மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கலந்தாய்வுக் கூட்டம் 25.3.2013 திங்களன்று, மாலை 6 மணியளவில், ஜே.வி.ஆர். அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். இக்கூட்டத்தில் அமைப்புக்குழு உறுப்பினர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:
1. ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டு வந்த தீர்மானம் ஈழத் தமிழர்களின் விடிவுக்கு எந்த வகையிலும் உதவாது. எனவே, இலங்கையில் நடந்த இனப் படுகொலை குறித்து சுதந்திரமான சர்வதேச பொது விசாரணை கோரி இந்திய அரசு ஐ.நா. அவையில் தனியாக தீர்மானம் ஒன்றை கொண்டு வர வேண்டும். அரசியல் தீர்வு காணும் வகையில் ஈழத் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
2. காவிரி நதி நீர் ஆணையத்தின் இறுதி தீர்ப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ள நிலையில், காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி கண்காணிப்புக் குழு அமைக்க மத்திய அரசை புதுவை அரசு வலியுறுத்த வேண்டும்.
3. அடித்தட்டு மக்களுக்கு ஜனநாயகம் சென்றடையும் வகையில் உள்ளாட்சி தேர்தலை புதுவை அரசு உடனடியாக நடத்த வேண்டும்.
4. புதுச்சேரியில் காவல்நிலையங்களில் புகார் கொடுத்தால் அதற்கான ரசீது தரப்படுவதில்லை. இதுகுறித்து டி.ஐ.ஜி. சுக்லா அவர்கள் காவல்நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியும் பயனில்லை. எனவே, புதுவை அரசு புகார் அளிப்பவர்களுக்கு ரசீது தர அனைத்து காவல்நிலையங்களுக்கும் உரிய உத்தரவுப் பிறப்பிக்க வேண்டும்.
5. தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின்படி புதுவை சிறையில் 7 ஆண்டுகள் கழித்த ஆயுள் தண்டனைக் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த ஆட்சியில் 7 ஆண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் தண்டனைக் கைதிகள் 4 ஆயிரத்து 23 பேர் விடுதலை செய்யப்பட்டனர் என்பதை அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.
6. தனியார் பள்ளிகள் நன்கொடை என்ற பெயரில் லட்சக் கணக்கான ரூபாய் கொள்ளையடிப்பதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றை புதுவை அரசு உடனடியாக இயற்ற வேண்டும். நன்கொடை என்ற பெயரில் சட்டத்திற்குப் புறம்பாக பணம் வசூலிக்கும் பள்ளி நிர்வாகத்தினர் மீது கிரிமினல் வழக்குத் தொடரவும், தண்டனை வழங்கிடவும் இச்சட்டத்தில் வழிவகை செய்ய வேண்டும்.
7. மத்திய அரசு கொண்டு வந்த கல்வி உரிமைச் சட்டம் மற்றும் விதிகளின்படி அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் சமூக ஆர்வலர்கள் அடங்கிய ‘பள்ளி நிர்வாகக் குழு’ அமைக்க வேண்டும். ஆனால், பெரும்பான்மையான பள்ளிகளில் இக்குழு அமைக்கப்படவில்லை. ஒரு சில பள்ளிகளில் இக்குழு அமைக்கப்பட்டிருந்தாலும் அவை சரியாக செயல்படுவதில்லை. எனவே, புதுவை அரசு கல்வி உரிமைச் சட்டம் மற்றும் விதிகளை முழு வீச்சில் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
8. புதுச்சேரி – கடலூர், புதுச்சேரி – விழுப்புரம் ஆகிய வழித்தடங்களில் பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக பயணிகளை ஏற்றி செல்வதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, புதுவை அரசு பி.ஆர்.டி.சி. மூலம் இவ்வழித் தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
9. ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தப்பட்டிருந்தாலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்காமல் அதைவிட பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனைத் தடுக்கும் வகையில் போக்குவரத்து துறையும், காவல்துறையும் இணைந்து அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10. மக்கள் உரிமைக் கூட்டமைப்புக்கு புதிய அமைப்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் மார்கண்டன், காளிதாஸ், கலைவாணன், சின்னப்பா, பொன்னுசாமி, சந்திரகுமார், முருகன், ராஜேந்திரன், கண்ணன், பாலாஜி, கஸ்தூரி, இந்திராணி, பஞ்சவர்ணம், ராணி, சுப்புலட்சுமி ஆகியோர் இடம்பெறுவர்.
Leave a Reply