மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (4.9.2013) விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரி, பத்துக்கண்ணில் அண்ணல் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, சிலையை உடைத்த குற்றவாளிகளைப் போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
புதுச்சேரி அருகே பத்துக்கண்ணில் உள்ள ரவுண்டானாவில் வைக்கப்பட்டிருந்த அண்ணல் அம்பேத்கர் சிலை சென்ற 1ந் தேதி இரவு சில மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது. அம்பேத்கர் அரசியல் சட்டத்தை வடிவமைத்தவர் என்பதோடு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு மட்டுமல்லாது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இடஒதுக்கீடு கிடைத்திட வழிவகுத்தவர். அவரது சிலை உடைக்கப்பட்டது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
சிலை உடைக்கப்பட்ட தகவல் கிடைத்தவுடன் வில்லியனூர் போலீசார் உடனடியாக அங்கு ஒரு புதிய அம்பேத்கர் சிலையை வைத்துள்ளனர். குற்றவாளியைக் கண்டறிந்து கைது செய்வதற்குப் பதிலாக போலீசார் இவ்வாறு செய்தது தவறான முன்னுதாரணம் என்பதோடு, சட்டத்திற்குப் புறம்பான செயலாகும்.
இதுவரையில் சிலையை உடைத்த குற்றவாளிகளைப் வில்லியனூர் போலீசார் கைது செய்யாதது மக்களிடத்தில் மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு சிலையைக்கூட பாதுகாக்க முடியாத போலீசார் எப்படி மக்களைப் பாதுகாக்க போகிறார்கள் என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, வில்லியனூர் போலீசார் விரைந்து குற்றவாளிகளைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், ஒத்த கருத்துடைய கட்சி, அமைப்புகளைத் திரட்டி போராட்டம் நடத்த வேண்டி வரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Leave a Reply