மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (07.07.2014) விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரியில் சிறைக் கைதி போலீசாரால் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
கிருமாம்பாக்கத்தில் ஓட்டல் மேலாளரைக் கடத்திப் பணம் பறித்த வழக்கில் மூர்த்திக்குப்பம் ஶ்ரீராம் நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கார்த்திபன் (வயது 20) என்பவரை சென்ற ஜூன் 26 அன்று போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் அவரை அன்று இரவு முழுவதும் கிருமாம்பாக்கம் காவல்நிலையத்தில் போலீசார் அடித்து உதைத்து துன்புறுத்தி உள்ளனர். இத்தாக்குதலில் உடல் முழுவதும் ரத்தக் காயங்கள் ஏற்பட்டு இருந்த கார்த்திபனை ஜூன் 27ம் தேதியன்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாலை சிறையில் கார்த்திபனின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு உடல் முழுதும் ரத்தக் கசிவு ஏற்பட்டு, சிறுநீரகம் பாதிக்கப்பட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் உயர் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கைதி கார்த்திபனை தாக்கிய கிருமாம்பாக்கம் போலீசார் யாரென கண்டறிந்து அனைவர் மீதும் உரிய சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். குற்றமிழைத்தப் போலீசார் அனைவரையும் உடனே பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
உடலில் ரத்தக் காயங்களுடன் போலீசார் நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்திய போது குற்றம்சாட்டப்பட்ட கார்த்திபனின் உடல்நிலைப் பற்றி நீதிபதி கவனிக்காததும், அதுகுறித்து போலீசாரிடம் கேள்வி எழுப்பாததும் கவலை அளிப்பதாக உள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தும் போது இயந்திரம் போல் செயல்படாமல் திர விசாரித்து ரிமாண்ட் செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகள் வழங்கியுள்ளது.
மேலும், ரத்தக் காயங்களுடன் இருந்த ஒருவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்காமல் சிறையில் அனுமதித்தது ஏன் என்பது குறித்து சிறைத்துறை நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும். ஜூன் 27ம் தேதியன்று சிறைக்குள் அனுமதிக்கப்பட்டவருக்கு உரிய சிகிச்சை அளிக்கத் தவறிய சிறைத்துறை நிர்வாகம் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இச்சம்பவத்தில் கைதி கார்த்திபன் பாதிக்கப்பட்டதற்கு காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறை ஆகியவை பொறுப்பு என்பதால் புதுச்சேரி அரசு இதுகுறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்ட கைதியின் மருத்துவச் செலவு முழுவதையும் ஏற்பதோடு, உரிய நிவாரணம் உடனே வழங்க வேண்டும் என புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
Leave a Reply