மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 08.06.2014 ஞாயிறன்று, காலை 10 மணியளவில், ரெவேய் சொசியால் சங்கத்தில் கட்சி மற்றும் அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார்.
இக்கூட்டத்தில் வெ.பெருமாள், மாநிலச் செயலர், ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, து.சடகோபன், பொறுப்புக்குழு உறுப்பினர், மறுமலர்ச்சி திமுக, சி.எம். புரட்சிவேந்தன், தலைவர், லோக் ஜனசக்தி கட்சி, சி.எச்.பாலமோகனன், கெளரவத் தலைவர், அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம், இரா.அழகிரி, தலைவர், தமிழர் தேசிய இயக்கம், கல்வியாளர் கோ.தாமரைக்கோ, ஆ.பாவடைராயன், தலைவர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை, பா.ஆனந்து, பொதுச்செயலாளர், மக்கள் தலைவர் வ.சுப்பையா மக்கள் இயக்கம், எம்.ஏ.அஷ்ரப், அமைப்பாளர், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, ஆனந்து, தலைவர், இந்திய மாணவர் சங்கம் (SFI), சதீஷ் (எ) சாமிநாதன், புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு, பெ. பராங்குசம், தலைவர், இலக்கியப் பொழில் இலக்கிய மன்றம், அபுபக்கர், செயலாளர், இந்திய தவ்ஹீத் ஜமாத், கோ. பிரகாசு, தலைவர், தமிழர் களம், கோகுல்காந்திநாத், தலைவர், பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம், தீனதயாளன், தலைவர், பெரியார் சிந்தனையாளர் இயக்கம், போன்ஸ் இரமேஷ், தலைவர், இந்திய பூரான்கள் இயக்கம், இருதயராசு ழீல், தலைவர், பிரெஞ்சிந்திய மக்கள் முன்னணி உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1) 1985ல் தொடங்கப்பட்ட புதுவைப் பல்கலைக்கழகத்தில் 1997 முதல் அப்போது இருந்த 16 படிப்புகளில் மட்டுமே புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதன்பின்னர் தொடங்கப்பட்ட 40 படிப்புகளில் இந்த இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. எனவே, பல்கலைக்கழக நிர்வாகம் இந்தக் கல்வியாண்டு முதல் செயல்படுத்தும் வகையில் அனைத்துப் படிப்புகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கி உடனடியாக ஆணைப் பிறப்பிக்க வேண்டும்.
2) புதுவைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட போது அதற்கு நிலம் வழங்கிய சுற்றியுள்ள கிராமப் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று நிர்வாக தரப்பில் எழுத்துமூலம் அளிக்கப்பட்ட உத்தரவாதம் இன்றுவரையில் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. எனவே, பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக நிலம் கொடுத்த அனைவருக்கும் அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு உடனடியாக வழங்க வேண்டும்.
3) புதுவைப் பல்கலைக்கழகத்திற்கு சென்ற 01.02.2013 அன்று சந்திரா கிருஷ்ணமூர்த்தி துணைவேந்தராகப் பதவியேற்றது முதல் பல்வேறு ஊழல், நிர்வாக குளறுபடிகள், வேண்டியவர்களுக்குப் முக்கிய பதவி அளித்தல் என சட்ட, விதிமுறைகள் மீறி செயல்பட்டு வருகிறார். இதுகுறித்து பல்வேறு புகார்கள் மத்திய அரசுக்குப் பல்வேறு தரப்பினரால் அனுப்பப்பட்டும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்த ஊழல், முறைகேடுகள் குறித்து மத்திய அரசு உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
4) புதுவைப் பல்கலைக்கழகத்திற்கு சந்திரா கிருஷ்ணமூர்த்தி துணைவேந்தராக நியமிக்கப்பட்டதில் சட்ட, விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. குறிப்பாக சென்ற காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சியில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பரிந்துரையின் மூலம் இவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு துணைவேந்தரை நியமிக்கும் முன் தேர்வுக் குழு (Search Committee) அமைக்கப்பட்டு, அக்குழு அளிக்கும் அகர வரிசைப்படியான மூவர் பட்டியலில் ஒருவரை தேர்வுச் செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்குத்தான் உள்ளது ஆனால், சந்திரா கிருஷ்ணமூர்த்தியின் பெயரை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பரிந்துரை செய்துள்ளது சட்டத்திற்குப் புறம்பானது. இந்நிலையில், சந்திரா கிருஷ்ணமூர்த்தியை துணைவேந்தராக நியமித்தது செல்லாது என அறிவிக்கக் கோரி பல்கலைக்கழக முன்னாள் இயக்குநர் பேராசிரியர் இராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது (W.P. No. 26804 of 2013). எனவே, துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி இவ்வழக்கு முடியும் வரையில் எவ்வித கொள்கை முடிவுகளையும், முக்கிய பதவிகளை நிரப்புவதையும் நிறுத்தி வைக்க மத்திய அரசு உரிய உத்தரவுப் பிறப்பிக்க வேண்டும்.
