மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.11.2013) விடுத்துள்ள அறிக்கை:
புதுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் மாணவர்கள் இடைநீக்கத்தைப் பல்கலைக்கழக நிர்வாகம் உடனே திரும்பப் பெற வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
புதுவைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த காவியா என்ற மாணவியை முதுநிலை மாணவர்கள் சிலர் ரேக்கிங் செய்தும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவோம் என அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் பாதிக்கப்பட்ட மாணவி உள்ளிட்டு 9 மாணவர்களை இடைநீக்கம் செய்துள்ளது. இதனை எதிர்த்து மாணவர்கள் 5 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம் நடத்தும் மாணவர்களை அழைத்துப் பேசி ஒரு தீர்வுக் காண்பதற்குப் பதிலாக பல்கலைக்கழக நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது. தேர்வு துவங்க உள்ள நிலையில் போராட்டம் தொடருமானால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். ஒரு தாய் போல் இருந்து பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி மாணவர்களைப் பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறார்.
இதனிடையே, நேற்றைய தினம் மாணவி காவியா தொடர்ந்த வழக்கில் மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் கெளரவம் பாரக்காமல் மாணவர்கள் மீதான இடைநீக்கத்தை திரும்பப் பெற வேண்டும்.
மாணவர்களுக்கு ஆதரவாகவும், பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்தும் வரும் 11ந் தேதியன்று ஆளுநர் மாளிகை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் போராட்டத்தில் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கலந்துக் கொண்டு ஆதரவு அளிக்க உள்ளோம்.
Leave a Reply