கல்பாக்கம் மக்களின் கோரிக்கைகள், போராட்டம், காவல்துறை அத்துமீறல்கள் : உண்மை அறியும் குழு அறிக்கை

சென்ற ஏப்ரல் 3, 2013 அன்று, மதியம் 3 மணியளவில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழு அறிக்கை:

சென்னையிலிருந்து 80 கி.மீ தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்பாக்கம் அணு உலைத் தொகுப்பு மற்றும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR) என்பன இந்தியாவில் நீண்ட காலமாக இயங்கி வரும் அணு ஆற்றல் வளாகங்களில் ஒன்று. அணு மின் உற்பத்தி தவிர பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறு சுழற்சி (அதாவது மறு பயன்பாட்டுக்குத்) தயார் செய்தல் (fuel reprocessing), அணுக்கழிவு நிர்வாகம் (waste management), வேக ஈனுலைகளுக்கான புளுடோனிய எரிபொருள் தயாரிப்பு ஆகிய வசதிகள் ஒரே இடத்தில் அமைந்த மையம் இது. 220 மெகாவாட் திறன் கொண்ட இரு ‘அழுத்தப்பட்ட கனநீர் உலைகள்’ (PHWR) 1983லும் 85லும் செயலுக்கு வந்தன. சிறிய ஆய்வு மற்றும் சோதனை உலைகள், மறு பயன்பாட்டு உலைகள் எனக் கிட்டத்தட்ட தற்போது அய்ந்து உலைகள் கல்பாக்கத்தில் இயங்கி வருகின்றன. தயாரிப்பில் உள்ள 500 மெ.வாட் திறனுடைய ‘பாவினி’ எனும் புரொடொ டைப் வேக ஈனுலை (PFBR) இன்னும் இரண்டாண்டுகளில் செயல்பாட்டைத் துவங்கும் எனக்கூறப்படுகிறது. இதே மாதிரியான மேலும் இரு 500 மெ.வாட் பாவினி உலைகள் கட்டப்பட உள்ளன. இது தவிர சென்ற டிசம்பரில் 120 மெ.வாட் திறனுள்ள ‘உலோக நிலை எரிபொருள் சோதனை அணு உலை’ (MFTR) ஒன்றுக்கு அனுமதி அளித்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, இதே தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட உள்ள 1000 மெ.வாட் வேக ஈனுலைகளுக்கான சோதனை உலையாக இருக்குமாம். இது அதிவேகத்தில் உற்பத்தி செய்யும் புளுடோனிய யுரேனிய ஆக்சைட் கலவை (MOX) பாவினி உலைகளுக்கான எரிபொருளை உற்பத்தி செய்யுமாம்.

ஆக, ஒரே இடத்தில் கொத்தாக அமைக்கப்படும் ஒரு மிகப்பெரிய அணு உலைத் தோட்டமாக எதிர்காலத்தில் கல்பாக்க்கம் அமையும் என நிர்வாகத்தாலும் அணு ஆற்றல் துறையாலும் பெருமிதமாகப் பேசப்படும் கல்பாக்க நிர்வாகத்திற்கு எதிராகச் சென்ற வாரம் நடந்த தொடர் போராட்டத்தில் அறுநூறுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கைது செய்யப்பட்டு, நானூறுக்கும் மேற்பட்டோர் மீது வழக்குத் தொடரப்பட்டு, 147 பேர் சிறையிலடைக்கப்பட்டனர். தடியடி நடத்தியதில் பொதுமக்கள் பலர் காயமடைந்தனர்.

இது தொடர்பான உண்மைகளை அறிய கீழ்க்கண்டவாறு பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், வழக்குரைஞர்கள், சுற்றுச் சூழல் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது:

1. பேரா. அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், (PUHR),
2. முனைவர் ப.சிவகுமார், PMANE விஞ்ஞானிகள் குழு உறுப்பினர்,
3. பேரா. மு, திருமாவளவன், முன்னாள் கல்லூரி முதல்வர்,
4. திரு, சீனிவாசன், சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆர்வலர்,
5. வழக்குரைஞர் கி. நடராஜன், மக்கள் வழக்குரைஞர் சங்கம்,
6. கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி,

இக்குழுவினர் மார்ச் 29, ஏப்ரல் 1,2 ஆகிய தேதிகளில் கல்பாக்கம், சட்ராஸ், புதுப்பட்டினம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை ஆகிய இடங்களுக்குச் சென்று தடியடியால் பாதிக்கப்பட்ட மக்கள், கல்பாக்கத்தில் நீண்ட நாட்களாக மருத்துவ சேவை புரிந்து வருபவரும், இப்பகுதியில் அணுக்கதிர் வீச்சால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து வருபவரும், PMANE அமைப்பு உருவாக்கிய விஞ்ஞானிகள் குழு உறுப்பினருமான டாக்டர் வீ.புகழேந்தி, இப்பகுதியில் மருத்துவப் பணிசெய்யும் ரவி, முன்னாள் அணு உலை ஊழியர் சங்கத் தலைவர் மோகன், கைது செய்யப்பட்டவர்களின் வழக்குரைஞர் வெங்கடேசன், கெம்பு குமார், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த ஏழுமலை, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் அப்துல் சமது மற்றும் இஸ்மாயில், தடியடியில் காயம்பட்டுச் சிகிச்சையில் உள்ள ஆ.வடிவேல், பி.எம்.நடராஜன் முதலானோரை நேரிலும் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு பேசினோம். அணு உலை நிர்வாகத்தின் சார்பாக ‘பாவினி’ நிர்வாக இயக்குநர் ப்ரபோத் குமாருடனும், மூத்த விஞ்ஞானிகள் மற்றும் உயர் அதிகாரிகள் எண்வர் கொண்ட ஒரு குழுவுடனும் சுமார் இரண்டரை மணிநேரம் விரிவாகப் பேசினோம். எங்களது அய்யங்களுக்கு அவர்கள் பொறுமையாகப் பதிலளித்தனர். காவல்துறை சார்பாகக் காஞ்சிபுரம் கண்காணிப்பாளர் சேவியர் தனராஜ், மகாபலிபுரம் துணைக் கண்காணிப்பளர் மோகன் ஆகியோரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினோம்.

போராட்டம், தடியடி மற்றும் கைது நிகழ்வுகள்

தற்போது போராடிக் கொண்டுள்ள அணு உலையச் சுற்றியுள்ள கிராம மக்களின் ஐந்தம்சக் கோரிக்கைகள்: 1) அணு உலை அதிகாரிகள் குடியிருப்புக்கு வழங்குவதுபோல சுற்றுப்புற கிராமங்களுக்கும் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் அளித்தல் 2) கல்பாக்க உலையில் சுற்றுப்புற மக்களுக்கு வேலை அளித்தல் 3) மேலும் புதிய அணு உலைகளை இங்கு கட்டக் கூடாது, பிற இடங்களிலுள்ள அணு உலைக் கழிவுகளை இங்கே கொணரக் கூடாது 4) அணு சக்தித் துறை நிர்வாகத்தில் இயங்கும் பள்ளிகளில் சுற்றுப்புற கிராமக் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு அளித்தல்.5) கதிர் வீச்சு தொடர்பான நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கத் தக்க சிறப்பு மருத்துவமனை ஒன்றை அமைத்தல்.