5) சென்னையிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றிற்கு அனுமதி வழங்க அகில இந்திய தொழிற்நுட்பக் கழக (AICTE) விதிமுறைகளை மீறி பரிந்துரை செய்தது குறித்து பல்கலைக்கழகப் பேராசிரியர் அரிகரன் மீது சி.பி.ஐ. வழக்குத் தொடுத்துள்ளது. இவ்வழக்கில் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்ய பல்கலைக்கழக நிர்வாகத்திடம் சி.பி.ஐ. அனுமதி (Sanction for Prosecution) கேட்டும், இதுவரையில் அனுமதி அளிக்காமல் அவரை துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி சட்டத்தின் பிடியிலிருந்துக் காப்பாற்றி வருகிறார். மேலும், பேராசிரியர் அரிகரனை ஊக்கப்படுத்தும் வகையில் அவருக்கு 100க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு அங்காரம் அளிக்கும் முக்கிய பதவியான கல்லூரி வளர்ச்சிக் கவன்சில் (College Development Council) டீன் பதவி அளித்தார். இப்பதவியைப் பயன்படுத்தி அரிகரன் கல்லூரி நிர்வாகங்களை மிரட்டி பல்வேறு வகையில் ஆதாயம் அடைந்துள்ளார் என்றும், அதில் துணைவேந்தருக்கு முழுப் பங்குண்டு எனவும் பல்கலைக்கழகத்தில் பரவலாகப் பேச்சு அடிபடுகிறது. மேலும் பேராசிரியர் அரிகரனை 30க்கும் மேற்பட்ட முக்கிய குழுக்களில் உறுப்பினராக நியமித்துள்ளார். இவ்வாறு ஊழலுக்கு மிக வெளிப்படையாக துணைப்போகும் துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியின் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.
6) பல்கலைக்கழகப் பாதுகாப்பைத் தனியாரிடம் அளிக்க அமைக்கப்பட்ட ஒப்பந்தம் கோரும் குழுவிற்கு (Tender Committee) துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி பேராசிரியர் அரிகரனை தலைவராக நியமித்தார். இக்குழு சட்ட, விதிமுறைப்படியும், வெளிப்படையாகவும் செயல்படாமல் வேண்டிய நிறுவனம் ஒன்றிற்குப் பல்கலைக்கழகப் பாதுகாப்புப் பொறுப்பை அளித்தது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அந்நிறுவனத்திற்குப் பாதுகாப்புப் பொறுப்பை அளித்ததை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு விளம்பரம் அளித்தது, இன்ன பிற செலவுகள் என ரூ. 10 லட்சம் வரையில் இழப்பு ஏற்பட்டது. மேலும், இந்த ஒப்பந்தம் கோரும் குழுவிலிருந்து அதன் உறுப்பினராக இருந்த காவல் கண்காணிப்பாளர் பழனிவேலு இவ்வாறான சட்ட, விதிமீறலுக்கு வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்து விலகியுள்ளார். இதனால், அவர் அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு புதுச்சேரி அரசின் காவல்துறைக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், அப்பதவி நிரப்பாமல் விட்டதால் தற்போது அப்பதவி காலாவதியாகி உள்ளது. மேலும், தற்போது அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் ஆய்வாளர் குருமூர்த்தியும் அப்பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். இதனால், பல்கலைக்கழகப் பாதுகாப்புக் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் புதுச்சேரி அரசை அனுகி காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் ஆகியோரை உடனடியாக பணியில் நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த ஊழல், முறைகேடு குறித்து மத்திய அரசு உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
7) சென்ற 06.04.2014 அன்று பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் முதலாண்டு பயிலும் மாணவன் இராதாகிருஷ்ணனை மகளிர் விடுதிக்குள் நுழைந்ததாகப் பொய்யாக குற்றம்சாட்டி மேற்சொன்ன பேராசிரியர் அரிகரன், பூஷன் சுதாகர், சாம் சதீஷ், குணசேகரன் ஆகியோர் சட்டவிரோதமாக 27 மணிநேரத்திற்கும் மேலாக அடைத்து வைத்து அடித்து உதைத்துத் துன்புறுத்தி உள்ளனர். மகளிர் விடுதிக்குள் மர்ம மனிதன் நுழைந்ததாக சொல்லப்படும் நேரத்தில் மாணவன் இராதாகிருஷ்ணன் பல்கலைக்கழக நூலகத்தில் இருந்தது அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது. இதுகுறித்து மாணவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேற்சொன்ன நால்வரின் மீதும் காலாப்பட்டு காவல்நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து விசாரிக்கப் பல்கலைக்கழக நிர்வாகம் ஓய்வுப்பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி நரசிம்மன் தலைமையில் விசாரணைக் குழு ஒன்றை அமைத்தது. இக்குழு முறையாகவும், முழுமையாகவும் விசாரிக்காமல், அவசரம் அவசரமாக விசாரணைச் செய்து குற்றமிழைத்தவர்களைத் தண்டனையிலிருந்து காப்பாற்றும் நோக்கில் அறிக்கை அளித்துள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் வரும் 10.06.2014 அன்று நடைபெறும் பல்கலைக்கழக