மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (21.01.2014) விடுத்துள்ள அறிக்கை:
வீரப்பன் வழக்கில் நான்கு தமிழர்கள் உட்பட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 15 பேரின் மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான நீதிபதிகள் வழங்கியுள்ள தீர்ப்பை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் மனதார வரவேற்கிறோம்.
1993ம் ஆண்டு தமிழக – கர்நாடக மாநில எல்லையில் பாலாறு அருகில் நடந்த வெடிகுண்டு வழக்கு உள்ளிட்ட நான்கு வழக்குகளில் தமிழகத்தைச் சேர்ந்த 12 பெண்கள் உட்பட 124 தமிழர்கள் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு மைசூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் விசாரணையின்றி பல ஆண்டுகளாக சிறையில் வாடிக் கொண்டிருந்தனர்.
2000ம் ஆண்டு வீரப்பன் குழுவினர் கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தி வைத்துக் கொண்டு விடுத்த கோரிக்கைகளில் மைசூர் சிறையிலுள்ள தடா கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பதும் ஒன்று. இவர்களை விடுவிக்க இரு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் உச்சநீதிமன்றம் இதற்குத் தடை விதித்தது. ராஜ்குமாரை மீட்க இரு மாநில அரசுகளும் அமைத்த மீட்புக் குழுவில் இடம்பெற்றிருந்த பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி, பேராசிரியர் கல்யாணி, கோ.சுகுமாரன் ஆகிய நாங்கள் இவர்களை விடுதலை செய்ய சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தோம். அதன் அடிப்படையிலேயே வீரப்பன் குழுவினர் நடிகர் ராஜ்குமாரை விடுவித்தனர்.
இதன்பின்னர் எங்களது தொடர் நடவடிக்கையால் கர்நாடக அரசு மைசூரில் ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைத்து வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்தியது. வழக்கு விசாரணை முடிந்து 2001ம் ஆண்டு 109 தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டனர். நால்வருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஜனவரி 29, 2004ல் உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரித்து (Sou moto Proceedings) சைமன், பிளவேந்திரன், ஞானப்பிரகாசம், மீசைக்கார மாதையன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை வழங்கியது.
இந்த நால்வரும் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டுமென கோரி குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை மனுக்கள் 9 ஆண்டுகளுக்குப் பிறகு நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், கருணை மனுக்கள் மீது காலதாமதமாக முடிவு செய்ததைக் காரணம் காட்டி மரண தண்டனையை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் சென்ற பிப்ரவரி 20, 2013ல் தூக்குத் தண்டனை நிறைவேற்றத்திற்குத் தடை விதித்தது. இதேபோல், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சிறையிலுள்ள மரண தண்டனைக் கைதிகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இவ்வழக்கு விசாராணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சில் நடைபெற்றது. இதில் இன்றைய தினம் வீரப்பன் வழக்கில் நால்வர் உட்பட 15 பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்தும், ஆயுள் தண்டனையாக குறைத்தும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் அரசு தரப்பில் காலதாமதம் ஏற்படுவதைச் சுட்டிக்காட்டி நீதிபதிகள் இத்தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
இத்தீர்ப்பின் அடிப்படையில் ராஜீவ்காந்தி வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட இந்தியாவிலுள்ள அனைவரின் மரண தண்டனையையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
மரண தண்டனைக்கு எதிராக உலகம் முழுவதும் வலுவான கருத்துப் பரப்பல் நடந்து வரும் இவ்வேளையில் இத்தீர்ப்பு மரண தண்டனை ஒழிப்புக்கு வலுசேர்க்கும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இத்தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் உள்ளிட்ட மூன்று நீதிபதிகளையும் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் மனதார பாராட்டுகிறோம்.
Leave a Reply