மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (04.07.2014) விடுத்துள்ள அறிக்கை:
புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியின் சட்டவிரோத நடவடிக்கைகள், முறைகேடுகள் குறித்து பதிவாளர் ராஜீவ் யதுவன்ஷி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள அறிக்கைகளின் மீது மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக சந்திரா கிருஷ்ணமூர்த்தி 2013ல் பதவியேற்றது முதல் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைளிலும், முறைகேடுகளிலும் ஈடுபட்டு வருகிறார் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இக்குற்றச்சாட்டுக்கள் குறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் ராஜீவ் யதுவன்ஷி விசாரித்து ஆதாரங்களுடன் எட்டுக்கும் மேற்பட்ட அறிக்கைகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு முறைப்படி அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில், பதிவாளர் ராஜிவ் யதுவன்ஷியை மாற்றி மீண்டும் டில்லிக்கு அனுப்பி வைக்க துணைவேந்தர் நடவடிக்கை மேற்கொண்டார். சென்ற ஜூன் 25 அன்று துணைவேந்தர் தனக்கு வேண்டப்பட்டவர்களைக் கொண்டு அவசர நிர்வாகக் கவுன்சில் கூட்டம் நடத்தி பதிவாளர் ராஜீவ் யதுவன்ஷியை மத்திய அரசுப் பணிக்குத் திருப்பி அனுப்ப முடிவு செய்தார். மேலும், பல்கலைக்கழகப் பிரெஞ்சுத் துறையின் புலத்தலைவர் பன்னீர்செல்வம் என்பவரை பொறுப்புப் பதிவாளாராக நியமித்தார்.
அவசர கோலத்தில், பல்கலைக்கழகச் சட்டப்படி உரிய கால அவகாசம் அளிக்காமல் கூட்டப்பட்ட நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பதிவாளர் மாற்றல் முடிவுக்கு நேற்றைய முன்தினம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தடை விதித்துள்ளது. மேலும் இதுகுறித்து துணைவேந்தர் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது. ஆனால், துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் உத்தரவை மதிக்காமல் டில்லி செல்வதைத் தவிர்த்துள்ளதாக தெரிகிறது.
துணைவேந்தர் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள அறிக்கைகளைப் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட பதிவாளர் ராஜிவ் யதுவன்ஷி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உடனடியாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டு புதுவைப் பல்கலைக்கழகத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
Leave a Reply