புதுச்சேரி பழங்குடியினரை ‘அட்டவணைப் பழங்குடியினர்’ என அங்கீகரிக்க கோரி தேசிய பழங்குடியினர் ஆணையத் தலைவரிடம் மனு!

புதுச்சேரியிலுள்ள பழங்குடியினரை மத்திய அரசு அட்டவணைப் பழங்குடியினராக அங்கீகரித்து குடியரசுத் தலைவர் ஆணைப் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேசிய பழங்குடியினர் ஆணையத் தலைவர் ராமேஷ்வர் ஓரான் அவர்களை இன்று காலை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ செயலாளர் கோ.சுகுமாரன் நேரில் சந்தித்து மனு அளித்தார்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலைப் பெற்று இந்தியாவுடன் இணைந்த 1954 ஆண்டிற்கு முன்னர் பழங்குடியினர் இங்கு வாழ்ந்து வருகின்றனர். பழங்குடியினர் தங்களை அட்டவணைப் பழங்குடியினராக மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டுமென கடந்த 32 ஆண்டுக் காலமாகப் போராடி வருகின்றனர். இப்போராட்டத்திற்கு ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும் ஆதரவளித்து வருகின்றன.

புதுச்சேரி அரசு பழங்குடியினர் குறித்து ஆய்வுச் செய்ய புதுவைப் பல்கலைக்கழக அப்போதைய மானுடவியல் துறைத் தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் நாயுடு தலைமையில் குழு அமைத்தது. இக்குழு மானுடவியல் மற்றும் இனவரைவியல் அடிப்படையில் விரிவான ஆய்வுச் செய்து அரசுக்கு அறிக்கைத் தாக்கல் செய்தது. அதில் புதுச்சேரியில் பழங்குடியின மக்கள் பூர்வக்குடி மக்கள் என்றும், இவர்கள் மத்திய அரசின் அட்டவணைப் பழங்குடியினராக அங்கீகரிக்க தகுதியானவர்கள் என்றும் கூறியிருந்தது. இதனை புதுச்சேரி அரசு அமைச்சரவை, சட்டப்பேரவை மற்றும் ஆளுநர் ஒப்புதல் பெற்று கடந்த அக்டோபர் 7, 2007-ல் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரி அரசு பழங்குடியினரை அட்டவணைப் பழங்குடியினராக அங்கீகரிக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதனிடையே, கடந்த 2010ல் புதுச்சேரி அரசு பழங்குடியின மக்களை ‘பிற்படுத்தப்பட்ட பழங்குடியினராக’ அங்கீகரித்து அம்மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 1% இடஒதுக்கீடு அளித்து வருகிறது. மத்திய அரசு பழங்குடியினருக்கு பட்ஜெட்டில் அறிவித்து செயல்படுத்தி வரும் திட்டப் பயன்கள் எதுவும் இம்மக்களுக்கு கிடைக்காது. பழங்குடியினரை அட்டவணைப் பழங்குடியினராக அங்கீகரித்தால்தான் மத்திய அரசின் திட்டப் பயன்கள் இம்மக்களுக்கு கிடைக்கும்.

பிரெஞ்சு அரசால் நடத்தப்படும் பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் பழங்குடியின மக்கள் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டது குறித்த ஆவணங்கள் உள்ளன. அட்டவணைப் பழங்குடியினராக அங்கீகரிக்க இந்த ஆவணங்கள் பெரிதும் உதவும் என்பதால் பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தை அனுகி ஆவணங்களைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை அரசு அருங்காட்சியகத்தில் 1885ல் கண்காணிப்பாளராக இருந்த எட்கர் தர்ஸ்டன் என்ற பிரிட்டீஷ் அதிகாரி தென்னிந்தியாவில் உள்ள சாதிகள் மற்றும் குலங்கள் குறித்து மானுடவியல், இனவரைவியல் அடிப்படையில் விரிவான ஆய்வுச் செய்து பிரிட்டீஷ் அரசாங்கத்திற்கு அறிக்கைத் தாக்கல் செய்தார். மேலும், 1909ல் இந்த அறிக்கைகள் அனைத்தும் ஏழுத் தொகுதிகளாக நூலாக வெளி வந்துள்ளன அதில் அன்றைக்கு அவர் விவரித்துள்ள பழங்குடியின மக்களின் தன்மைகள், பழக்க வழக்கங்கள், பண்பாட்டுக் கூறுகள் அனைத்தும் இன்றைக்கும் அம்மக்களிடையே அப்படியே உள்ளன. இவையே அம்மக்களை அட்டவணைப் பழங்குடியினராக அங்கீகரிக்க போதுமான ஆதாரங்களாக உள்ளன

மத்திய அரசு 1984-ல் புதுச்சேரியில் பழங்குடியின மக்களுக்காக ஓமியோபதி மருத்துவமனை மற்றும் ஆய்வு மையம் ஒன்றைத் தொடங்கியது. பழங்குடியின மக்களுக்கு மருத்துவம் செய்யவும், அம்மக்களுக்கு வரும் நோய்கள் பற்றிய ஆய்வு செய்யவும் இம்மையம் தொடங்கப்பட்டது. ஆனால், 1999-ல் இம்மையம் பொதுவானதாக மாற்றப்பட்டது, எனவே, இதனை மீண்டும் பழங்குடியினருக்கான மருத்துவமனையாக மாற்றி பழங்குடியினருக்கு மருத்துவ வசதி அளிக்கவும், ஆய்வு மேற்கொள்ளவும் மத்திய அரசிடம் வலியுறுத்திட வேண்டும்.

எனவே, மேற்சொன்னவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு மத்திய அரசு புதுச்சேரியிலுள்ள பழங்குடியினரை அட்டவணைப் பழங்குடியினராக அங்கரித்து, இந்திய அரசியல் சட்டப் பிரிவு 342-ன்கீழ் குடியரசுத் தலைவர் ஆணைப் பிறப்பிக்க ஆவன செய்ய வேண்டுகிறோம். இதன் மூலம் மத்திய அரசு பழங்குடியினருக்குப் பட்ஜெட்டில் அறிவித்த திட்டப் பயன்களை அம்மக்கள் அனுபவிக்க வழிவகை செய்யவும் வேண்டுகிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*