மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (06.05.2014) விடுத்துள்ள அறிக்கை:
இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணைக் கோரி உலக அளவில் போராடி வரும் தமிழ் அமைப்புகளையும், அதன் ஆதரவாளர்களையும் இந்திய அரசு தடை செய்துள்ளதைத் திரும்பப் பெற வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு” சார்பில் வலியுறுத்துகிறோம்.
தீவிரவாதத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி 16 தமிழ் அமைப்புகள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் 424 பேர் மீது தடை விதிக்க வேண்டுமென உலக நாடுகளுக்கு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனை ஏற்று இந்திய அரசு இந்த அமைப்புகளுக்கும், அதன் ஆதரவாளர்களுக்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இலங்கையின் கோரிக்கையை அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகள் முற்றிலும் நிராகரித்து விட்ட நிலையில், இந்திய அரசு அதனை ஏற்று தடை செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
தற்போது தடை செய்யப்பட்ட தமிழ் அமைப்புகள் ஜெனிவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக சர்வதேவ போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்திப் போராடியவை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நடந்த இறுதிப் போருக்குப் பின்னால் ஈழத்தமிழர்கள் எவ்வித அதிகாரம் இல்லாமலும், அடிப்படை வசதிகள் இன்றியும் சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இலங்கை நிகழ்த்திய போர்க்குற்றம் குறித்து ராஜபக்சே உள்ளிட்டோர் மீது இதுவரையில் ஒரு சின்ன நடவடிக்கைக்கூட எடுக்கப்படவில்லை. இந்நிலையில், இந்தியா ஈழத்தமிழர்கள் மீதான போர்க்குற்றம் குறித்தும், அவர்களின் மறுவாழ்விற்கும் உருப்படியாக எதையும் செய்யாமல் இத்தடை விதித்துள்ளது ஈழத்தமிழர்களுக்கு தொடர்ந்து அநீதி இழைப்பதாகும்.
எனவே, உலக அளவில் ஈழத்தமிழர்களுக்காகப் போராடி வரும் தமிழ் அமைப்புகளுக்கும், அதன் ஆதரவாளர்களுக்கும் தடை விதித்துள்ளதை இந்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
Leave a Reply