பேரா. அ.மார்க்ஸ் (மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், சென்னை), கோ.சுகுமாரன் (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி) பேரா. பிரபா.கல்விமணி (ஒருங்கிணைப்பாளர், பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்), எம்.நிஜாமுதீன் (பொதுச்செயலாளர், தமிழ்நாடு நுகர்வோர்களின் கூட்டமைப்பு), கடலூர், இரா.பாபு (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, கடலூர்), வழக்குரைஞர் ரஜினி (மனித உரிமைக்கான மக்கள் கழகம், மதுரை) ஆகியோர் இன்று (26.06.2013) காலை 11.30 மணிக்கு கடலூர் செய்தியாளர் மன்றத்தில் வெளியிட்ட அறிக்கை:
மிகவும் லாபகரமாகச் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (NLC) ஏற்கனவே விற்கப்பட்ட 6.44 சதப் பங்குகள் போக மேலும் 5 சதப் பங்குகளைத் தனியாருக்கு விற்க மத்திய அரசு எடுத்துள்ள முடிவிற்குத் தமிழகம் முழுவதிலிருந்தும் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. ஆளுங் கட்சி, அதன் கூட்டணிக் கட்சிகள் தவிர கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இம் முடிவைக் கடுமையாக எதிர்த்துள்ளன. மத்திய அரசின் இம் முடிவை எதிர்த்து வரும் ஜூலை 3 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வதென என்.எல்.சி தொழிற்சங்கங்கள் அறிக்கை அளித்துள்ளன.
இந்த 5 சதப் பங்கு விற்பனை மூலம் அரசுக்குக் கிடைக்க உள்ள வெறும் 466 கோடி ரூபாய் என்பது மத்திய அரசுக்குப் பெரிய தொகை அல்ல. கார்பொரேட் நிறுவனங்களுக்கு அளிக்கும் ஆயிரக் கணக்கான கோடி மதிப்புள்ள வரிச் சலுகைகள் மற்றும் மானியங்களிலிருந்தோ, இல்லை அரசுக்கு வரவுள்ள வரி பாக்கிகளை வசூலித்தோ இதை ஈடு செய்துவிட இயலும் என்பதை அரசியல் கட்சிகள் சுட்டிக் காட்டியுள்ளன.
இவ்வாறு பங்குகளைத் தனியாருக்கு விற்பதை நிறுத்த விதிகள் அனுமதிக்கவில்லை எனில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட 6.44 சதப் பங்குகளைத் திரும்ப வாங்கியோ, இல்லை 1957ம் ஆண்டு செக்யூரிடிகள் ஒப்பந்தங்கள் (ஒழுங்காற்று) விதிகளில் திருத்தம் செய்தோ என்.எல்.சிக்கு விலக்களிக்குமாறு சென்ற மே 23 அன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அப்படி 5 சதப் பங்குகளை விற்பது என முடிவு செய்தால் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO), தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சி நிறுவனம் (SIDCO), தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம் (TIIC) ஆகிய தமிழகப் பொதுத்துறை நிறுவனங்களிடம் இப்பங்குகளை விற்பனை செய்யுமாறு தமிழக முதல்வர் இன்று கோரியுள்ளார்.
லாபம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல் வேலை வாய்ப்பைப் பெருக்குதல், தேசியத் தொழில் வளர்ச்சிக்குரிய அகக் கட்டுமானங்களை உருவாக்குதல் போன்ற உயரிய நோக்கங்களை முன்வைத்து சுதந்திரத்திற்குப் பிந்திய இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. படிப்படியாக அவற்றில் முதலீடுகள் அதிகரிக்கப்பட்டன. முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் இறுதியில் வெறும் 29 கோடியாக (மொத்தம் 5 நிறுவனங்கள்) இருந்த முதலீடு, இப்படித் தனியார்களுக்குப் பங்கு விற்பனை தொடங்குவதற்கு முன்னதாக, அதாவது 1990ல் 99,329 கோடியாக (244 நிறுவனங்கள்) அதிகரித்திருந்தது. இது 2000 – 01ம் நிதி ஆண்டில் 274,114 கோடியாக உயர்ந்தது.
பழுப்பு நிலக்கரியில் 100 சதம், நிலக்கரியில் 80 சதம், கச்சா எண்ணை மற்றும் துத்தநாகத்தில் 50 சதம், அலுமினியத்தில் 30 சதம் பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாகவே உற்பத்தியாயின. இந்தியத் தொழில் வளர்ச்சிக்கான அடிப்படை அகக் கட்டுமானங்களின் உருவாக்கங்களுக்கு அவை பெரிதும் துணை புரிந்ததோடு, இந்நிறுவனங்களில் பல மிகவும் லாபகரமாகவும் இயங்கின. 2000 – 2001ம் ஆண்டில் 122 பொதுத்துறை நிறுவனங்கள் 19,604 கோடி லாபம் ஈட்டின. 111 நிறுவனங்கள் இழப்பில் இயங்கின என்ற போதும் அவற்றின் மொத்த இழப்பு 12,839 கோடி ரூபாய்தான். மொத்தத்தில் பொதுத்துறை நிறுவனங்களால் அந்த ஆண்டு அரசுக்குக் கிடைத்த நிகர லாபம் 6,765 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இழப்பீடும் கூட இந்துஸ்தான் ஃபெர்டிலைசர்ஸ் போன்ற ஒரு சில நிறுவனங்களிலேயே அதிகமாக இருந்தது. லாபத்தை முதன்மை நோக்கமாகக் கொள்ளாததும் லாபம் கருதிச் சந்தையின் கட்டுப்பாட்டிற்குள் தன்னைத் திணித்துக் கொள்ளாமையும்தான் இதன் முக்கிய காரணங்களாக இருந்தன.