நிர்வாகக் கவுன்சில் கூட்டத்தில் குற்றமிழைத்தவர்களைக் காப்பாற்ற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, இச்சம்பவம் குறித்து விளக்கம் கேட்டும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கைத் தாக்கல் செய்ய தேசிய மனித உரிமைகள் ஆணையம் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளது. எனவே, பல்கலைக்கழக நிர்வாகம் மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து ஓய்வுப்பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் புதிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். குற்றமிழைத்தப் பேராசிரியர் அரிகரன் உள்ளிட்ட நால்வரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
8) மாணவன் இராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து காலாப்பட்டு காவல்நிலையத்தில் பதிவுச் செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையினர் இதுவரையில் புலன் விசாரணையைத் தொடங்கவில்லை. குறைந்தபட்சம் பாதிக்கப்பட்ட மாணவனிடம்கூட விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெறவில்லை. காவல்துறையினரின் இந்த மெத்தனப் போக்குப் பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுக்கிறது. எனவே, மாணவன் தாக்கப்பட்ட வழக்கின் புலன் விசாரணையை வேகப்படுத்தி விரைந்துக் குற்ற அறிக்கைத் தாக்கல் செய்ய புதுச்சேரி அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
9) தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டிற்கு ஆளாகியும், சி.பி.ஐ. ஊழல் வழக்கு, மாணவன் தாக்கப்பட்ட வழக்கு என பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள போதும் மேற்சொன்ன பேராசிரியர் அரிகரனுக்குப் பல்வேறு பதவிகளை சட்ட, விதிமுறைகளை மீறி துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி அளித்து வருகிறார். குறிப்பாக அண்மையில் அரிகரனை திட்ட வாரிய (Planning Board) உறுப்பினராகவும், ‘நெட்’ தேர்வுக் குழுப் பொறுப்பாளராகவும் நியமித்துள்ளார். இதுகுறித்து மத்திய அரசு உரிய விசாரணைக்கு உத்தரவிட்டு பேராசிரியர் அரிகரனை அப்பதவிகளில் இருந்தும், பல்வேறு குழுக்களின் உறுப்பினர் தகுதியில் இருந்தும் நீக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10) பல்கலைக்கழகத்தில் தனியே சட்டப் பிரிவு ஒன்று இயங்கிக் கொண்டிருக்கும் போது துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி தனக்கு வேண்டப்பட்ட முன்னாள் நீதிபதி ராமபத்திரன் என்பவரை சட்ட ஆலோசகராக நியமித்துள்ளது தவறான முன்னுதாராணம் ஆகும். எனவே, பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக அவரை அப்பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும்.
11) சந்திரா கிருஷ்ணமூர்த்தி துணைவேந்தராகப் பொறுப்பேற்ற கடந்த இரண்டு ஆண்டுக் காலமாக பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக் குறைந்துக் கொண்டே வருகிறது. சென்ற ஆண்டு 46 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு அது 32 ஆயிரமாக குறைந்துள்ளது. இதற்கு 2012–13 கல்வி ஆண்டில் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் பெருமளவில் உயர்த்தப்பட்டதே காரணமாகும். எனவே, உயர்த்தப்பட்ட கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களைப் பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
12) பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மீது நடக்கும் பாலியல் சீண்டல்களைத் தடுக்கப் பல்கலைக்கழக நிர்வாகம் உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சில மாதங்களுக்கு முன்னர் மாணவிகள் மீது நடந்த பாலியல் சீண்டல் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிகள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
13) பல்கலைக்கழகத்தில் இந்தக் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு இணையதளம் (Online) மூலம் செய்ததில் கிராமப்புற மாணவர்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மாணவர் சேர்கைக்கான நுழைவுத் தேர்வை இணையதளம் மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் வைக்க பல்கலைக்கழக நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
14) இக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளின் தலைவர்களை உறுப்பினராகக் கொண்டு ‘புதுவைப் பல்கலைக்கழகப் பாதுகாப்புக் குழு (Pondicherry University Protection Committee – PUPC)’ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவிற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்.
Leave a Reply