சென்ற 25ம் தேதியன்று சதுரங்கப்பட்டினம் கிராம மக்கள் சுமார் 3000 பேர் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து காலை 7 மணி முதல் சட்ராஸ் ரவுண்டானாவில் திரளாகக் கூடி, முன்னதாக அறிவித்திருந்தபடி அணு உலை வளாகத்தின் பொய்கைக்கரை வாசலில் மறியல் செய்யும் போராட்டத்தைத் தொடங்கினர். மாலை வரை போராட்டம் தொடர்ந்தது.

மக்கள் பிரதிநிதிகளுடன் அணு உலை நிர்வாகமும் கோட்டாசியரும் பேச்சுவார்த்தை நடத்தினர். மக்களின் அனைத்துக் கோரிக்கைகளும் மிகத் தந்திரமாக மறுக்கப்பட்டன. தடையில்லா மின்சாரம் வழங்குவது மாநில அரசின் பொறுப்பு என்பதால் இது குறித்து மாநில அரசுக்குப் பரிந்துரைப்பது, வேலை மற்றும் கல்வி ஒதுக்கீட்டைப் பொருத்த மட்டில் தகுதி மற்றும் திறமை அடிப்படையில் அரசு விதிகளின்படி செயல்படுவது, கதிர்வீச்சு நோய்களுக்கான பல்நோக்கு மருத்துவ மனையைப் பொருத்த மட்டில் ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த உதவி செய்வது என்பதாகப் பதிலளிக்கப்பட்டது. மேற்கொண்டு அணு உலைகளை அமைக்கக் கூடாது என்பதற்கு மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறிய நிர்வாகம், அணுக் கழிவுகளைப் பொருத்த மட்டில் இதர பகுதிகளிலிருந்து கொண்டு வரப்படுவதில்லை என்பதோடு நிறுத்திக் கொண்டது. இனி கொண்டுவருவரும் திட்டமுண்டா என்பது குறித்து எதுவும் சொல்லவில்லை.

இவ்வாறு கோரிக்கைகள் அனைத்தும் மறுக்கப்பட்டடதைத் தொடர்ந்து அடுத்த நாள் (மார்ச் 26) சுற்றுவட்டார கிராம மக்கள் எல்லோரும் போராட்டத்தில் கலந்துகொள்வதாக முடிவெடுத்தனர். காலை ஏழு மணிக்கெல்லம் சட்ராஸ் ரவுண்டானா, கொக்கிலிமேடு கேட், புதுப்பட்டினம் ஆகிய மூன்று இடங்களிலும் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டுள்ளனர். கொக்கிலிமேட்டில் ம.தி.முக.தலைவர் மல்லை சத்யா தலைமையில் சுமார் 1500 பேரும், புதுப்பட்டினத்தில் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் அப்துல்சமது தலைமையில் 3000 பேரும் கூடியிருந்தனர். முஸ்லிம்கள், தலித்கள், மீனவர், வன்னியர் என்கிற சாதி மத வேறுபாடுகளையும், கட்சி வேறுபாடுகளையும் தாண்டி மக்கள் குழுமியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மக்கள் கூடுவதற்கு முன்னதாகவே ஏராளமான காவல்துறையினர் அதிகாலையிலேயே கல்பாக்கத்தில் கொண்டுவந்து குவிக்கப்பட்டனர்.. பொய்கைக்கரை ரவுண்டானாவுக்கு 100 மீட்டர் தொலைவிலேயே தடுப்புகள் வைத்து மக்கள் நிறுத்தப்பட்டனர். கூடியிருந்த மக்களைப் பார்த்து அனுமதி இல்லை எனவும் கலைந்து செல்லுமாறும் கூறியுள்ளனர். மக்கள் அமைதியாக முன்னோக்கி நகர்ந்த போதுக். காஞ்சிபுரம் காவல் கண்கானிப்பாளர் சேவியர் தனராஜ் உத்தரவின் பேரில் திடீரென எவ்வித அறிவிப்பும் இல்லாமல் காவல்துறை தடியடியில் இறங்கியது. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என வித்தியாசமின்றி எல்லோரும் தாக்கப்பட்டுள்ளனர். அஞ்சி ஓடி அருகிலுள்ள தலித் குடியிருப்பில் ஒதுங்கிய மக்களை வீடு புகுந்து தாக்கினர். பெண்களையும் ஆண் போலீசாரே தாக்கினர்.

இதற்கிடையில் பேச்சுவார்த்தை எனச் சொல்லிக் கூடியிருந்த மக்களில் முக்கிய தலைவர்களாகச் சுமார் 30 பேரைத் தேர்வு செய்து செங்கல்பட்டுப் பொறுப்புக் கோட்டாட்சியர் அழைத்துச் சென்றுள்ளார். இந்தப் பேச்சு வார்த்தையிலும் புதிய முன்னேற்றம் எதுவுமில்லை. மின்சாரம் வழங்குவது குறித்துத் தமிழக அரசுடன் பேசி ஒரு வாரத்தில் முடிவு அறிவிக்கப்படும் என்பது மட்டுமே புதிதாகச் சொல்லப்பட்டது. இந்தப் பேச்சு வார்த்தை முடிவுகளும் மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை. இந்நிலையில் பேச்சு வார்த்தைக்கு வந்தவர்களில் முக்கியமான 18 பேரைத் தேர்வு செய்து தடுத்த காவல்துறையினர் அவர்கள் மீதும் இதர 300 பேர் மீதும் கொலை முயற்சி, பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல் முதலான கடும் குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். (குற்ற எண்:114/13, சட்ராஸ் காவல் நிலையம். குற்றப் பிரிவுகள்: இ.த.ச 147,148,361,204b, 353, 332, 506 (ii), 307 r w 223 of PPDL Act.). மேலும் சிலரும் தடுத்து வைக்கப்பட்டபோதும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. அதே போல 18 பேர்களுடன் வழக்கில் இணைக்கப்பட்ட 300 பேரும் ‘தேடப்படுபவர்கள்’ என அறிவிக்கப்பட்டுக் கைது செய்யப்படவில்லை.

தடியடியில் காயமடைந்த 32 பேர்களில் 11 பேருக்கு டவுன்ஷிப் மருத்துவ மனையிலும் பிறருக்கு சட்ராஸ் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் முதலுதவி அளிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட உள்ளூர்த் தலைவர்கள் 18 பேரையும் விடுதலை செய்யக் கோரி பொய்கைக்கரை ரவுண்டானாவுக்குச் சற்றுத் தள்ளியும், புதுப்பட்டினத்திலும் பெருந்திரளாக மக்கள் அமர்ந்தனர். இரவாகியும் மக்கள் யாரும் வீட்டுக்குச் செல்லவில்லை. இந்த 18 பேர் மட்டும் ரிமான்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், தடுத்துவைக்கப்பட்ட மற்றவர்களை விட்டு விடுவதாகவும் ரிமான்ட் செய்யப்பட்ட 18 பேர்களையும் கூட அடுத்த நாள் பிணையில் விட்டு விடுவதாகவும் சொல்லி மக்களைக் கலைந்து செல்லுமாறு ம,ம,க தலைவரிடம் காவல்துறையும் அதிகாரிகளும் கேட்டுக் கொண்டுள்ளனர். அதை ஏற்ற அப்துல் சமது அடுத்த நாள் கூடி முடிவெடுக்கலாம் எனக் கூறி எல்லோரையும் கலைந்து செல்லச் சொல்லியுள்ளார். இரவு 11 மணி வாக்கில் மக்கள் வீடு திரும்பியுள்ளனர்.

