புதுச்சேரி தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் இன்று (6.11.2013) விடுத்துள்ள கூட்டறிக்கை:
திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீது தேசியப் பாதுகாப்புச் சட்டப்படி கைது நடவடிக்கை எடுத்துள்ள தமிழக அரசையும், காவல்துறையையும் வன்மையாக கண்டிக்கிறோம்.
இலங்கையில் நடைபெறும் காமென்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துக் கொள்ளக் கூடாது எனக் கூறி திராவிடர் விடுதலைக் கழகத் தொண்டர்கள் சென்னையில் அஞ்சலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். சேலத்தில் வருமான வரித்துறை அலுவலகம் மீது பெட்ரோல் நனைத்த சாக்குகளை தீ வைத்து வீசியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த அமைப்பைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் சென்னையில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டப்படி தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியை சேலம் தாக்குதல் வழக்கில் சென்ற 2ம் தேதியன்று காவல்துறையினர் கைது செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர். மேலும், நேற்றைய தினம் அவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேற்சொன்ன தாக்குதல் சம்பவங்களுக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத கொளத்தூர் மணி மீது தமிழக அரசும், காவல்துறையும் எடுத்துள்ள இந்த அடக்குமுறை நடவடிக்கை அப்பட்டமான பழிவாங்கும் போக்காக்கும். மேலும், இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களில் தங்கள் அமைப்பிற்கு உடன்பாடு இல்லை என நேற்றைய தினம் சென்னையில் கூடிய அவ்வமைப்பின் செயற்குழு அறிவித்துள்ளது.
ஒட்டுமொத்த தமிழர்களும் இலங்கையில் நடைபெறும் காமென்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு கலந்துக் கொள்ள கூடாது என குரல் எழுப்பியும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் வருகின்றனர். இதை வலியுறுத்தி தமிழக அரசு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சி ஆதரவோடு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளது.
ஆனால், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு காமென்வெல்த் மாநாட்டில் கலந்துக் கொள்வதில் பிடிவாதமாக இருப்பதோடு, தமிழக மக்களின் உணர்வுகளைப் புறக்கணித்து வருகிறது. இதனால், விரக்தி அடைந்த இளைஞர்கள் சிலர் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முழுக்க முழுக்க தமிழர் விரோதப் போக்கோடு செயல்பட்டு வரும் காங்கிரஸ் தலைமையிலான அரசுதான் காரணம். இந்திய அரசின் இந்த நிலைப்பாடு இலங்கையில் இறுதிக்கட்ட போரில் சிங்கள இனவெறியன் ராஜபக்சே அரசு செய்த மனித உரிமை மீறல்களுக்கு வெளிப்படையாக ஆதரவு அளிப்பதாகும்.
இந்திய அரசு காமென்வெல்த் மாநாட்டில் கலந்துக் கொள்ளக் கூடாது என காங்கிரஸ் கட்சிக்குள்ளூம் இருந்து குரல்கள் எழுந்து வருகின்றன. இவற்றையும் புறந்தள்ளி இந்தியா காமென்வெல்த் மாநாட்டில் கலந்துக் கொள்ளும் என்றால் தமிழகம், புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி மேலும் தனிமைப்பட்டுக் காணாமல் போகும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்.
இந்நிலையில், தமிழக அரசு கொளத்தூர் மணி உள்ளிட்ட அவ்வமைப்பைச் சேர்ந்த அனைவர் மீதும் தேசியப் பாதுகாப்புச் சட்டப்படி எடுத்துள்ள நடவடிக்கையை திரும்பப் பெற்று அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். இந்திய அரசு தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இலங்கையில் நடைபெறும் காமென்வெல்த் மாநாட்டில் கலந்துக் கொள்ளக் கூடாது என வலியுறுத்துகிறோம்.
Leave a Reply