மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (16.01.2014) விடுத்துள்ள அறிக்கை:
தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிமன்றக் குழுவிற்கு விதிமுறைப்படி உடனே தேர்தல் நடத்த முதல்வர் ரங்கசாமி தலையிட்டு ஆவன செய்யும்படி ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிமன்றக் குழுவின் பதவிக் காலம் மூன்றாண்டுகள் நிறைவுப் பெற்று சென்ற 17.10.2013 அன்று முடிவடைந்துள்ளது. பதவிக் காலம் முடிவடைந்த பின்னர் முறைப்படி தேர்தல் நடத்தி புதிய ஆட்சிமன்றக் குழு தேர்வுச் செய்யப்பட வேண்டும் என்பது சங்க விதி. ஆனால், தேர்தல் நடத்தாமல் காலாவதியான ஆட்சிமன்றக் குழுவினர் சட்ட விரோதமாக தொடர்ந்துப் பதவியில் நீடித்து வருகின்றனர்.
மேலும், சங்கத்தின் துணை விதி 13-ன்படி ஒவ்வொரு ஆண்டும் பொதுக்குழுவைக் கூட்டி வரவு செலவுக் கணக்குகளைத் தணிக்கைச் சான்று பெற்று தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு முறைகூட பொதுக்குழு கூட்டப்பட்டு வரவு செலவுக் கணக்குகள் சமர்பிக்கப்படவில்லை.
தற்போது 30க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் எழுத்து மூலம் கோரியதன் பேரில் வரும் 21ந்தேதியன்று பொதுக்குழுக் கூட்டப் போவதாக அறிவித்துள்ளனர். பொதுக்குழு நாள் அறிவிக்கப்பட்ட பின்னர் முன்தேதியிட்டு உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இது சங்கப் பதிவுச் சட்ட விதிமுறைகளுக்கு முரணானது. மேலும், தகுதி இல்லாதவர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
எனவே, தமிழ்ச் சங்கத்திற்குச் சங்கப் பதிவுச் சட்டப்படி தேர்தல் நடத்தப்பட்டு புதிய ஆட்சிமன்றக்குழு தேர்வு செய்யப்பட வேண்டும். தகுதியற்றவர்களைச் சட்டத்திற்குப் புறம்பாக உறுப்பினராக சேர்ப்பதைக் கைவிட வேண்டும்.
இந்நிலையில், தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகளைச் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி முதல்வர் ரங்கசாமிக்கு ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கடிதம் எழுதி உள்ளோம்.
Leave a Reply