மார்ச் 27 அன்று 22 கிராம மக்கள் கூடி “கல்பாக்கம் சுற்றுப்புற கிராம மக்கள் ஒருங்கிணைப்புக் குழு” என்றொரு அமைப்பை உருவாக்கினர், அப்துல் சமது தலைவராகவும், மருத்துவர் புகழேந்தி மற்றும் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் மோகன் ஆகியோர் ஆலோசகர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 18 பேர்கள் மீதான வழக்குகளைத் திரும்பபெற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து அடுத்த நாள் போலீஸ் அனுமதி பெற்று அமைதியாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

ஆனால் காவல் துறை அவர்கள் கோரிக்கையை ஏற்கவில்லை. சாலை மறியல் அல்லது வேறு எந்த விதமான இடையூறுகளையும் செய்யாமல் உண்ணாவிரதம் இருப்பது என உறுதி மொழி அளித்த பின்னும் காவல் துறை மக்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி மறுத்தது.

எனினும் மார்ச் 28 அன்று காலை சட்ராஸ் கோட்டைத் திடலில் கூடிய மக்களில் சுமார் 600 பேர் வான்களில் ஏற்றிச் செல்லப்பட்டு செங்கல்பட்டில் பல திருமண மண்டபங்களில் வைக்கப்பட்டனர். பின் அவர்களில் 420 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அதில் 129 பேரை ரிமான்ட் செய்தனர்.

சிறையிலடைக்கப்பட்டவர்களில் ம.ம.க வின் அப்துல் சமது, ம.தி.மு.க வின் மல்லை சத்யா, வி.சி. கட்சியின் வேலு பிரபாகரன், புரட்சி பாரத்த்தின் ஓ.வி.சங்கர் ஆகியோர் அடக்கம். (Crime no. 126/2013 under 123,188,353,7 and 8 CLA Act against 27 persons,Crime no. 124- filed against 101 people, Crime no. 122- filed against a single person, Mr. Duraisamy who is a ward member of Sadras Village Panchayat )

கோரிக்கைகளின் நியாயங்களும் பின்னணியும்

1.1970களின் தொடக்கத்தில் அணு உலைக்கான நிலம் கைப்பற்றப்பட்டபோது (பழைய) கல்பாக்கம் மற்றும் (பழைய) இடையூர் முதலான பகுதிகளிலிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 ஏக்கர் நிலமும் வேலை வாய்ப்பும் அளிப்பதாக அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டது. வெளியேற்றப்பட்ட மக்களில் தலித்கள் குழிப்பான் தண்டலம் பஞ்சாயத்தைச் சேர்ந்த தலித் குடியிருப்புக்கு அருகில் குடியேறினர், அவர்களின் புதுக் குடியிருப்பு இடையூர் காலனி என அழைக்கப்படுகிறது. வெளியேற்றப்பட்ட மீனவர்கள் மகாபலிபுரத்தை அடுத்த கடற்கரைக்கு அருகாக உள்ள பகுதிகளில் குடியேறினர். புது இடையூர், புதுக் கல்பாக்கம் முதலான பெயர்களில் அவை இன்று அழைக்கப்படுகின்றன. வன்னியர்கள் குச்சிக்காட்டில் குடியேறினர். அதேபோல இன்று கல்பாக்கம் நகரியமாக (டவுன்ஷிப்) உள்ள பகுதி முன்னர் புதுப்பட்டினம் குப்பம் என அழைக்கப்பட்டது. முஸ்லிம்கள், தலித்கள், வன்னியர்கள் என மூன்று பிரிவினரும் அங்கு வாழ்ந்திருந்தனர். அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, முஸ்லிம்கள் புதுப்பட்டினம் ஹாஜியார் நகர் என இப்போது அழைக்கப்படும் பகுதியிலும், தலித்கள் அம்பேத்கர் நகர் என இப்போது அழைக்கப்படும் பகுதியிலும், மீனவர்கள் அருகிலுள்ள இன்னொரு பகுதியிலும் குடியமர்த்தப்பட்டனர். இது தவிர உதிரியாக அருகிலுள்ள பல கிராமங்களில் குடியேறியவர்களும் உளர். இவர்கள் எல்லோருக்கும் மூன்றரை சென்ட் நிலம் மட்டுமே கொடுக்கப்பட்டது, வாக்களித்தபடி இரண்டு ஏக்கர் நிலம், வெலை வாய்ப்பு ஏதுவும் இன்றுவரை அளிக்கப்பட்டவில்லை.

புதிய இடங்களில் அவர்கள் தங்களின் பாரம்பரியமான வாழ்க்கையை இழந்தனர். பழைய மனித உறவுகள், தொழில் உறவுகள் ஆகியனவும் மாறின. எடுத்துக்காட்டாக இடப்பெயர்வுக்கு முன் மீனவர்கள் விவசாயிகளுக்கு மீன் கொடுப்படும், ஈடாக விவசாயிகள் மீனவர்களுக்கு அறுவடை நேரத்தில் நெல் கொடுப்பதும் இருந்து வந்துள்ளது. இவை அனைத்தும் இப்போது சிதைந்தன. முஸ்லிம்களின் மசூதி, அடக்கத் தலம் (கபர்ஸ்தான்) முதலானவை இருந்த இடங்களில் இன்று கனரா வங்கி, பேருந்து நிலையம், பணிமனை, உணவகம் ஆகியவை உள்ளன.

தவிர மீன்பிடித் தொழிலும் நசிந்தது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் மீனவ இளைஞர்களில் 70 சதம் மீன்பிடித் தொழிலில் இருந்தனர் என்றால் இப்போது 20 முதல் 30 சதம் பேரே மீன்பிடித் தொழிலில் உள்ளனர். மீன் வளக் குறைவு ஏற்பட்டுள்ளது ஒரு காரணம். இடம்பெயர்க்கப்பட்டு வாழும் இடையூர் காலனியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் (‘The Impact of the Development Induced Displacemrnt on the Income of the Poor’ – A B.A (Hons) dissertation submitted by Pradeep, Christ University, Bangalore, March 2012.) இங்கு வாழும் தலித் மக்களின் வருமானம் குறைந்துள்ளதும், அதன் விளைவாகச் சத்துணவுப் பயன்பாடு, வாழ்நிலை முதலியன பாதிக்கப்பட்டுள்ளதும் தெரிய வருகிறது.

