மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (13.05.2014) விடுத்துள்ள அறிக்கை:
துணைநிலை ஆளுநரின் மருமகளை அமைப்பாளராக கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள லலித் கலா அகாடமியின் குழுவை கலைத்துவிட்டு புதுச்சேரி ஓவியக் கலைஞர்கள் அடங்கிய புதிய குழுவை அமைக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
ஓவியக் கலைஞர்களின் நலனுக்காக தில்லியை தலைமையிடமாகக் கொண்டு அகில இந்திய அளவில் செயல்பட்டு வரும் லலித் கலா அகாடமியின் புதுச்சேரி அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அமைப்பாளர், உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து கலைப் பண்பாட்டுத்துறை இயக்குநரை நேரில் சந்தித்து கேட்ட போது இக்குழு உருவாக்கப்பட்டதிலும், உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதிலும் கலைப் பண்பாட்டுத்துறைக்கு எவ்வித பங்கும் இல்லை என்று கூறினார்.
இக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் இல்லை என்பதும், ஓவியத்துறைக்கு எவ்வகையிலும் தொடர்பில்லாதவர்கள் என்பதும் தெரிகிறது. இக்குழுவில் புதுச்சேரியை சார்ந்த ஓவியக் கலைஞர்கள் நியமிக்கப்பட வேண்டுமென்ற விதி மீறப்பட்டுள்ளது.
சென்ற 1999ம் ஆண்டு இதுபோன்று லலித் கலா மற்றும் சங்கீத நாடக அகாடமி உருவாக்கப்பட்டு, அதன் அதிகாரியாக அப்போது பாரதியார் பல்கலைக்கூடத்தில் முதல்வராக இருந்த அரிகரன் நியமிக்கப்பட்டார். அக்குழு உருவாக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரையில் அதன் செயல்பாடுகள் என்ன என்பது குறித்து தெரியவில்லை.
தற்போதைய குழுவின் அமைப்பாளராக துணைநிலை ஆளுநரின் மருமகள் மீரா கட்டாரியா நியமிக்கப்பட்டுள்ளார். இது ஆளுநர் மளிகையின் கண்ணியத்திற்கு இழுக்கு எற்படுத்துவதுதோடு, ‘அச்சமின்றி செயல்படவும், யாருக்கும் சாதகமாக செயல்பட மாட்டேன்’ எனவும் ஆளுநர் ஏற்றுக் கொண்ட பதவிப் பிரமாணத்தை மீறும் செயலாகும். மேலும், ஆளுநர் தன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது அரசியல் சட்டத்திற்கும் எதிரானதாகும்.
எனவே, புதிதாக உருவாக்கப்பட்ட லலித் கலா அகாடமியின் குழுவை உடனே கலைத்து விட்டு, புதுச்சேரியைச் சேர்ந்த ஓவியக் கலைஞர்களைக் கொண்ட புதிய குழு ஒன்றை அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்குழுவின் நோக்கம் மற்றும் விதிமுறைகள் தெளிவாக உருவாக்கப்பட்டு மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும். புதுச்சேரி அரசின் மூலம் தகுதியானவர்களிடம் விண்ணப்பம் பெறப்பட்டு அதன் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் தேர்வுச் செய்யப்பட வேண்டும். எவ்வித சம்பளமோ, மதிப்பூதியமோ எதிர்ப்பார்க்காத சேவை நோக்கம் கொண்ட ஓவியக் கலைஞர்களைப் பொறுப்பாளர்களாகவும், உறுப்பினர்களாகவும் நியமிக்க வேண்டும்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர், மத்திய உள்துறைச் செயலர், இணைச்செயலர், மத்திய கலாச்சார துறை செயலர், இணைச்செயலர், லலித் கலா அகாடமியின் தேசிய அமைப்பாளர், செயலாளர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதல்வர், தலைமைச் செயலர், கலைப் பண்பாட்டுத்துறை செயலர், இயக்குநர் ஆகியோருக்கு விரிவான மனு அனுப்பியுள்ளோம்.
Leave a Reply