புதுச்சேரியில் தலைவர்கள் சிலைகளைச் சேதப்படுத்தி அவமதிக்கும் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (03.01.2014) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரியில் தொடர்ந்து தலைவர்களின் சிலைகளைச் சேதப்படுத்தி சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி வருவோர் மீது அரசு பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரியில் பத்துக்கண்ணு தொடங்கி திருவாண்டார்கோயில், துத்திப்பட்டு என பல்வேறு இடங்களில் அம்பேத்கர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. நேற்றைய தினம் அபிஷேகப்பக்கத்தில் புதுச்சேரியின் முன்னாள் துணைநிலை ஆளுநர் சேத்திலால் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு செப்டம்பர் 1ந்தேதியன்று பத்துக்கண்ணில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்ட போது அதனைக் கண்டித்தும், குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அரசை வலியுறுத்தினோம். ஆனால், அரசும், காவல்துறையும் குற்றவாளிகளைக் கைது செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அம்பேத்கர் சிலை அவமதிப்பு தொடர்கிறது.

அம்பேத்கர் தலித் மக்களின் தலைவர் என்ற குறுகிய கண்ணோட்டத்தில் இதுபோன்ற சிலை அவமதிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. அரசியல் சட்ட அவையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று அம்பேத்கர் நடத்திய வாதங்கள் வரலாற்று சிறப்பு வாயந்தவை.

அதேபோல், மதகடிப்பட்டில் உள்ள இராமசாமி படையாட்சியார் சிலை இரண்டு முறை சேதப்படுத்தப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ளது. இராமசாமி படையாட்சியார் கைரேகைச் சட்டத்தின்கீழ் கொடுமை அனுபவித்து வந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை அதிலிருந்து விடுவிக்க போராடிய தலைவர் ஆவார்.

சமூகத்திற்கு உழைத்த தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்படுவதால் மக்களிடையே பதற்றம் உருவாகி சமூக நல்லிணக்கத்திற்குக் குந்தகம் ஏற்படுகிறது. இவ்வாறான சமுக விரோதச் செயலை வன்மையாக கண்டிக்கிறோம். சிலை அவமதிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் விரைந்து கைது செய்ய வேண்டும் என அரசையும், காவல்துறையையும் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*