அதே நேரத்தில் கல்பாக்கத்தில் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் கட்டப்பட்ட டவுன்ஷிப் எல்லா வசதிகளுடன் அமைந்தது. அணுசக்தித் துறை நடத்துகிற தரமான பள்ளிகள், மத்திய அரசின் கேந்த்ரிய வித்யாலயாக்கள் ஆகியவற்றில் அவர்களின் பிள்ளைகளுக்குத் உயர்தரக் கல்வி கிடைக்கிறது. நாள் முழுவதும் தடையற்ற மின்சாரம் அளிக்கப்படுகிறது. உலைக்கு அருகில் சென்று பணி செய்ய நேர்கிற நிரந்தர ஊழியர்களுக்கு கதிர்வீச்சுத் தாக்கம் குறித்த சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் வெட்டினால் டவுன்ஷிப்புக்கு அருகாமையில் உள்ள கிராமங்கள் எல்லாவற்றிலும் தினம் 18 மணி நேர மின்வெட்டு உள்ளது, சமீபத்திய ‘நிலாம்’ புயலின் போது நான்கு நாட்கள் வரை அப்பகுதி முழுமையாக மின்சாரம் இல்லாமல் இருந்துள்ளது.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை ஒட்டி சுற்று வட்டார கிராமங்களின் அகக்கட்டுமானங்கள் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றிற்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதைக் கண்டபோது கல்பாக்கத்தைச் சுற்றி வாழ்கிற மக்கள் மத்தியில் தங்களது நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும், டவுன்ஷிப்பிற்கு அளிக்கப்படுவது போலத் தங்களுக்கும் தடையற்ற மின்சாரம் அளிக்கப்பட வேண்டும். தங்கள் பிள்ளைகளுக்குத் தரமான கல்வியும் வேலை வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள் இயல்பாக எழுந்தன.

கல்பாக்கம் ஆலைக்குள் தற்போது ஒப்பந்த ஊழியர்கள் அதிக அளவில் பணியமர்த்தப் படுகின்றனர். இந்த ஒப்பந்த ஊழியர்களில் 50 சதத்திற்கும் மேற்பட்டோர் வட மாநிலங்களைச் சேர்ந்தோர். இவ்வாறு புலம் பெயர் தொழிலாளிகளைப் பெரிய அளவில் பயன்படுத்துவதன்மூலம் நிர்வாகங்கள் பல பயன்களைப் பெறுகின்றன. குறைந்த ஊதியம், தொழிற்சங்கம் அமைத்தல் முதலான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுதல், தொழிலகங்களில் பாதுகாப்பு, மருத்துவம் முதலிய பொறுப்புகளிலிருந்து நழுவுதல் முதலியன இதன் மூலம் நிர்வாகத்திற்குச் சாத்தியமாகின்றன. வெளி மாநிலங்களைச் சேந்தவர்களுக்கு உள்ளூர் அரசியல் கட்சிகளின் தொடர்பு இல்லாததால் அவர்களும் இவர்களின் நியாயங்களைப் பேசுவதில்லை. கல்பாக்கத்தைப் பொருத்த மட்டில் அதிக ஆபத்தான பணிகளில் ஒப்பந்தத் தொழிலாளிகளே ஈடுபடுத்தப்படுகின்றனர்,

ஒப்பந்தப்பணியாளர்களின் நிலை இவ்வாறு இருந்தபோதும் பெரிய அளவில் இவ்வாறு வெளி மாநிலத்தவரின் இருப்பு, தங்களின் வேலைவாய்ப்பைப் பாதிப்பதாகவும் உள்ளூர் மக்கள் கருதுகின்றனர்.

2. ஃபுகுஷிமா விபத்திற்குப்பின் அணு உலை விபத்து மற்றும் கதிர்வீச்சுப் பாதிப்பு ஆகியன குறித்து உலகெங்கும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொத்தாக இப்படி மேலும் பல அணு உலைகளைக் கல்பாக்கத்தில் கட்ட இருப்பது குறித்த அறிவிப்பு சுற்றுப்புற மக்கள் மத்தியில் நியாயமான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்பாக்க ஆலைகளில் ஏற்கனவே பல சிறிய அளவு விபத்துக்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 1987ல் எரிபொருளை நிரப்பும்போது உலையின் உள் மையத்தில் பாதிப்பு ஏற்பட்டு வேக ஈனுலை ஒன்று இரண்டாண்டுகள் மூடப்பட்டது. 1991ல் ஏற்பட்டக் கதிர்வீச்சுக் கசிவொன்றில் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். 2002ல் 100 கி.கி எடையுள்ள கதிர்வீச்சு சோடியம் கசிந்தது. 2003ல் அணு உலைக் கழிவிலிருந்து வந்த கசிவால் KARPல் பணி செய்த ஆறு ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். முதலில் இதை மறுத்த நிர்வாகம் பின்னர் ஒத்துக்கொண்டது. BARC இயக்குனர் பி.பட்டாசார்ஜி இந்த விபத்து பற்றிக் கூறுகையில் “இது இந்தியாவில் ஏற்பட்ட மிக மோசமான கதிர்வீச்சு விபத்து” எனக் கூறியது குறிப்பிடத் தக்கது (Outlook, July 28, 2003).

அதோடு இன்று கல்பாக்கத்தில் செயல்படுகிற எரிபொருள் மறு தயாரிப்பு உலை (KARP1) தவிர மேலும் ஒன்று (KARP2) கட்டப்பட உள்ளது. அதேபோல ‘கழிவுகளைச் செயலறச் செய்யும் உலை’ (Waste Immobilization Plant) ஒன்றும் இங்கு உள்ளது. இதோடு புளுடோனியத்திற்காக இன்னொரு செயலறச் செய்யும் உலையும் அமைக்கப்படுகிறது. இந்தியாவில் இத்தகைய வசதிகள் தாராபூர், மும்பை மற்றும் கல்பாக்கம் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே பிற இடங்களிலிருந்து அணுக் கழிவுகளை இங்கே கொணர்வதற்கான வாய்ப்புகள் குறித்த ஊர் மக்களின் அச்சம் முற்றிலும் நியாயமானது. கூடங்குளம் சென்றிருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் கூடங்குளக் கழிவுகள் கல்பாக்கத்திற்குக் கொண்டு செல்லப்படும் எனக் கூறியதும் நினைவு கூரத்தக்கது.

3. தவிரவும் அக்டோபர் 30, 2011ல் சமர்ப்பிக்கப்பட்ட மஞ்சுளா தத்தா அறிக்கை (Cmpprehensive Health Survey of Villagees around Kalpakkam – provisional Report) கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள மக்கள் மத்தியில் ஒப்பீட்டளவில் கதிர்வீச்சு நோய்த் தாக்கம் கூடுதலாக உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. கல்பாக்கம் அணு உலைகளைச் சுற்றி 8 கி.மீ தொலைவுக்குள் உள்ள 22 கிராமங்களில் புற்று நோய்த் தாக்கம் 7 மடங்கு அதிகமாகவும், மூளை வளர்ச்சிக் குறைவு 11 மடங்கு அதிகமாகவும், தைராய்ட் நோய் 5 மடங்கு அதிகமாகவும், குழந்தையின்மை, மையோபியா, நீரிழிவு முதலான நோய்கள் குறிப்பிடத்தக்க அளவு அதிகமாகவும் (statistically significant) உள்ளதை நிறுவியுள்ளது. பொதுவில் நோய்த் தாக்கம் இரண்டு மூன்று மடங்கு அதிகமாக உள்ளது எனக் கூறிய இவ்வறிக்கை கல்பாக்கத்தைச் சுற்றி இன்று நிலவும் சூழல், 1994ல் ராஜஸ்தான் அணு உலைகளைச் (RAPS) சுற்றி சுரேந்திர கடேகர், சங்கமித்ர கடேகர் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வுகளில் (International Perspective on Rural Health) சுட்டிக் காட்டப்பட்ட சூழலை ஒட்டி உள்ளதைச் சுட்டிக்காட்டியது. சுட்டிக்காட்டப்பட்ட இந்த அறிக்கை பெரிய அளவில் ‘ராப்ஸை’ ஒட்டிப் புற்று நோய் முதலானவை உள்ளதை நிறுவியது குறிப்பிடத்தக்கது..

