மனித உரிமைக்கான மக்கள் கழகத் தலைவர் பேரா. அ.மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் 16.07.2013 அன்று, புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தில் வெளியிட்ட அறிக்கை:
புதுவைப் பல்கலைக்கழகத்தில் 2002ல் நிர்வாக இயல் துறையில் (Department of Management Studies) பேராசிரியராக பணியில் சேர்ந்த டாக்டர் அரிகரன் 2008ல் கல்வியாளர் பயிற்சிக் கல்லூரியின் (Academic Staff College) இயக்குநராக நியமிக்கப்பட்டார். மேலும், இவர் அகில இந்திய தொழிற்நுட்பக்கழகத்தின் (AICTE) வல்லுநர் குழுவின் உறுப்பினராக இருந்துள்ளார்.
டாக்டர்அரிகரன்ஏ.ஐ.சி.டி.இ-ன் வல்லுநர் குழுவின் உறுப்பினராக இருந்த போது சென்னையில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றுக்குமுறை கேடாக அனுமதி அளித்தது குறித்து சி.பி.ஐ. லஞ்ச ஒழிப்புப் பிரிவு இவர் உள்ளிட்ட 13 பேர் மீது கிரிமினல் வழக்குத் தொடுத்துள்ளது.
1998ம் ஆண்டு சென்னையை சேர்ந்த புனித ஆல்பிரட் கல்வி அறக்கட்டளை (St. Alfred Educational Trust) சார்பில் ஜே.ஏ. பொறியியல் மற்றும் தொழிற்நுட்பக் கல்லூரி ஒன்றை துவங்க செங்கல்பட்டு மாவட்டம், செய்யாறு வட்டத்தில் உள்ள பருக்கல் என்ற ஊரில் நிரந்திர இடத்தைக் காட்டியும், சென்னையிலுள்ள முகப்பேறு அருகில் பன்னீர் நகரில் தற்காலிக இடத்தைக் காட்டியும் ஏ.ஐ.சி.டி.இ-யிடம் அனுமதி கோரியிருந்தது.
இதன் அடிப்படையில் ஏ.ஐ.சி.டி.இ ஒரு வல்லுநர் குழுவை அனுப்பி வைத்து ஏ.ஐ.சி.டி.இ விதிகளின்படி பொறியியல் கல்லூரி தொடங்குவதற்குப் போதிய இடம், கட்டிடம் உட்பட உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க கோரியிருந்தது.
இந்த வல்லுநர் குழு கல்லூரி துவங்க விண்ணப்பித்ததில் குறிப்பிட்டிருந்த பகுதிகளுக்குச் செல்லாமல் சென்னை கோயம்பேட்டில் உள்ள குடியிருப்பு பகுதியான, கல்லூரி நிர்வாகத்திற்கு சொந்தமில்லாத இடத்தை, ஏ.ஐ.சி.டி.இ விதிகளின்படி கல்லூரி துவங்க முடியாத ஒரு இடத்தைப் பார்வையிட்டு, மெற்சொன்ன கல்லூரி நிர்வாகத்தினருக்கு பொறியியல் கல்லூரி துவங்க அனுமதி அளிக்கலாம் என ஏ.ஐ.சி.டி.இ-க்குப் பரிந்துரை செய்து அறிக்கை அளித்தது. இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் பொறியியல் கல்லூரி துவங்கவும், முதல்கட்டமாக 180 மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளவும் ஏ.ஐ.சி.டி.இ அனுமதி அளித்தது. மேற்சொன்ன வல்லுநர் குழு பரிந்துரை செய்யவில்லை என்றால் ஏ.ஐ.சி.டி.இ பொறியியல் கல்லூரி துவங்க அனுமதி அளிக்க முடியாது.
இந்தப் பொறியியல் கல்லூரி துவங்கப்பட்ட பின்னர் இரண்டு முறை ஏ.ஐ.சி.டி.இ வல்லுநர் குழு கல்லூரி துவங்க குறிப்பிடப்பட்டிருந்த பரிக்கல் மற்றும் கோயம்பேடு பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்து அறிக்கை அளித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் இந்தப் பொறியியல் கல்லூரிக்குப் போதிய உள்கட்டமைப்பு மற்றும் கல்வி சார்ந்த வசதிகள் இல்லாத காரணத்தால் ஏ.ஐ.சி.டி.இ மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை 180ல் இருந்து 120 ஆக குறைத்தது. பின்னர் ஏ.ஐ.சி.டி.இ மேற்சொன்ன பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையை ரத்து செய்து உத்தரவிட்டது. இதன் பின்னர் 2004-ல் அண்ணா பல்கலைக்கழகமும் அங்கீகாரத்தை ரத்து செய்தது.
