மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 7.6.2013 வெள்ளியன்று, காலை 10 மணியளவில், ரெவேய் சொசியால் சங்கத்தில் கட்சி மற்றும் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். புதுச்சேரி உள்ளாட்சி கூட்டமைப்பு தலைவர் கோ.அ.ஜெகன்நாதன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மறுமலர்ச்சி தி.மு.க பொறுப்புக்குழு உறுப்பினர் து.சடகோபன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அமைப்புச் செயலர் சு.பாவாணன், செயலாளர் பா.அமுதவன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை தலைவர் ஆ.பாவாடைராயன், பொதுச்செயலாளர் கோ.கலைமணி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச்செயலாளர் உ.முத்து, ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தி.சஞ்சீவி, பீம்சேனா அமைப்பின் தலைவர் பூ.முர்த்தி, மனிதநேய மக்கள் கட்சி பொறுப்பாளர் சம்சூதீன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகப் பொறுப்பாளர் பலுலுல்லா, இந்திய தவ்ஹீத் ஜமாத் செயலாளர் அபுபக்கர், இலக்கிய பொழில் இலக்கிய மன்றத் தலைவர் பெ.பராங்குசம், இந்திய சமூக செயல்பாட்டுப் பேரவை அமைப்பாளார் கு.மோகனசுந்தரம், அத்தியப்பா கெமிக்கல்ஸ் தொழிலாளர் நலச் சங்கத் தலைவர் சூ.சின்னப்பா, பாரதியார் பல்கலைக்கூடம் நுண்கலை தொழிற்கல்வி பேராசிரியர்கள் சங்கத் தலைவர் இரா.மதியழகன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
இக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1) சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் புதுச்சேரி அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் காலம் கடத்தி வருகிறது. இது அடித்தட்டு மக்களுக்கு ஜனநாயகத்தை மறுக்கும் செயலாகும். எனவே, புதுச்சேரி அரசு இனியும் காலம் கடத்தாமல் உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
2) 2011ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் பஞ்சாயத்து மற்றும் வார்டு எல்லைகளை மறுவரையறை செய்ய புதுச்சேரி அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. இக்குழு விரைந்து செயல்பட்டு, மறுவரையறை பணியை முடித்து உள்ளாட்சி தேர்தல் நடத்த வழிவகுக்க வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
3) உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் உடனே அனைத்துக் கட்சி மற்றும் அமைப்புகளின் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
4) உள்ளாட்சித் தேர்தல் நடத்த கோரி தொடர்ந்து போராடி வரும் ‘புதுச்சேரி உள்ளாட்சி கூட்டமைப்பு’ செயல்பாடுகளுக்கு துணை நிற்பது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
Leave a Reply