மேலும் டிசம்பர் 3, 2013ல் மருத்துவர் புகழேந்தி, பி.டி.ஐ யின் முதன்மை அறிவியல் செய்தியாளரான டாக்டர் கே.எஸ். ஜெயராமன் ஆகியோர் வெளியிட்ட ஆய்வறிக்கையில் ஒன்றரை ஆண்டுகளில் கல்பாக்கம் டவுன்ஷிப்பில் எலும்பு மக்ஞைப் புற்று நோயால் மூவர் இறந்துள்ளது நிறுவப்பட்டது. இவர்களில் இருவர் கல்பாக்க அணு உலை ஊழியர்கள். இது அடையார் உட்பட இந்தியாவிலுள்ள ஏழு புற்று நோய் ஆய்வகங்களிலும் குறிப்பிடப்படும் அளவைக் காட்டிலும் அதிகம் (statistically significant). இந்த முடிவை நிர்வாகத்தால் மறுக்க இயலவில்லை, ஊழியர்கள் உடலில் ஏற்படும் கதிர்வீச்சுத் தாக்கம் அணு ஆற்றல் ஒழுங்காற்று வாரியம் (AERB) விதித்துள்ள எல்லையைத் தாண்டவில்லை என்று மட்டுமே நிர்வாகத்தால் பதிலளிக்க முடிந்தது.

அமெரிக்காவில் பில் க்ளின்டனின் ஆட்சிக் காலத்தில் இவ்வாறு அணு உலையச் சுற்றியுள்ள மக்களுக்குப் புற்று நோய்த் தாக்கம் வந்தால் உரிய இழப்பீடு வழங்குவதற்காகச் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறையிலுள்ளது குறிப்பிடத்தக்கது. அணு உலையைச் சுற்றி வாழும் மக்கள் மத்தியில் எத்தகைய கதிர்வீச்சு சார்ந்த நோய்களெல்லாம் வரும் என்பதும் அச்சட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

ஆனால் அத்தகைய சட்டங்கள் ஏதும் இங்கில்லை. குறைந்த பட்சம் கதிர்வீச்சுத் தாக்கத்தால் ஏற்படும் நோய்களுக்கான ஒரு மருத்துவமனையும் கூட இங்குக் கிடையாது. இங்கு இப்படியான கதிர்வீச்சு ஆபத்துக்கள், மரணங்கள் உள்ளதைச் சுட்டிக்காட்டி இப்பகுதியில் ஸ்பெஷாலிடி மருத்துவமனை ஒன்றைக் கட்டுவது தொடர்பாகக் காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் விசுவநாதன் சென்ற மார்ச் 16 அன்று பாராளுமன்றத்தில் பேசியது குறிப்பிடத்தக்கது. இது குறித்து நாங்கள் பாவினி சி.எம்.டி ப்ரபோத் குமாரிடம் கேட்டபோது விசுவநாதனின் கூற்றை அவர் நிராகரித்துப் பேசினார்.

அணு உலை நிர்வாகத் தரப்பின் கருத்துக்கள்

பாவினி சி.எம்.டி திரு ப்ரொபோத் குமாரும் அவரது துறை சார்ந்த மூத்த விஞ்ஞானிகளும் எங்களுக்காக நேரம் ஒதுக்கிப் பொறுமையாகப் பேசியபோதும் அடிப்படையான கேள்விகள் எதற்கும் அவர்களால் திருப்தியான பதில் அளிக்க இயலவில்லை. எழுத்து மூலமாக எதையும் தருவதற்கும் அவர்கள் தயாராக இல்லை. தாங்கள் இப்படியாக வருவோருக்கு வழக்கமாகப் போட்டுக் காட்டும் விளக்கப் படங்களைப் பார்த்துவிட்டுச் செல்லுமாறு அறிவுறுத்தியதோடு நிறுத்திக் கொண்டனர்.

எடுத்துக்காட்டு:

அ) ஃபுகுஷிமாவுக்குப் பிறகு கல்பாக்க அணு உலைகளின் விபத்துகளைத் தாங்கும் நிலை குறித்து ஆய்வு (stress test) மேர்கொள்ளப்பட்டதை நிர்வாகம் ஒத்துக் கொண்டது. அந்த ஆய்வறிக்கைப் பிரதியை ஏன் வெளியிடவில்லை என்கிற கேள்விக்கு அவர்களிடம் பதிலில்லை. அதன் பிரதியைக் கேட்டபோது முதலில் தருவதாகச் சொன்னவர்கள் இறுதியில் அணு சக்தி ஒழுங்காற்று வாரியத்திடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள் எனக் கைவிரித்தனர்.

ஆ) கல்பாக்கம் அணு உலை நிர்வாகத்தின் வேண்டுகோளின் அடிப்படையில்தான், ‘ஆஸ்பைர்’ எனும் தொண்டு நிறுவனத்தின் மூலம் மஞ்சுளா தத்தா அறிக்கை தயாரிக்கப்பட்டது. இவ்வறிக்கை கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள 22 கிராமங்களில் கதிர்வீச்சு நோய்கள் அதிகமாக உள்ளதை நிறுவியதைப் பார்த்தோம். இது குறித்த எங்களின் கேள்விக்கு நிர்வாகத்திடம் பதிலில்லை. அவ்வறிக்கையை நிர்வாகம் நிராகரித்துவிட்டதா என்கிற கேள்விக்கும் பதிலில்லை. அவர்கள் சொன்னதெல்லாம் வேறு சில அறிக்கைகள் அப்படிச் சொல்லவில்லை என்பதும் கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள கதிர்வீச்சு அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டவில்லை என்பதுந்தான்.

