மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (17.09.2013) விடுத்துள்ள அறிக்கை:
ஜிப்மர் செவிலியர் தேர்வில் திருவனந்தபுரம் மையத்தில் இருந்து மட்டும் அதிகம் பேர் தேர்வு செய்யப்பட்டது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென மத்திய அரசை ’மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு செவிலியர் தேர்வு அறிவிக்கப்பட்டு அதில் 19 ஆயிரத்து 996 பேர் கலந்துக் கொண்டு தேர்வு எழுதினர். இந்த தேர்வுகள் சென்ற செப்டம்பர் 8 அன்று புதுச்சேரி, சென்னை, திருச்சி, திருவனந்தபுரம் ஆகிய நான்கு மையங்களில் நடைபெற்றன. இதன் முடிவுகள் நேற்றைய முன்தினம் வெளியிடப்பட்டன.
மொத்தம் 463 பேரில் புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இருந்து 140 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருவனந்தபுரம் மையத்தில் மட்டும் 323 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தேர்வு மையத்தில் தேர்வை நடத்துவதற்கு ஜிப்மர் தலைமை நிர்வாக அதிகாரி உன்னிகிருஷ்ணன் அனுப்பப்பட்டுள்ளார். இதேபோல், சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த செவிலியர் தேர்விலும் 90 பேரில் கிட்டத்தட்ட 80 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஒரே மையத்தில் இருந்து இவ்வளவு பேர் தேர்வு செய்யப்பட்டது பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுக்கிறது. இத்தேர்வில் ஊழல், முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளிவரும். ஜிப்மர் நிர்வாகத்தில் தொடரும் இந்தப் போக்கு ஊழியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்கையில் மொத்தமுள்ள 150 இடங்களில் 25 இடங்கள் புதுச்சேரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல், வேலைவாய்ப்பிலும் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு 50 சதவீதம் ஒதுக்க வேண்டும். ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கப்படுகிறது.
எனவே, மத்திய அரசு உடனடியாக இந்தப் பிரச்சனையில் தலையிட்டு, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதுகுறித்து, மத்திய உள்துறை மற்றும் சுகாதார துறை அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு புகார் அனுப்ப உள்ளோம்.
Leave a Reply