மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (28.04.2014) விடுத்துள்ள அறிக்கை:
புதுவைப் பல்கலைக்கழகத்தில் மாணவன் தாக்கிச் சித்திரவதைச் செய்யப்பட்ட சம்பவம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணைக் குழு அதிகாரிகள் குற்றமிழைத்தவர்களைக் காப்பாற்றும் நோக்கில் செயல்படுவதால், உயர்நீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
சென்ற ஏப்ரல் 6 அன்று, புதுவைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் முதலாண்டுப் பயிலும் மாணவன் இராதாகிருஷ்ணனை அங்குப் பணியாற்றும் பேராசிரியர் அரிகரன் உள்ளிட்ட நான்கு பேர் சட்டவிரோதமாக அடைத்து வைத்து தாக்கிச் சித்திரவதைச் செய்துள்ளனர். மாணவியர் விடுதிக்குள் மர்ம மனிதன் நுழைந்த சம்பவத்தை ஒத்துக்கொள்ள சொல்லி துன்புறுத்தியுள்ளனர். இதுகுறித்து மாணவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் அரிகரன் உள்ளிட்டோர் மீது காலாப்பட்டு காவல்நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவனுக்கு நீதிக் கேட்டு மாணவர்கள் தீவிரமாகப் போராடியதைத் தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் இச்சம்பவம் குறித்து விசாரிக்க மூவர் அடங்கிய விசாரணைக் குழு ஒன்றை அமைத்தது. பெங்களூரைச் சேர்ந்த ஓய்வுப் பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி நரசிம்மன் தலைவராகவும், புதுச்சேரி ஓய்வுப் பெற்ற மாவட்ட நீதிபதி வீரேந்திரநாத், எஸ்.பி. தமிழரசி ஆகியோர் உறுப்பினராகவும் கொண்ட குழுவை அமைத்துப் பல்கலைக்கழகப் பதிவாளர் 17.04.2014 அன்று உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.
விசாரணைக் குழு அமைக்கும் போது விசாரணைக் குழுவின் நோக்கங்களும், எல்லைகளும் (Terms and References) தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும், ஆனால், தற்போது அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவிற்கு 6ம் தேதியன்று நடந்த சம்பவங்கள் பற்றி விசாரிக்க வேண்டுமென்று பொதுவாக உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணைக் குழுவினர் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் 26ம் தேதி முதல் விசாரணையை மெற்கொண்டு வருகின்றனர். விசாரணையை தொடங்கும் முன்பு சம்பவம் பற்றி அறிந்தவர்கள் இவ்விசாரணைக் குழுவின் முன்பு ஆஜராகி வாக்குமூலம் தரலாம் என வெளியிடப்பட வேண்டிய அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால், சம்பவம் பற்றி அறிந்தவர்கள் வாக்குமூலம் அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
எஸ்.பி. தமிழரசியை விசாரணைக் குழு உறுப்பினராக நியமிக்கும் முன் அரசிடம் முறையான அனுமதி பெறாததால் அவர் விசாரணையில் கலந்துக் கொள்ள முடியவில்லை. இதனால், முழுமையான விசாரணைக் குழு அமைக்காமல் விசாரணை மெற்கொள்வது தவறானது.
பாதிக்கப்பட்ட மாணவனுக்கு போதிய அவகாசம் தராமல் 25ம் தேதி இரவு 10.30 மணிக்கு சம்மன் கொடுத்து மறுநாள் காலையில் விசாரணைக்கு வர வேண்டுமென்று கூறியுள்ளனர். இருப்பினும் விசாரணைக் குழுவின் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்த மாணவன் இராதாகிருஷ்ணனின் வாக்குமூலத்தை முழுமையாக பதிவுச் செய்யாமல், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்தால் போதுமென்று கூறியுள்ளனர். மேலும், மாணவர்களுக்குத் தேர்வு நடைபெறுவதால் மாணவர்கள் பலர் விசாரணைக் குழு முன்பு வாக்குமூலம் அளிக்க முடியாத சூழல் உள்ளது. இதுபற்றிக் கவலைப்படாமல் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களை விசாரணைக்கு வரச் சொல்லி வற்புறுத்தி வருகிறது.
பேராசிரியர் அரிகரனுக்கு ஆதரவாக பல்கலைக்கழகத் துறைத் தலைவர்கள் சிலர் விசாரணைக்குச் சென்றால் மதிப்பெண்களைக் (Internal Marks) குறைத்து விடுவோம் எனக்கூறி மாணவர்களை வெளிப்படையாக மிரட்டுவதாகவும் தெரிகிறது.
குற்றமிழைத்த அரிகரன் உள்ளிட்ட நால்வரும் பல்கலைக்கழக வளாகத்திலேயே இருந்து வருகின்றனர். இதில் அரிகரன் துணைவேந்தருக்குப் பலவகையிலும் நெருக்கமானவர் என்பதால் அவருக்கு எதிராக சாட்சியமளிக்கப் பல்கலைக்கழக மாணவர்களும், ஊழியர்களும் அச்சப்படுகின்றனர். இதனால், பல்கலைக்கழக நிர்வாகம் குற்றமிழைத்த அரிகரன் உள்ளிட்ட நால்வரையும் உடனே பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
அப்பாவி மாணவன் மீது அப்பட்டமாக நடந்த மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்கும் உயர் பதவி வகித்த அதிகாரிகள் விசாரணைச் சட்ட, விதிமுறைகளுக்கு மாறாகவும், அவசர அவசரமாகவும், ரகசியமாகவும் விசாரணையை நடத்துவது குற்றமிழைத்தவர்களைக் காப்பாற்றும் நோக்கம் கொண்டது என அஞ்சுகிறோம். பல்கலைக்கழக நிர்வாகம் இவ்விசாரணையை தொடர்வது பாதிக்கப்பட்ட மாணவனுக்கு எவ்விதத்திலும் நீதிக் கிடைக்க உதவாது.
எனவே, சுயேட்சையான, சுதந்திரமான விசாரணை நடைபெற பல்கலைக்கழக நிர்வாகம் உடனே உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
Leave a Reply