அரவிந்தர் ஆசிரமத்தைக் கையகப்படுத்தி, ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்து நிர்வகிக்க நடவடிக்கை எடுக்காத அரசுகளுக்கு கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (02.01.2015) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தைக் கையகப்படுத்தி ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்து நிர்வாகத்தை நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளின் போக்கை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

ஆசிரமத்தில் நடக்கும் அக்கிரமங்களுக்கு எதிராக 12 ஆண்டுகளாகப் போராடி நீதிக் கிடைக்காததால், ஐந்து சகோதரிகள் தங்கள் தாய், தந்தையருடன் தற்கொலைக்கு முயன்று அதில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இதனைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் அரவிந்தர் ஆசிரமத்தைக் கையகப்படுத்தி, அங்கு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்து நிர்வாகத்தை நடத்த வேண்டும், அங்கு நடக்கும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசார்ணை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்துப் போராடி வருகின்றனர். மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த முழு அடைப்புப் போராட்டத்திற்குப் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முழு ஆதரவளித்து வெற்றிப் பெற செய்தனர்.

தற்கொலைக்கு முயன்று உயிர் தப்பியவர்கள் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் உளவியல் சிகிச்சை அளிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கு அவர்கள் மறுப்புத் தெரிவித்து வருகின்றனர். அவர்களின் முடிவுக்கு மாறாக அரசும், காவல்துறையும் எவ்வித முடிவும் எடுப்பது இப்பிரச்சனையை மேலும் சிக்கலாக்கும்.

ஆசிரமத்தில் நடக்கும் பல்வேறு பாலியல் வன்கொடுமைகள், மர்ம சாவுகள், நில அபகரிப்புகள், ஊழல், முறைகேடுகள் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வந்து, சட்டத்தின் வளையத்திற்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் இதுவரையில் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இது ஆசிரமத்திற்கு ஆதரவாக மத்திய, மாநில அரசுகள் செயல்படுவதையே காட்டுகிறது.

எனவே, புதுச்சேரி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், ஆசிரமவாசிகளைக் காப்பாற்றவும் மேற்சொன்ன கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*