இ) வெளியிலுள்ள அணு உலைகளிலிருந்து அணுக்கழிவுகள் இங்கு கொண்டு வரப்படுகிறதா எனக் கேட்டதற்கு இதுவரை அப்படிக் கொண்டுவந்து புதைக்கப்படவில்லை என்றுதான் அவர்களால் பதிலளிக்க முடிந்தது, எதிர்காலத்தில் எத்தகைய முடிவுகள் எடுக்கப்படும் எனச் சொல்ல இயலாது என்றனர். புதைப்பதற்கு இங்கு ஏற்பாடு இல்லை என்றபோதிலும், இங்கு வெளியிலிருந்து வரும் கழிவுகள் மறு சுழற்சி செய்யப்படுவதை ஏற்றுக்கொண்டார் ப்ரொபோத் குமார். மறு சுழற்சியில் முழுமையாகக் கழிவுகள் மீள் தயாரிப்பு செய்யப்படுவதால் புதைப்பது என்கிற பேச்சுக்கே இடமில்லை என்றனர் மூத்த விஞ்ஞானிகள். ஆனால் மறு சுழற்சியிலும் சிறிய அளவு அதிக ஆபத்துமிக்க கழிவுகள் தங்கும் என்பதே உண்மை. இந்தக் கழிவுகளை எங்கே புதைப்பது என்கிற கொள்கை முடிவை இந்தியா இதுவரை எடுக்கவில்லை என இறுதியாகப் பதிலுரைத்தனர். மூன்று இடங்களில் மட்டுமே இந்த வசதிகள் இருப்பதால் கூடங்குளம் உள்ளிட்ட ஆலைகளின் கழிவுகள் இங்கு கொண்டுவருவதற்கு எல்லாவிதமான சாத்தியங்களும் உண்டு. அப்படிக் கிடையாது என உறுதியான பதிலைச் சொல்வதற்கு நிர்வாகம் தயாராக இல்லை.

ஈ) அருகில் வாழும் மக்கள் மத்தியில் கதிர் வீச்சுத் தாக்கம் குறித்த சோதனைகள் ஏன் செய்யப்படுவதில்லை எனக் கேட்ட போது, பதிலாகத் தாங்கள் இப்பகுதியின் காற்று, நீர், உணவுப் பொருட்கள் ஆகியவற்றில் கதிர்வீச்சுத் தாக்கம் எந்த அளவில் உள்ளது எனத் தொடர்ந்து கண்காணிப்பதாகவும் அவை, அணு ஒழுங்காற்று வாரியம் (AERB) விதித்துள்ள எல்லைகளை மீறவில்லை என்றும் மட்டுமே பதில் கூறினர். ஆனால் பன்னாட்டு அணு ஆற்றல் முகமை (IAEA) சுற்றுப்புறம் மட்டுமின்றி மக்களுடைய பாதுகாப்புக்கும் அணு மின் நிலையமே பொறுப்பு எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எ) கொத்தாக ஒரே இடத்தில் அணு உலைகளை அமைத்துக் கொண்டு போவது குறித்துக் கேட்டபோது, ஏதேனும் விபத்துக்கள் ஏற்பட்டால் ஓரிடத்திலுள்ள பாதுகாப்பு வசதிகள் மற்றவற்றிற்கும் பயன்படுத்த அதுவே நல்லது எனப் பதிலளித்தனர். அதாவது கொத்தாக ஒரே இடத்தில் ஆலைகள் இருந்தால் எல்லாத் தற்காப்பு வசதிகளையும் ஒரே இடத்தில் குவிப்பது சாத்தியமாக இருக்கும் என்பது அவர்களின் தர்க்கம். ஒரு உலையில் ஏற்படும் விபத்து உடனடியாக மற்ற உலைகளுக்குப் பரவும் ஆபத்து குறித்த மிக நியாயமான அச்சத்தை அவர்கள் அலட்சியப்படுத்தினர்.

ஏ) வேலை வாய்ப்பு, கதிர்வீச்சு நோய்களுக்கான மருத்துவ மனை, தடையற்ற மின்சாரம் முதலிய கோரிக்கைகளைத் தகுதி, திறமை, தற்போதுள்ள விதிமுறை ஆகியவற்றைக் காரணம் காட்டி மறுத்தனர். இது தொடர்பாகச் சில அதிகாரங்கள் நிர்வாகத்திற்கு இல்லை என்பது உண்மைதான் என்ற போதிலும் மக்களின் உணர்வுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு இது தொடர்பாக மேலே உள்ளவர்களுக்குப் பரிந்துரைக்கும் மனநிலை நிர்வாகத்திற்கு இல்லை. மக்களின் போராட்ட வடிவத்தை “தேச விரோதம்” (anti national) என்றார் ப்ரொபோத் குமார். ஒப்பந்த ஊழியர்கள், பிற மாநில ஊழியர்கள் முதலான விவரங்களையும் கூட அவர்கள் தரத் தயங்கினர். ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஆலைக்குள் பஸ் வசதி செய்து தருதல், செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையை கதிர்வீச்சு நோய்களுக்கான சிறப்பு மருத்துவ மனையாக உயர்த்துதல் போன்ற எங்களின் ஆலோசனைகளை மட்டுமே அவர்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டு ஆவன செய்வதாகக் கூறினர்.

ஐ) “சுனாமியில் கூடத் தப்பிப் பிழத்த அணு உலை எங்களுடையது, நாங்கள் எல்லாம் அணு உலைக்கருகிலேயே வாழவில்லையா?” என்பதை அதிகாரிகள் அடிக்கடி கூறினர். 1980 களில் கல்பாக்கம் அணு உலை கட்டப்பட்டபோது சுனாமி ஆபத்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அப்படியும் சுனாமியால் ஆபத்து ஏற்படாதது தற்செயல்தானே ஒழிய உங்களின் பாதுகாப்பு நடவடிக்கையால் அல்ல. மீண்டும் ஒரு சுனாமி அல்லது கல்பாக்கத்தில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான கடல் எரிமலைகளின் வெடிப்பு ஆகியவற்றால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டால் இப்படிக் கல்பாக்க அணு உலை பாதிக்கப்படாமல் இருக்க வாய்ப்பு இல்லை என்பதைச் சுட்டிக் காட்டிய போது அவர்களால் பதில் ஏதும் சொல்ல இயலவில்லை. அதிகாரிகளிடம் பேசிக்கொண்டிருந்தபோது எங்களுக்கு மகாகவி பாரதியின் “படிச்சவன் சூதும் வாதும் பண்ணினால் போவான் போவான் அய்யோன்னு போவான்” என்கிற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வந்தன.

காவல்துறை அத்துமீறல்கள்

மார்ச் 25,26,28 ஆகிய தேதிகளில் ஊர் மக்கள் பெருந் திரளாகக் கூடியிருந்த போதிலும் அவர்கள் மிகவும் கட்டுப்பாட்டுடனும் அமைதியாகவுமே நடந்துள்ளனர். காவல்துறை அவர்களது போராட்டத்திற்கு இடம் குறிப்பிட்டு உரிய அனுமதி வழங்கியிருக்கலாம். அமைதியாகக் கூடியிருந்தபோதிலும். 26 அன்று கண்காணிப்பாளர் சேவியர் தனராஜ் எந்தவித முன்னறிவிப்பும் இன்றித் தடியடி நடத்தியுள்ளார். அணு உலை ஒப்பந்த வாகனங்களைக் காவல்துறையினரே அடித்து நொறுக்கினர் எனவும் மக்கள் கூறுகின்றனர். எனினும் கண்காணிப்பாளர் அதை மறுத்தார். காவல்துறையினர் சிலரை மக்கள் தாக்கினர் எனவும் கூறினார்.. செங்கல்பட்டு மருத்துவமனைக்குச் சென்று விசாரித்தபோது காவல்துறையினர் யாரும் பெரிய அளவில் அடிபட்டு சிகிச்சை பெறவில்லை எனபதைப் பார்த்தோமே எனக் கேட்டதற்கு, எங்கள் காவலர்கள் மூவர் அவர்களிடம் அகப்பட்டுக் கொண்டபோது அவர்களைப் போராட்டக்காரர்கள் அடித்தது உண்மை என்றார்.