இதன் பின்னர், 2004-ல் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தினர் ஏ.ஐ.சி.டி.இ அனுமதிப் பெற பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ஏ.ஐ.சி.டி.இ விதிகளில் கூறியுள்ளபடி பொறியியல் கல்லூரி துவங்க குறைந்தது 5.45 ஏக்கர் நிலம் கோயம்பேட்டில் இருப்பதாகவும், தங்களுக்குச் சொந்தமில்லாத நிலத்தைச் சொந்தம் என ஆவணங்களைத் திருத்தியும் சமர்ப்பித்துள்ளனர். மேலும், ஏ.ஐ.சி.டி.இ விதிகளின்படி வங்கிகளில் நிரந்திர வைப்புத் தொகை வைத்துள்ளதாக வங்கி ஆவணங்களைத் திருத்தியுள்ளனர். அதோடு மட்டுமல்லாமல், கல்லூரியின் முதல்வர் பி.இ. படித்துள்ளதைத் திருத்தி அவர் பி.எச்.டி. முடித்ததாகப் போலி கல்விச் சான்றிதழ் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த முறைக்கேட்டிற்கு வல்லுநர் குழுவினர் ஒத்துழைப்புக் கொடுத்ததோடு, மீண்டும் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கலாம் என ஏ.ஐ.சி.டி.இ-க்கு அறிக்கை அளித்துள்ளனர். இதன்அடிப்படையில் 2004-2005 ஆண்டிற்கான மாணவர் சேர்கைக்கு ஏ.ஐ.சி.டி.இ அனுமதி அளித்துள்ளது.
மேலும் இந்த கல்லூரி தொடர்ந்து இயங்கிட ஏ.ஐ.சி.டி.இ ஒப்புதல் பெற தமிழ்நாடு அரசு மற்றும்
சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கியது போல் தடையில்லா சான்றிதழ்களைப் போலியாக தயாரித்து சமர்ப்பித்துள்ளனர்.
இதனிடையே, கல்லூரி நிர்வாகத்தினர் 2005-ல் விதிமுறைகளுக்கு மாறாக பொறியியல் கல்லூரி உள்ள கோயம்பேடு இடத்தை நிரந்திர இடமாக குறிப்பிட்டு, அதற்கு ஒப்புதல் அளிக்க மேற்சொன்னபடி போலியான ஆவணங்களை இணைத்து ஏ.ஐ.சி.டி.இ-யிடம் மீண்டும் ஒப்புதல் கோரி விண்ணப்பித்துள்ளனர். ஏ.ஐ.சி.டி.இ இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வல்லுநர் குழுவை அனுப்பி வைத்தது.
இக்குழு 25.06.2005-ல் அக்கல்லூரியை பார்வையிட்டு‘அது நிரந்திர இடமாக கொள்ள பொருத்தமான இடம்’எனஅறிக்கை அளித்துள்ளது. வல்லுநர் குழுவினர் உரிய ஆய்வு மேற்கொள்ளாமல், கல்லூரி நிர்வகத்திற்கு சாதகமாக 2005-2006 ஆண்டிற்கான ஏ.ஐ.சி.டி.இ ஒப்புதல் அளிக்கும் வகையில் அறிக்கை அளித்துள்ளனர்.
மேலும், தமிழக அரசு கல்லூரி நிர்வாகத்தினருக்கு மெற்சொன்ன செய்யாறு வட்டம், பருக்கலில் பொறியியல் படிப்பில் நான்கு பிரிவுகள் நடத்த ஒப்புதல்அளித்து அரசாணை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. (G.O. 106 Dated 23.03.1998).
இவ்வாறு போலி ஆவணங்கள் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிக்கு ஒப்புதல் அளிக்க அறிக்கை அளித்த ஏ.ஐ.சி.டி.இ வல்லுநர் குழுவில் மேற்சொன்ன டாக்டர் அரிகரன் முக்கிய உறுப்பினர் ஆவார்.
