மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (11.07.2013) புதுச்சேரி முதல்வர் ந.ரங்கசாமி, கலைப் பண்பாட்டுத் துறை அமைச்சர் தி.தியாகராஜன் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு:
புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடம் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அங்கு பயிலும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கல்வி கற்பிப்பதற்குத் தேவையான கருவிகள், கட்டிடங்கள் உள்பட பல்வேறு வசதிகள் இல்லாத நிலை உள்ளது.
இதனால் புதுவைப் பல்கலைக்கழகம் பாரதியார் பல்கலைக்கூடத்திற்கு நிரந்திர அங்கீகாரம் வழங்காமல் தற்காலிக அங்காரம் வழங்கியுள்ளது. மேலும், உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க பல்கலைக்கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அங்கு பணிபுரியும் பேராசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் மாதம் மாதம் வழங்கப்பட வேண்டிய சம்பளம் காலதாமதமாக வழங்கப்படுவதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
நிதிப் பற்றாக்குறையால் சென்ற பட்ஜெட்டில் அறிவித்தபடி நுண்கலை, இசை, நடனம் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டப்படிப்பு இந்த ஆண்டும் தொடங்கப்படவில்லை. அதேபோல், சென்ற ஏப்ரல் 5ம் தேதி நடைபெற்ற பல்கலைக்கூட ஆட்சிமன்ற குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்கூட செயல்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, பாரதியார் பல்கலைக்கூடம் மேலும் வளர்ச்சியடைய வரும் ஜூலை 15ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கீடு செய்திட ஆவன செய்ய வேண்டுகிறோம்.
Leave a Reply