ஒரு தள்ளுமுள்ளு நடந்திருக்கலாம். ஆனால் பெரிய அளவில் காவற்படை அங்கு குவிக்கப்பட்டிருந்தது. மக்கள் அமைதியாகக் கைதாவதற்கும் தயாராக இருந்தனர். காவல்துறை நினைத்திருந்தால் அன்று தடியடியைத் தவிர்த்து நிலைமையச் சமாளித்திருக்கலாம். கண்காணிப்பாளர் சேவியர் தனராஜ் ஏற்கனவே செங்கல்பட்டு ஏ.எஸ்.பி யாக இருந்தபோது, செங்கல்பட்டுச் சிறப்புக் காவல் முகாமிற்குள் போராட்டம் நடத்திய ஈழத் தமிழர்கள் மீது கொடுமையாகத் தாக்குதல் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தவிரவும் இந்தத் தள்ளுமுள்ளில் எந்தத் தொடர்பும் இல்லாதவர்களும் பேச்சுவார்த்தைக்குச் சென்றவர்களுமான தலைவர்களில் 18 பேரைத் தேர்வு செய்து அவர்கள் மீது கொடிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் போட்டு இன்னும் சிறையில் அடைத்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது குறித்து மகாபலிபுரம் உதவிக் கண்காணிப்பாளர் எங்களிடம் பேசும்போது அணு உலை ரொம்பப் பாதுகாப்பான இடம். பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேலதிகாரிகள் இப்படிச் செய்ய வேண்டியிருந்தது என்றார்.

28 அன்று உண்ணாவிரதப் போராட்டம் தொட்டர்பாகக் காவல்துறை விதிக்கும் எல்லாவிதமான நிபந்தனைகளையும் ஏற்பதாகப் போராட்டக் குழு வாக்குறுதி அளித்தும் அந்தப் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதும் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. அனுமதி மறுக்கப்பட்டது மட்டுமின்றி முக்கிய தலைவர்கள் உட்பட 129 பேர் அன்று சிறையிலடைக்கப்பட்டனர். கல்யாண மண்டபத்திற்கு மாஜிஸ்ட்ரேட் வந்து ரிமான்ட் செய்துள்ளார். இப்படிப் போலீசுக்கு மாஜிஸ்ட்ரேட்கள் வளைந்து கொடுப்பதை உச்ச நீதி மன்றம் கண்டித்துள்ள போதிலும், இப்படித் திருக்கழுக்குன்றம் மேஜிஸ்ட்ரேட் எந்தக் கேள்வியும் இல்லாமல் ரிமான்ட் செய்தது வருந்தத் தக்கது.

ஏப்ரல் 2 அன்று 129 பேரில் 127 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது, அவர்கள் செங்கல்பட்டிலுள்ள ஒரு திருமண மண்டபத்தின் பெயரைக் குறிப்பிட்டு அதிலேயே தங்கியிருந்து ஒரு நாளைக்கு இருமுறை காவல் நிலையத்தில் கையொப்பமிடவேண்டும் என இப்போது ஆணையிடப்பட்டுள்ளது. இது ஒரு சிறைச்சாலையிலிருந்து இன்னொரு சிறைச்சாலைக்கு மாற்றுவதுதானே ஒழிய பிணையில் விடுதலை செய்வதல்ல. தவிரவும் மண்டப வாடகை, உணவுச் செலவு ஆகியவை யார் பொறுப்பு எனச் சொல்வதற்கும் நீதிமன்றம் கவலை கொள்ளவில்லை.

26 அன்று கைது செய்யப்பட்ட 18 பேருக்கும் பிணை மறுக்கப்பட்டுள்ளது. மக்களால் தாக்கப்பட்ட போலீசார் இன்னும் சிகிச்சையில் உள்ளதாகக் காரணம் சொல்லி காவல்துறை சொன்ன மறுப்பை நீதிமன்றம் ஏற்று அவர்களுக்கு இன்று பிணை மறுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மருத்துவமனைக்கு நேற்று எங்கள் குழு சென்று விசாரித்தபோது அங்கு போலீசார் யாரும் சிகிச்சையில் இல்லை என்பதை முன்பே குறிப்பிட்டோம். பெரிய காயங்களுடன் யாரும் அங்கு சிகிச்சை பெற்றதாகவும் தெரியவில்லை.

எமது பார்வைகளும் கோரிக்கைகளும்

அணு உலை தொடர்பாக எந்த எதிர்ப்பும் வந்துவிடக் கூடாது என்பதிலும் அப்படி வந்தால் அதைக் கடுமையாக எதிர்கொள்வது என்பதிலும் அரசு உறுதியாக உள்ளது என்பதற்கு இந்த நிகழ்வுகள் இன்னொரு எடுத்துக்காட்டு. இப்படியான ஒடுக்குமுறையில் அணு ஆற்றல் துறை, அரசு நிர்வாகம், காவல்துறை, நீதிமன்றம் எல்லாம் கருத்தொருமிப்புடன் இணைந்து செயல்படுகின்றன.

மக்களின்மீது ஒட்டுமொத்தமான ஒரு அடக்குமுறையையும் கண்காணிப்பையும் செலுத்துவதற்கு தேசப்பாதுகாப்பு மற்றும் அணு ஆற்றல் பாதுகாப்பு முதலியவற்றை அரசு ஒரு கருவியாகக் கையாள்கிறது. அதனாலேயே நேரு காலந்தொட்டு எவ்வித வெளிப்படைத் தன்மையும் இன்றி அணு சக்தித் துறையை அரசு செயல்படுத்தி வருகிறது. தனக்கு மக்கள் முன் வெளிப்படையாகவும் பொறுப்பின்றியும் இருக்க உரிமை உண்டு என அரசு காட்டிக் கொள்வதற்கான முகாந்திரமாகவும் அணுசக்தித் துறை செயல்படுகிறது.

‘வளர்ச்சி’ என்பதைக் காட்டி மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க அரசும் நிர்வாகங்களும் இரு வழிகளைக் கையாள்கின்றன. உள்ளூரில் செல்வாக்குள்ளவர்கள் சிலருக்குப் பல்வேறு வகைகளில் பொருளாதாரம் மற்றும் இதர சலுகைகளை அளித்து அவர்களை ஊழல் மிக்கவர்களாக மாற்றித் தன்னைச் சுற்றி ஒரு பாதுக்காப்புக் கவசத்தை நிர்வாகம் ஏற்படுத்திக் கொள்வது ஒரு வழி. கல்பாக்கத்திலும் இதுதான் நடக்கிறது. ஒப்பந்தங்கள் வழங்குவது, தனது நிர்வாகத்தில் உள்ள பள்ளிகளில் அவர்களின் குழந்தைகளுக்கு இடமளிப்ப்து போன்ற எத்தனையோ வழிகளில் இதைக் கல்பாக்க நிர்வாகம் செய்து வருகிறது. இந்த வகையில் ஒரு ஒருமித்த தலைமை உருவாகாமல் தடுத்து வருகிறது. இப்போதும் கூட, இந்தப் போராட்டத்திலும் கூட அத்தகைய குறைபாடு இருப்பதை எங்களால் காணமுடிந்தது.

