மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (21.06.2013) விடுத்துள்ள அறிக்கை:
உத்தரகாண்டில் மழை, வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ள புதுச்சேரியை சேர்ந்தவர்களைக் கண்டறிந்து மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’’ சார்பில் அரசை வலியுறுத்துகிறோம்.
உத்தரகாண்டில் மழை, வெள்ள பாதிப்பில் ஆயிரக்கணக்கானவர்கள் சிக்கி இறந்துள்ளதாக வந்துள்ள தகவல் நாட்டையே உலுக்கியுள்ளது. இதனை தேசிய பேரிழப்பாக அறிவிக்க வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இதில் சிக்கியுள்ள மக்களை மீட்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், புதுச்சேரி பகுதியான காரைக்காலை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர் குமரேசன் இந்த பேரிடரில் சிக்கி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அவரைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமென அவரது குடும்பத்தினர் முதல்வர் ரங்கசாமி, மத்திய அமைச்சர் நாராயணசாமி ஆகியோரிடம் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து அரசு போதிய கவனம் செலுத்தி உத்தரகாண்டில் ஏற்பட்டுள்ள இந்த பேரிடரில் சிக்கியுள்ள புதுச்சேரியை சேர்ந்தவர்களைக் கண்டறிந்து அவர்களை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக அந்த மாநில அரசுடனும், மத்திய அரசுடனும் தொடர்புக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரதமர் மன்மோகன்சிங் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட தேசிய நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி அளித்து உதவ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு நிதி அளிக்க வேண்டுமென பொதுமக்களுக்கு முதல்வர் ரங்கசாமி வேண்டுகோள் விடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
Leave a Reply