செய்யாத குற்றத்தை ஏற்கச் சொல்லி மாணவனைத் தாக்கிய பல்கலைக்கழகப் பேராசிரியர் அரிகரன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (11.04.2014) விடுத்துள்ள அறிக்கை:

புதுவைப் பல்கலைக்கழக மாணவரை மகளிர் விடுதிக்குள் மர்ம நபர் அத்துமீறி நுழைந்த சம்பவத்தை ஒத்துக்கொண்டு பொய் வாக்குமூலம் அளிக்க வற்புறுத்தித் தாக்கிய பேராசிரியர்கள் அரிகரன், பூஷன் சுதாகர் உள்ளிட்டோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

சென்ற 6.4.2014 அன்று, புதுவைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் முதலாண்டு பயிலும் மாணவர் இராதாகிருஷ்ணன் என்பவரை அங்குப் பணிபுரியும் பேராசிரியர்கள் அரிகரன், பூஷன் சுதாகர் உள்ளிட்டோர் 27 மணி நேரம் தங்கள் பொறுப்பில் வைத்து கடுமையாக தாக்கிச் சித்திரவதைச் செய்துள்ளனர்.

கடந்த 3.4.2014 அன்று பல்கலைக்கழக மகளிர் விடுதியில் மர்ம நபர் ஒருவர் நுழைந்து பெண் காவலர் ஒருவரை தாக்கிய சம்பவத்தை ஒத்துக் கொண்டு பொய்யாக வாக்குமூலம் அளிக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். அம்மாணவரை லத்தியால் அடித்துக் காயப்படுத்தியதோடு, தகாத வார்த்தைகள் கூறியும், உணவுக் கொடுக்காமல் பட்டினிப் போட்டும், கழிவறைக்குச் செல்ல அனுமதிக்காமலும் துன்புறுத்தி உள்ளனர். மேலும், பல்கலைக்கழகத்திற்குள் இருக்கும் மகளிர் விடுதிகள் அனைத்திற்கும் அழைத்துச் சென்று மாணவிகள் மத்தியில் குற்றவாளி என்று கூறி அவமானப்படுத்தி உள்ளனர். இதனால், மனமுடைந்த மாணவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிகிறது. பின்னர் பாதிக்கப்பட்ட மாணவர் பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுள்ளார்.

மகளிர் விடுதிக்குள் மர்ம நபர் நுழைந்ததாக சொல்லப்படும் நேரத்தில் மாணவர் இராதாகிருஷ்ணன் பல்கலைக்கழக நூலகத்தில் இருந்துள்ளது அங்குப் பொருத்தப்பட்ட வீடியோ கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து விசாரித்த பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் அந்த வீடியோ பதிவைப் பார்த்து அம்மாணவருக்கும் மேற்சொன்ன சம்பவத்திற்கும் தொடர்பில்லை எனக் கூறியுள்ளனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் முதல் மாணவரை தாக்கிய பேராசிரியர்கள் அரிகரன், பூஷன் சுதாகர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்கலைக்கழக மாணவர்கள் துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விடுதிக்குள் நுழைந்த மர்ம நபரை கண்டுப் பிடிப்பது என்பது அங்குப் பணியில் அமர்த்தப்பட்ட பாதுகாவலர்களின் (Security) வேலையாகும். இதில் பேராசிரியர் அரிகரன் போன்றவர்கள் தேவையில்லாமல் தலையிட்டு மாணவரை தாக்கியது என்பது கிரிமினல் குற்றம் என்பதோடு அரசு ஊழியர் நடத்தை விதிகளுக்கும் முரணானது.

மேலும், பேராசிரியர் அரிகரன் சென்னையிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு விதிமுறைகளுக்கு மாறாக அங்கீகாரம் கொடுத்த சி.பி.ஐ. வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார். இவர் மீது குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்ய இதுவரையில் துணைவேந்தர் சி.பி.ஐ.க்கு அனுமதி அளிக்க மறுத்து அவரைப் பாதுகாத்து வருகிறார். மேலும், அவருக்கு துணைவேந்தர் முக்கிய பதவிகள் அளித்து ஊக்கப்படுத்துவதுதான் அவர் தொடர்ந்து நிர்வாகத்தில் அத்துமீறி தலையிடுவதற்கான காரணமாகும்.

எனவே, குற்றமிழைத்த பேராசிரியர்கள் மீது உரிய கிரிமினல் நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழகத் துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், அனைத்துக் கட்சி, அமைப்புகளை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட நேரிடும். மாணவர்களின் நியாயமானப் போராட்டத்திற்கு ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் ஆதரவுத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*