மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (18.02.2014) விடுத்துள்ள அறிக்கை:
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வரவேற்கிறோம்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களைத் தீர்மானிப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தைக் காரணம் காட்டி, தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இவ்வழக்கில் இருதரப்பு வாதங்கள் முடிந்து தீர்ப்புத் தள்ளி வைக்கப்பட்டது.
இவ்வழக்கில் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு மூவருக்குமான மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
சென்ற ஜனவரி 21 அன்று வீரப்பன் வழக்கில் நால்வர் உட்பட 15 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பில் கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க தேவையற்ற காலதாமதம் ஏற்பட்டால் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம் என நீதிபதிகள் கூறியிருந்தனர். இதனைப் பின்பற்றி நீதிபதிகள் இம்மூவருக்கும் தண்டனைக் குறைப்பு செய்து தீர்ப்பளித்துள்ளனர்.
இவ்வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய தலைமை நீதிபதி பி.சதாசிவம் உள்ளிட்ட நீதிபதிகளை மனதார பாராட்டுகிறோம். மேலும், இவ்வழக்கில் ஆஜராகி திறமையாக வாதிட்டு நீதிக் கிடைக்கப் பாடுபட்ட வழக்கறிஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
1998ல் பூந்தமல்லி தடா சிறப்பு நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கிய போது, புதுச்சேரியில் அகில இந்திய அளவில் இரண்டு நாள் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு நடத்தினோம். இதனைத் தொடர்ந்து அண்மைக்காலம் வரையில் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டுமென பலவகையில் போராடி உள்ளோம்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் வழங்கியுள்ள இரண்டு தீர்ப்புகளும் பொன்னேடுகளில் பொறிக்க வேண்டியவை என்பதோடு, இந்திய சட்டப் புத்தகத்திலிருந்து மரண தண்டனை ஒழிக்க நடந்துவரும் போராட்டத்திற்கு வலுசேர்ப்பவை.
இச்சூழலில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 23 ஆண்டுகளாக வேலூர் சிறையில் வாடும் அனைவரையும் விடுதலை செய்யவும், மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிக்கவும் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
Leave a Reply