மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (08.04.2014) விடுத்துள்ள அறிக்கை:
தேர்தல் ஆணையத்தில் அனுமதிப் பெற்று நடைபெற்ற திராவிடர் விடுதலைக் கழகத்தினரின் பிரச்சாரத்தைச் சீர்குலைக்க முயற்சித்த காங்கிரசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம்.
தேர்தல் ஆணையத்தில் முறையான அனுமதிப் பெற்று திராவிடர் விடுதலைக் கழகத்தினர் அவ்வமைப்பின் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமையில் நேற்றைய தினம் வில்லியனூர் கணுவாப்பேட்டையில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்துள்ளனர். அப்போது காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரை விமர்சித்துப் பாடல் ஒலிபரப்பியுள்ளனர். அப்போது திடீரென அங்கு வந்த காங்கிரஸ்காரர்கள் பிரச்சாரத்தைச் சீர்குலைக்கும் நோக்கில் தகராறு செய்துள்ளனர்.
காங்கிரசாருக்கு இதுபோன்ற பிரச்சாரத்தில் ஆட்சேபனை இருக்குமானால் அதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கலாம். அதைவிடுத்து பிரச்சாரத்தைத் தடுக்க முயல்வது சட்டத்திற்குப் புறம்பான செயலாகும். இதுகுறித்து தேர்தல் ஆணையம் விசாரித்து அத்துமீறிய காங்கிரசார் மீது உரிய கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுவோர் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சிப்பது வழக்கமாகிவிட்டது. ஆகையால், விமர்சனங்களை சகித்துக் கொள்ளும் பக்குவம் காங்கிரசாருக்கு வர வேண்டும். அதைவிடுத்து பிரச்சாரத்தில் தகராறு செய்வது ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் செயலாகும்.
Leave a Reply