இந்த ஊழல், முறைகேடு குறித்தும், சட்ட விரோதமாகவும், மேற்சொன்ன பொறியியல் கல்லூரிக்குச் சாதகமாகவும் செயல்பட்டுள்ள டாக்டர் அரிகரன் உள்ளிட்ட 13 பேர் மீது சி.பி.ஐ ஊழல் தடுப்புப் பிரிவு பல்வேறு சட்டப் பிரிவுகளில் 2009-ல் வழக்குப்பதிவு செய்தது. (No.C1/RC/48(A)/2009/CBI/AC/Chennai U/S120-B, 420, 468, 471 IPC and Sec. 13(1)(d) of Protection of Corruption Act). மேலும் புலன் விசாரணை மேற்கொண்ட சி.பி.ஐ. 08.12.2010 அன்று
மேற்சொன்ன டாக்டர் அரிகரன் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி (Sanction Order for Prosecution) கோரி புதுவைப் பல்கலைக்கழகத்திற்கு முறைப்படி கடிதம் எழுதி இருந்தது. இதற்குப் பல்கலைக்கழக நிர்வாகம் மேலோட்டமான காரணம் கூறி அனுமதிஅ ளிப்பதற்கு மறுத்துவிட்டது.
இந்நிலையில், நிலுவையில் உள்ள இந்த வழக்கில் குற்றப் பத்திரிகைத் தாக்கல் செய்ய டாக்டர் அரிகரன் மீதான குற்றச்சாட்டுப் பதிவுக்கு மீண்டும் அனுமதி பெற புதுவைப் பல்கலைக்கழத்திற்கு கடிதம் அனுப்பி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் சென்ற 23.01.2013 அன்று சி.பி.ஐ. ஊழல் தடுப்புப் பிரிவு டி.ஐ.ஜிக்கு மனு அனுப்பியிருந்தோம். அதனைத்தொடர்ந்து, 2013 ஜனவரி கடைசி வாரத்தில், டாக்டர் அரிகரன் மீது குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்ய அனுமதி கோரி சி.பி.ஐ. பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், அக்கடிதத்தில் இவ்வழக்கு குறித்து சந்தேகம் இருந்தால் அதனை விளக்கிச் சொல்ல சி.பி.ஐ. அதிகாரி ஒருவரை அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளது.
சி.பி.ஐ. அனுப்பிய கடிதம் அடங்கிய கோப்பு தற்போது பல்கலைக்கழகத் துணைவேந்தர் வசம் உரிய நடவடிக்கைக்காக நிலுவையில் உள்ளது. இக்கடிதம் கிடைத்து 6 மாதம் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்காமல் பல்கலைக்கழக நிர்வாகம் ஊழல், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரி டாக்டர் அரிகரனை பாதுகாக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.
ஊழல், முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள டாக்டர் அரிகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பல்கலைக்கழக நிர்வாகம், சென்ற 28.05.2013 அன்று அவரை கல்லூரி வளர்ச்சிக் கவுன்சில் டீனாக நியமித்துள்ளது. ஏ.ஐ.சி.டி.இ. வல்லுநர் குழுவில் பொறியியல் கல்லூரிகளுக்குச் சென்று பார்வையிட்டு ஒப்புதல் அளிக்கும் முக்கியமான குழுவில் இருந்த போது ஊழல் செய்த ஒருவருக்கு, அதேபோன்று கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கும் முக்கிய கவுன்சிலின் டீன் பதவியை அளித்துள்ளது கண்டனத்திற்குரியது. இது அவரை பல்கலைக்கழகம் மேலும் ஊழல், முறைகேட்டில் ஈடுபட ஊக்கப்படுத்தும் செயலாகும். மேலும் இது தவறான முன்னுதாரணம் ஆகும்.
டாக்டர் அரிகரன் தொடர்ந்துப் பல்வேறு நிர்வாக குளறுபடிகள் செய்து வருபவர் எனத் தெரிகிறது. 1998-ல் ‘நாக் (National Assessment And Accreditation Council – NAAC) தரவரிசைப் பட்டியலில் முதல் நிலையில் இருந்த பல்கலைக்கழக கல்வியாளர் பயிற்சிக் கல்லூரி, இவர் கல்லூரியின் இயக்குநராக பொறுப்பேற்ற பின்னர் 26வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே, புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்கள் இப்பிரச்சனையில் தலையிட்டு டாக்டர் அரிகரன் மீது குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்ய சி.பி.ஐ. கோரியுள்ள அனுமதியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வழக்கு முடியும் வரையில் அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அவரை உடனடியாக கல்லூரி வளர்ச்சிக் கவுன்சில் டீன் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும்.
இல்லையேல், புதுச்சேரியில் உள்ள அனைத்துக் கட்சி மற்றும் இயக்கங்களை ஒன்றிணைத்து ஊழல், முறைகேட்டிற்குத் துணைப்போகும் புதுவைப் பல்கலைக்கழகத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Leave a Reply