மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (31.03.2013) விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஓர் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
சென்ற 27ந்தேதியன்று காலாப்பட்டு மத்திய சிறையில் 14 ஆண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்வதில் காலதாமதம் ஏற்படுவதைக் கண்டித்து சமையல் செய்யாமல் தண்டனைக் கைதிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால், உணவின்றி தவித்த விசாரணைக் கைதிகள் தங்களுக்கு வீட்டிலிருந்து உணவு வழங்கும்படி சிறை நிர்வாகத்தினரிடம் கோரியுள்ளனர். அதற்கு சிறை நிர்வாகம் மறுப்புத் தெரிவிக்கவே கைதிகளுக்கும், சிறை அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஒரு சில கைதிகள் அதிகாரிகளைத் தகாத வார்த்தைகள் கூறித் திட்டியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த சிறை அதிகாரிகள் கைதிகளைத் தாக்கியுள்ளனர்.
இத்தாக்குதலில் விசாரணைக் கைதிகள் 18 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும், மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த கைதிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க சிறை நிர்வாகத்தினர் மறுத்து வருகின்றனர். இது மனிதாபிமானமற்ற செயல் என்பதோடு, சிறைக் கைதிகளின் உரிமைகளை மறுக்கும் செயலாகும்.
சிறைக் கைதிகள் குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு என்பதும், சிறைச்சாலைகள் குற்றவாளிகளைத் திருத்தும் இடமாக இருக்க வேண்டும் என்பதும் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் உள்ளிட்ட மனித உரிமையில் அக்கறையுடைய அனைவரின் கருத்தாகும்.
எனவே, புதுச்சேரி அரசு விசாரணைக் கைதிகள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து ஓர் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகளை உடனடியாக வெளி மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.
Leave a Reply