1990களில் “தாராளமயம், தனியார்மயம், உலகமயம்” என்கிற முழக்கத்தின் அடிப்படையில் இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கை மாற்றமடைந்தது. அந்நிய மூலதனத்தை நம்பிய தொழில் வளர்ச்சி என்பதாக இந்திய அரசின் அணுகல் முறை மாறியது, உலக நிதி நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த நமது பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்களில் ஒன்று பொதுத்துறை நிறுவனங்களில் அரசு முதலீட்டைக் குறைத்துத் தனியார்களின் பங்கை அதிகரிப்பது. இதன் மூலம் அரசுக்கு வரும் வருமானங்கள் மக்கள் நலத்திற்குப் பயன்படும், பொதுத்துறை நிறுவனங்கள் மேலும் திறனுடனும் (Efficient) லாபகரமாகவும் இயக்கும் என இப்படிப் பொன் முட்டை இடும் வாத்தை அறுப்பதற்கு நியாயங்கள் கற்பிக்கப்பட்டன.
இவ்வாறு முதலீடுகள் தனியாருக்கு விற்பனை செய்வது தொடங்கிய பின் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்துப் பலரும் ஆய்வு செய்துள்ளனர். பொதுத்துறையாக இருந்தாலும் சரி, தனியார் துறையாக இருந்தாலும் சரி சந்தை வலுவுடன் இயங்கும்போது பெரிய வேறுபாடு இருப்பதில்லை. ஒரு நிறுவனம் திறனுடன் இயங்க சந்தையில் போட்டி நிலவுவது ஒரு நிபந்தனை என்ற போதிலும் போட்டியே இல்லாத பழுப்பு நிலகரித் தொழிலில் என்.எல்.சி அது முற்றிலும் பொதுத்துறை நிறுவனமாக இருந்தபோதும், அதன் பங்கில் 6.44 சதம் தனியாருக்கு விற்கப்பட்டபோதும், இரு சந்தர்ப்பங்களிலும் அது லாபகரமாகவே இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
முதலீடுகள் தனியாருக்கு விற்கப்பட்ட பின்னும் சில நிறுவனங்கள் இழப்பில் செயல்படுவதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அரசு முதலீடு நீக்கம் செய்யப்பட்ட 38 நிறுவனங்களில் இந்துஸ்தான் போடோ ஃபில்ம், இந்துஸ்தான் மெஷின் டூல்ஸ், ITI, ஸ்டீல் அதாரிடி ஆஃப் இந்தியா லிமிடெட் முதலான ஆறு நிறுவனங்கள் இழப்புடன் செயல்படுவது குறிப்பிடத்தக்கது (பார்க்க: Disinvestments in India, Policies, Procedures, Practises, Sudhir Naib, Sage Publications, 2004). தனியார் மயம் தொடங்கிய பின் இந்திய அளவில் வேலை இல்லாமை, பட்டினிச் சாவுகள், விலைவாசி முதலியன அதிகரித்துள்ளன, தவிரவும் இப்படிப் பங்குகள் முதலியவற்றை விற்பனை செய்வதில் மிகப் பெரிய மெகா ஊழல்கள் நடைபெற்றுள்ளதை விளக்க வேண்டியதில்லை. ஏர் இந்தியாவின் மைகேல் மாஸ்கரேனஸ், வி.எஸ்.என்.எல்லின் அமிதவ் குமார் முதலான உயர் அதிகாரிகள் இத்தகைய ஊழல்களுக்காகப் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அறிவோம்.
என்.எல்.சி நிறுவனம் நவரத்னாக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சென்ற ஆண்டு அதன் மொத்த வரவு செலவு 2047.55 கோடி. மத்திய அரசுக்குச் செலுத்தப்பட்ட வரி மட்டும் 587.90 கோடி. நிகர லாபம் 1459.75 கோடி. இத்தனை எதிர்ப்புகளையும் மீறி இப்படி லாபகரமாக இயங்கும் ஒரு நிறுவனத்தை வெறும் 466 கோடி ரூபாயைக் கருத்தில் கொண்டு தனியார் மயமாக்குவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். மிகப் பெரிய தொழிலாளர் போராட்டம் ஒன்று ஏற்பட்டு இதன் விளைவாக இங்கு தொழில் அமைதி கெடுவதற்கு மத்திய அரசின் இம்முடிவு காரணமாகிறது என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்.
ஈழப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளின் ஊடாகத் தமிழக மக்களிடமிருந்து அந்நியப்பட்டுள்ள மத்திய அரசு இதன் மூலம் முற்றாக அந்நியப்படும் என எச்சரிக்கிறோம்.
மக்கள் மற்றும் தொழிலாளர் நலனிலும், தொழில் அமைதியிலும் தேசியத் தொழில் வளர்ச்சியிலும் அக்கறை உள்ள குடிமக்களாகிய கீழே கையெழுத்திட்டுள்ள நாங்கள் இவ்வாறு என்.எல்.சி.யின் மொத்த முதலீட்டில் மேலும் 5 சதத்தைத் தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை உடனே திரும்பப் பெற வேண்டுமென மத்திய அரசை வற்புறுத்துகிறோம்.
Leave a Reply