மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (27.02.2014) விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரியில் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துக் கொள்வது குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் கல்வியாளர்கள், உளவியல் நிபுணர்கள் அடங்கிய விசாரணைக் குழு அமைக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் பயிலும் முதலாண்டு மாணவி வினோதினி (வயது 19) சென்ற 24.02.2014 அன்று 5வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவுச் செய்த திருபுவனைப் போலீசார் அக்கல்லூரியின் பேராசிரியர் நால்வரைக் கைது செய்துள்ளனர்.
உயர்கல்வி நிறுவங்களில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர் பல்வேறு மன அழுத்தத்திற்கு உள்ளாகி தற்கொலை செய்துக் கொள்வது தொடர் கதையாக உள்ளது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகங்களும், அரசும் கவலைப்படுவதாக தெரிவதில்லை.
இன்றைய கல்வி முறையில் உள்ள பல்வேறு குறைபாடுகள் குறிப்பாக தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதை மட்டுமே குறிக்கோளாக கொள்ளுதல், மாணவர்களிடம் உருவக்கப்படும் போட்டி மனப்பான்மை, இளம்பருவத்தில் எதிர்கொள்ளூம் சிக்கல்கள் போன்றவை இதுபோன்ற தற்கொலைக்குக் காரணமாக அமைகிறது.
எனவே, இதுகுறித்து புதுச்சேரி அரசு உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் கல்வியாளர்கள், உளவியல் நிபுணர்கள் அடங்கிய விசாரணைக் குழு ஒன்றை அமைக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், நிகழும் தற்கொலைகள் குறித்து ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் விரைவில் கல்வியாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம் ஒன்றை நடத்த உள்ளோம்.
Leave a Reply