையான விசாரணை நடத்தப்படவில்லை.
இந்நிலையில், கீழ்க்காணும் கோரிக்கைளைத் தங்கள் முன் வைக்கின்றோம்:
புதுச்சேரி அரசு உடனே அரவிந்தர் ஆசிரமத்தைக் கையகப்படுத்தி, ஒரு நேர்மையான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை தனி அதிகாரியாக நியமித்து நிர்வாகத்தைச் செயல்படுத்த வேண்டும். அதாவது ஆசிரமத்தைச் சட்ட வளையத்திற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆசிரமத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள், மர்ம சாவுகள், நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நிதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 5 சகோதரிகளுக்கு அரசும், காவல்துறையும் உரிய பாதுகாப்பு அளித்திருந்தால், அவர்கள் தற்கொலையை தடுத்து இருக்க முடியும். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி மக்களுக்குத் தெளிவுப்படுத்த வேண்டும்.
எஞ்சியுள்ள சகோதரிகள் மூவருக்கும், அவரது தந்தையாருக்கும் உரிய பாதுகாப்பு அளிப்பதோடு, அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனுவைப் பெற்றுக் கொண்ட முதலமைச்சர் ந.ரங்கசாமி அவர்கள் இதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதியளித்தார்.
Leave a Reply