கோரிக்கைகள்

1. மார்ச் 26 அன்று நடைபெற்ற தடியடியும், 28 அன்று நடைபெற்ற கைதுகளும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கன. தள்ளுமுள்ளில் தொடர்பில்லாத உள்ளூர்த் தலைவர்களைக் கைதுசெய்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும். கைது செய்யப்பட்ட அனைவர் மீதும் தொடுக்கப்பட்ட வழக்குகள் திரும்பப்பெறப்பட்டு அவர்கள் நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும். ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டவர்கள் குறிப்பிட்ட திருமண மண்டபத்தில் தங்கி இருமுறை கையெழுத்திட வேண்டும் என்கிற நிபந்தனை நீக்கப்பட வேண்டும். மண்டப வாடகை, உணவுச் செலவு ஆகியவற்றிற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.

2. உலையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கல்வி, மின்சாரம் ஆகியவற்றில் அளிக்கப்படும் சிறப்புச் சலுகைகள் அவர்கள் எதிர்கொள்ளும் கதிர்வீச்சு ஆபத்தின் அடிப்படையிலேயே அமைகிறது. அதே ஆபத்து சுற்று வட்டாரத்திலுள்ள 22 கிராம மக்களுக்கும் உண்டு என்பதால் அந்தச் அலுகைகள் அம் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது ஒரு நியாயமான கோரிக்கை. மக்கள் மத்தியில் இடப்பெயர்வு தொடர்பான விழிப்புணார்வு பெரிய அளவில் இல்லாத காலத்தில் கல்பாக்கம் அணு உலைக்கான நிலங்கள் கைப்பற்றப்பட்டன. அன்று அவர்கள் பெரிய அளவில் போராடாத காரணத்தினாலேயே அவர்களுக்கு அன்று அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டன, இன்று இதுபோன்று நிலங்கள் கைப்பற்றப்படும்போது மற்றவர்களுக்கு அளிக்கப்படும் இழப்பீடுகளும் கல்பாக்க மக்களுக்கு தொடர்ந்து மறுப்பதை ஏற்க இயலாது. ஒப்பந்தப் பணியாளர்களைக் குறைத்து நிரந்தரப் பணியாளர்களை அதிகப்படுத்துவது என்பதோடு, நிரந்தரப் பணிகளில் உள்ளூர் மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கு ஏற்ப சட்டத் திருத்தங்களை அரசுடன் இணைந்து அணு ஆற்றல் துறை மேற்கொள்ள வேண்டும்.

3. விஞ்ஞானிகள் போன்ற பதவிகளுக்குப் போதிய அளவில் தகுதியானவர்கள் உள்ளூரில் இல்லை என அதிகாரிகள் கூறினர். அப்படியானவர்கள் உருவாகும் வகையில் கல்பாக்கத்தில் உள்ள அணு உலை நிர்வாகப் பள்ளிகள் மற்றும் கேந்த்ரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ளூர் குழந்தைகளுக்குத் தனி இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதற்கு ஏற்ப சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

4. அருகிலுள்ள டவுன்ஷிப்பில் 24 மணிநேர தடையற்ற மின்சாரம், அதே இடத்தில் கதிர்வீச்சைத் தாங்கி வாழும் மக்களுக்கு 18 மணி நேர மின்வெட்டு என்பதில் எந்த அறமும் இல்லை. விதிகளைக் காட்டி இக் கோரிக்கையை நிர்வாகம் மறுக்கக்கூடாது, டவுன்ஷிப்பிற்கு நேரடியாக மின்சாரம் வழங்குவதைப் போலவே சுற்றுப்புற கிராம மக்களுக்கும் மின்சாரம் வழங்கும் திட்டத்தை அணு சக்த்தித் துறை முன்வைத்து தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும்.

5. கதிர்வீச்சிற்கான சிறப்பு மருத்துவமனை என்கிற கோரிக்கை காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினராலும் வைக்கப்பட்டுள்ளது. மஞ்சுளா தத்தா போன்றோரின் அறிக்கையும் அதன் தேவையைச் சுட்டிக் காட்டுகிறது. அத்தகைய மருத்துவமனை ஒன்றை அணு உலை நிர்வாகத்துடன் இணைந்து உருவாக்க உடனடியாக அரசு ஆவன செய்ய வேண்டும்..

6. அணு உலை ஊழியர்கள் மட்டுமின்றி சுற்று வட்டார மக்கள் மத்தியிலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கதிர்வீச்சுத் தாக்கச் சோதனைகள் நடத்தப்பட வேண்டும். அமெரிக்காவில் உள்ளது போல கதிர்வீச்சு சார்ந்த நோய்களால் தாக்காப்படுவோர்க்கு இழப்பீடு வழங்கும் சட்டம் ஒன்றை இங்கும் இயற்ற வேண்டும்.

7. ஃபுகுஷிமா விபத்திற்குப் பின் இங்கு மேற்கொள்ளப்பட்ட கல்பாக்க உலைகளுக்கான விபத்து தாங்கு திறன் சோதனை முடிவுகள், வெளியிலிருந்து மறு சுழற்சிக்காக அணுக்கழிவுகள் இப்போதோ, எதிர்காலத்திலோ கொண்டுவரக் கூடிய திட்டங்கள் ஏதும் உள்ளனவா, கல்பாக்கத்தில் இரண்டாவதாகக் கட்டப்பட உள்ள மறு சுழற்சி ஆலையின் நோக்கம், ஒப்பந்த மற்றும் நிரந்தரத் தொழிலாளிகளின் விவரங்கள், கடல் எரிமலை குறித்து மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியன குறித்த வெள்ளை அறிக்கை ஒன்றை கல்பாக்க அணு உலை நிர்வாகம் உடனடியாக வெளியிட வேண்டும்.

8. கொத்தாகப் பல ஆலைகள் ஒரே இடத்தில் அமைக்கப்படுவது ஆபத்தானது. ஃபுகுஷிமா ஒரு எடுத்துக்காட்டு. எனவே கல்பாக்கத்தில் மேலும் அணு உலைகள் கட்டுவது நிறுத்தப்படவேண்டும். ஃபுகுஷிமாவிற்குப் பிறகு பன்னாட்டு அணுஆற்றல் முகமை வெளிட்டுள்ள (மே 27, 2011) ஆவணத்தில் கல்பாக்கத்திற்கு அருகில் கடல் எரிமலை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் அது குறிப்பிட்டுள்ளது. இப்படியான ஒரு சூழலில் மேலும் அணு உலைகளைக் கட்டிக் கொண்டே போவது மிகவும் ஆபத்தானது.

9. ஒவ்வொரு ஆண்டும் கல்பாக்க அணு உலை ஊழியர்களிடமிருந்து சுமார் 70,000,00 ரூ தொழில் வரி (professional tax) வசூலிக்கப்படுகிறது. இது முறையாகச் சுற்றியுள்ள கிராமப் பஞ்சாயத்துக்ளுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அரசு ஒரு அறிக்கை அளிக்க வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*